கணவர் உயிருக்கு ஆபத்து.. கண்ணீர் விட்ட மனைவி.. சென்னைக்கு அழைத்து வரப்பட்ட பெலிக்ஸ் ஜெரால்டு

பெண் காவல்துறையினரை அவதூறாக பேசிய வழக்கில் கைது செய்யப்பட்ட சவுக்கு சங்கரை பேட்டி எடுத்த ரெட்பிக்ஸ் சேனலின் தலைமை நிர்வாகி பெலிக்ஸ் ஜெரால்டு, டெல்லியிலிருந்து ரயில் மூலம் சென்னைக்கு அழைத்து வரப்பட்டார்.

May 13, 2024 - 11:05
கணவர் உயிருக்கு ஆபத்து.. கண்ணீர் விட்ட மனைவி.. சென்னைக்கு அழைத்து வரப்பட்ட பெலிக்ஸ் ஜெரால்டு

சவுக்கு மீடியா என்ற யூடியூப் சேனல் மூலம், சவுக்கு சங்கர் அரசியல் நிகழ்வுகள், அரசியல்வாதிகள் மற்றும் அரசு அதிகாரிகள் குறித்து அவ்வப்போது கருத்து தெரிவித்து வருகிறார். மேலும், பிரபல யூடியூப் சேனல்களுக்கு நேர்காணல் மூலம் பல கருத்துகளை வெளியிட்டு வருகிறார். இந்நிலையில், அண்மையில் நேர்காணல் ஒன்றில் பெண் காவலர்கள் குறித்து அவதூறு பரப்பும் வகையில் கருத்து தெரிவித்தார். 

இது சர்ச்சையான நிலையில், காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து தேனியில் வைத்து அவரைக் கைது செய்தனர். மேலும், அவர் வீட்டில் பரிசோதனை நடத்தியதில் கஞ்சா இருந்தது தெரிய வந்தது. இதையடுத்து கஞ்சா வைத்திருந்தது உட்பட பல வழக்குகள் அவர்மீது போடப்பட்டுள்ளது. இதன் விசாரணைக்கு சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட சவுக்கு சங்கர், கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவர் மீது குண்டர் சட்டமும் பாய்ந்துள்ளது.

பெலிக்ஸ் ஜெரால்டுதான் முதல் குற்றவாளி : 

இந்நிலையில், சவுக்கு சங்கர் பேசிய நேர்காணலை ஒளிபரப்பிய ரெட்பிக்ஸ் யூடிபூப் சேனலின் தலைமை நிர்வாகி பெலிக்ஸ் ஜெரால்டுக்கும் கோவை போலீசார் சம்மன் அனுப்பினர். இதையடுத்து, இந்த வழக்கில் முன் ஜாமின் கேட்டு, பெலிக்ஸ் ஜெரால்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். அதை விசாரித்த நீதிபதி குமரேஷ் பாபு, யூடியூப் சேனல்கள் பொறுப்பெற்ற வகையில் நடந்து கொண்டு சமுதாயத்தில் அமைதியின்மையை ஏற்படுத்துவதாக குறிப்பிட்டார். மேலும், இந்த வழக்கில் அநாகரீகமாக விவாதம் செய்த ரெட்பிக்ஸ் யூடியூப் சேனலின் தலைமை நிர்வாகி பெலிக்ஸ் ஜெரால்டை முதல் குற்றவாளியாக சேர்த்திருக்க வேண்டும் என்று தனது கருத்தை பதிவு செய்தார்.

டெல்லியில் பெலிக்ஸ் ஜெரால்டு கைது : 

இதையடுத்து டெல்லியில் தனியார் விடுதியில் தங்கியிருந்த பெலிக்ஸ் ஜெரால்டை, திருச்சி தனிப்படை காவலர்கள் கைது செய்தனர். அதன் பின், அவர் கைது செய்யப்பட்டது குறித்து அவரது மனைவி வீடியோ ஒன்றை வெளியிட்டார். அதில், என் கணவர் உயிருக்கு ஆபத்து இருக்கிறது. அவரை விரைவில் சென்னை அழைத்து வர வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தார்.

சென்னை அழைத்து வரப்பட்டார் பெலிக்ஸ் : 

இந்நிலையில், டெல்லியில் கைது செய்யப்பட்ட பெலிக்ஸ் ஜெரால்டு, ரயில் மூலம் சென்னை வரவழைக்கப்பட்டார். சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் வந்து இறங்கிய அவரை, பலத்த பாதுகாப்புடன் திருச்சி காவல்துறையினர் அழைத்து வந்தனர். அவரை இன்று இரவு நீதிமன்ற காவலுக்கு உட்படுத்த காவல்துறையினர் முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow