மலைப்பகுதிகளில் இ-பாஸ் நடைமுறை -சென்னை உயர்நீதிமன்றம் அதிருப்தி 

 நீதிமன்றத்திற்கு  தவறான தகவல்களை அளிக்க வேண்டாம் என்றும் இ-பாஸ் நடைமுறையாக அமல்படுத்துவது தரமான சுற்றுலாவிற்கு வழிவகுக்கும் என நீதிபதிகள் கருத்து

Oct 14, 2024 - 17:40
மலைப்பகுதிகளில் இ-பாஸ் நடைமுறை -சென்னை உயர்நீதிமன்றம் அதிருப்தி 

நீதிமன்ற உத்தரவின்படி ஊட்டி, கொடைக்கானல் போன்ற மலைப்பகுதிகளில் இ-பாஸ் நடைமுறையை முறையாக அமல்படுத்தப் படவில்லை என சென்னை உயர் நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது.

சுற்றுச்சூழல் பாதுகாப்பு தொடர்பான வழக்குகளை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம் ஊட்டி, கொடைக்கானல் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் சுற்றுலா பயணிகளுக்கு இ-பாஸ் முறையை  அமல்படுத்த வேண்டும் என, நீலகிரி, திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர்களுக்கு கடந்த ஏப்ரல் மாதம் உத்தரவிட்டிருந்தது.இந்த இ-பாஸ் வழங்கும் முன், வாகனங்களில் வருவோரிடம், என்ன மாதிரியான வாகனம், எத்தனை பேர் வருகின்றனர், ஒரு நாள் சுற்றுலாவா அல்லது தொடர்ந்து தங்குவார்களா என்பன உள்ளிட்ட விவரங்களைப் பெற வேண்டும் எனவும் இரு மாவட்ட ஆட்சியர்களுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டிருந்தனர்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் சதிஷ்குமார், பரதசக்கரவர்த்தி அமர்வு ஊட்டி, கொடைக்கானல் போன்ற பகுதிகளுக்கு சுற்றுலா செல்ல இ-பாஸ் நடைமுறையை முறையாக அமல்படுத்த வேண்டும் என்ற நீதிமன்ற உத்தரவை முறையாக அமல்படுத்தவில்லை என அதிருப்தி தெரிவித்தனர். இ-பாஸ் தொடர்பாக எந்த சோதனை செய்யப்படுவதில்லை என குறிப்பிட்ட நீதிபதிகள் நீதிமன்ற உத்தரவுகள் காகிதத்தில் மட்டுமே இருப்பதாக தெரிவித்தனர்.அப்போது அரசு தரப்பில், மலைவாழ் ஸ்தலங்களில் இ-பாஸ் நடைமுறை முறையாக பின்பற்ற தேவையான நடவடிக்கைகள் எடுத்து வருவதாக தெரிவிக்கப்பட்டது.

இதை ஏற்க மறுத்த நீதிபதிகள்,  நீதிமன்றத்திற்கு  தவறான தகவல்களை அளிக்க வேண்டாம் என்றும் இ-பாஸ் நடைமுறையாக அமல்படுத்துவது தரமான சுற்றுலாவிற்கு வழிவகுக்கும் என தெரிவித்து  நீதிமன்ற உத்தரவின்படி ஊட்டி, கொடைக்கானல் போன்ற சுற்றுலா பகுதிகளுக்கு செல்ல இ-பாஸ் நடைமுறையை முறையாக அமல்படுத்தியது குறித்து நீலகிரி, திண்டுக்கல மாவட்ட ஆட்சியர்கள் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டனர்.மேலும் இ-பாஸ் பெற விண்ணப்பவர்களிடம் எப்போது வருகிறார்கள், எங்கு தங்க இருக்கிறார்கள், எத்தனை நாட்கள் தங்குவார்கள் என்ற விவரங்களை கண்டிப்பாக பெற வேண்டும் என அறிவுறுத்தி வழக்கின் விசாரணையை நவம்பர் 4ம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow