ஆதாரமின்றி பிரபல நடிகை குறித்து பேசிய ஏவி ராஜுவை கைது செய்க! இயக்குநர் சேரன் கண்டனம்..
பிரபல நடிகை குறித்து எந்த அடிப்படை ஆதாரமும் இன்றி பேசிய அதிமுக முன்னாள் நிர்வாகி மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென இயக்குநர் சேரன் கோரிக்கை விடுத்திருக்கிறார்.
சேலம் மாவட்ட மேற்கு ஒன்றிய அ.தி.மு.க. செயலாளராக பதவி வகித்து வந்த ஏவி ராஜு அண்மையில், அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மீதும், அவரது ஆதரவாளரான சேலம் மாநகர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் வெங்கடாசலம் மீதும் பல்வேறு முரண்பட்ட குற்றச்சாட்டை முன்வைத்திருந்தார். அதில் அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி வெங்கடாசலம் பண மோசடி செய்ததாகவும், இது குறித்து எடப்பாடி பழனிசாமி உரிய நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் சாடியிருந்தார்.
இதற்கு மறுப்பு தெரிவித்த எடப்பாடி பழனிசாமி, கட்சியின் பெயருக்கு கலங்கம் ஏற்படுத்தியதாகவும், விதிகளை மீறி முரண்பட்ட கருத்துகளை கூறியதாகவும் குறிப்பிட்டு ஏவி ராஜுவை அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் உட்பட அவர் வகித்த அனைத்து பதவியிலிருந்து நீக்கி உத்தரவிட்டார். இந்நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய ஏவி ராஜு, வெங்கடாசலத்தை பிரபல நடிகையுடன் குறிப்பிட்டு, கூவத்தூரில் நடந்த சில நிகழ்வுகள் தொடர்பாக பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள இயக்குநர் சேரன், தனது எக்ஸ் தளப் பக்கத்தில், வன்மையாக கண்டிக்கிறேன்.. எந்த ஆதாரமுமின்றி பொது வெளியில் திரைத்துறையினர் பற்றி பெயர் சொல்லி அவதூறு கிளப்பிய இவரை சட்டமும் காவல்துறையும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். நடிகர் சங்கம் இதற்கு தகுந்த பதிலும் நடவடிக்கையும் எடுக்கும் என நம்புகிறேன். நடிகர் சங்கம் இதற்கு தகுந்த பதிலும் நடவடிக்கையும் எடுக்கும் என நம்புகிறேன்" என பதிவிட்டுள்ளார்.
What's Your Reaction?