தவெகவின் முக்கிய நாள்.. விஜய்யை குறிப்பிட்டு விசிக பொதுச்செயலாளர் ஆதவ் கடைசி நிமிடத்தில் போட்ட பதிவு
கொள்கை ரீதியான அரசியல் களத்தில் முக்கிய பங்காற்றிடவும், தவெக மாநாடு வெற்றி பெற வேண்டும் எனவும் சகோதரர் விஜய்க்கு வாழ்த்தி வரவேற்கிறேன் என தெரிவித்துள்ளார் விசிக துணை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா.
கொள்கை ரீதியான அரசியல் களத்தில் முக்கிய பங்காற்றிடவும், தவெக மாநாடு வெற்றி பெற வேண்டும் எனவும் சகோதரர் விஜய்க்கு வாழ்த்தி வரவேற்கிறேன் என தெரிவித்துள்ளார் விசிக துணை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா.
தமிழ் திரையுலகில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக உள்ள நடிகர் விஜய் கடந்த பிப்ரவரி மாதம் தமிழக வெற்றிக் கழகம் என்ற புதிய அரசியல் கட்சியை தொடங்கினார். இதையடுத்து கட்சியின் முதல் மாநாட்டை அறிவித்தார்.
அதன்படி, அந்த மாநாடு கொள்கை விளக்கத் திருவிழா என்று பெயரில் விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அடுத்த வி.சாலையில் இன்று நடைபெறுகிறது.
இதற்காக பிரமாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மாநாட்டில் அதிகளவு தொண்டர்கள் கூடுவதால் தொழில்நுட்ப சாதனங்கள் இயங்குவதற்கு ஏற்ற வகையில் தற்காலிக செல்போன் டவர் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.
இதுதவிர 700-க்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமராக்கள், 15 ஆயிரம் மின்விளக்குகள், வெகுதொலைவில் இருந்து மாநாட்டை பார்க்கும் வகையில் 600 பெரிய டிஜிட்டல் திரைகள் உள்ளிட்டவை அமைக்கப்பட்டுள்ளன.
திடலைச் சுற்றி 100-க்கும் மேற்பட்ட குடிநீர் தொட்டிகள், 350 நடமாடும் கழிவறைகள் அமைக்கப்பட்டுள்ளன. இதனிடையே மாநாட்டு ஏற்பாடுகளை நேற்று மாலை விஜய் நேரில் சென்று ஆய்வு செய்தார்.
இந்த மாநாடு இன்று மாலை 4 மணியளவில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதில் முதலாவதாக மாநாட்டு மேடைக்கு வரும் விஜய் அங்கிருந்தபடி, ரிமோட் மூலமாக 100 அடி உயர கொடிக்கம்பத்தில் கட்சி கொடியை ஏற்றி வைக்க உள்ளார்.
மாநாட்டுக்கு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து மட்டுமின்றி, புதுச்சேரி, கேரளா, ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களில் இருந்து தொண்டர்கள், நிர்வாகிகள், ரசிகர், ரசிகைகள் வந்த வண்ணம் உள்ளனர்.
இந்நிலையில் தவெக தலைவர் விஜய்க்கு எக்ஸ் தளத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார் விசிக துணை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா. இதுகுறித்து அவர் பதிவிட்டுள்ள எக்ஸ் பதிவில், "தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் அக்கட்சியின் முதல் மாநில மாநாடு அதன் தலைவர் சகோதரர் திரு. விஜய் தலைமையில் இன்று விக்கிரவாண்டியில் நடக்க இருக்கிறது.
மாநாட்டு மேடையைச் சுற்றி அமைக்கப்பட்டுள்ள முகப்புகளில் தமிழ்நாடு அரசியலின் கொள்கை ஆசான் தந்தை பெரியார், இந்திய அரசியலின் அடையாளம் புரட்சியாளர் அம்பேத்கர், மக்கள் தலைவர் பெருந்தலைவர் காமராசர், அடிமைத்தனத்தை எதிர்த்த வீர பெண் களப்போராளிகள் வேலுநாட்சியார், அஞ்சலை அம்மாள் ஆகியோரின் படங்களை வைத்து தமிழ் மக்களின் பொது மனநிலையையும், உறுதியான இலட்சிய அரசியலையும் வெளிச்சம் போட்டுக் காட்டியிருக்கிறார்.
தொடர்ந்து, தனது அரசியல் பயணத்தை இதன் வழி அமைத்துக் கொள்வதன் மூலம் கொள்கை ரீதியான அரசியல் களத்தில் முக்கிய பங்காற்றிடவும், அவரது இந்த மாநாடு வெற்றி பெற வேண்டும் எனவும் சகோதரர் திரு. விஜய் அவர்களை வாழ்த்தி வரவேற்கிறேன்" என அவர் தெரிவித்துள்ளார்.
What's Your Reaction?