உயர்மின் கோபுரம் அமைக்க கையகப்படுத்திய நிலங்கள்... உரிய இழப்பீடு வழங்கக்கோரி 4 விவசாயிகள் உண்ணாவிரதம்... விவசாயிகள் சங்கம் எச்சரிக்கை...
கரூர் மாவட்டத்தில் உயர் அழுத்த மின் கோபுரம் அமைக்க, கையப்படுத்திய நிலத்திற்கு உரிய இழப்பீட்டை வழங்காவிட்டால், ஆட்சியர் அலுவலகம் முன்பு உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபடப் போவதாக தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
கரூர் மாவட்டம் ஆண்டி செட்டிபாளையம் முதல் தென்னிலை கரை தோட்டம் வரை, உயர் மின் கோபுரம் அமைப்பதற்காக நிலம் கையகப்படுத்தப்பட்டது. இந்த நிலையில் கையகப்படுத்தப்பட்ட நிலங்களுக்கு உரிய நில மதிப்பு நிர்ணயம் செய்யப்படவில்லை என விவசாயிகள் குற்றம் சாட்டியுள்ளனர். மேலும், அந்த நிலங்களில் இருந்த கிணறுகள், பனை, வேம்பு, முருங்கை உள்ளிட்ட பல்வேறு மரங்களுக்கும் இழப்பீடு வழங்கப்படவில்லை எனவும் தெரிவித்துள்ளனர்.
முறையாக இழப்பீடு வழங்கப்படாமல், உயர்மின் கோபுரங்கள் அமைக்கப்பட்டதை கண்டித்து, பாதிக்கப்பட்ட விவசாயிகளான ராஜா, சின்னச்சாமி, ராமகிருஷ்ணன், ரவி ஆகிய 4 பேரும் கடந்த ஏப்ரல் 21ஆம் தேதி காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கினர். அவர்களுக்கு ஆதரவாக விவசாய அமைப்பினர், தன்னார்வலர்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டுள்ளனர்.
இப்பிரச்னை தொடர்பாக பல்வேறு கட்ட போராட்டங்கள் நடைபெற்ற நிலையில், மாவட்ட நிர்வாகம் தலையிட்டு பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க முன்வர வேண்டும் என வலியுறுத்தப்பட்டன. அப்போது, வருவாய் துறை சார்பில் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளிடம் பேச்சு வார்த்தை நடத்தப்பட்ட நிலையில், பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் கிடைக்க நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது.
இந்நிலையில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் சார்பில், கரூர் வருவாய் கோட்டாட்சியர் முகமது பைசிலை, தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க தலைவர் ஈசன் முருகசாமி தனது ஆதரவாளர்களுடன் சந்தித்து பேசினார். இதனையடுத்து, செய்தியாளர்களிடம் பேசிய ஈசன் முருகசாமி, 10 நாட்களாக விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஆனால், மின்சாரத்துறையோ, வனத்துறை அதிகாரிகளோ பேச்சுவார்த்தை நடத்த முன்வரவில்லை என குற்றம் சாட்டினார். இதே நிலை நீடித்தால் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக விவசாயிகளை திரட்டி, உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக அவர் தெரிவித்தார்.
What's Your Reaction?