ஓட்டு போடாமல் சென்னைவாசிகள் எஸ்கேப் ஆக முடியாது.. களத்தில் இறங்கிய தேர்தல் ஆணையம்

Apr 8, 2024 - 13:12
ஓட்டு போடாமல் சென்னைவாசிகள் எஸ்கேப் ஆக முடியாது.. களத்தில் இறங்கிய தேர்தல் ஆணையம்

சென்னையில் கடந்த தேர்தலை விட 10 சதவீதம் வாக்குப்பதிவை அதிகரிக்க இலக்கு நிர்ணயித்ததை அடுத்து, தேர்தல் ஆணையம் விழிப்புணர்வு பிரச்சாரத்தில் இறங்கியுள்ளது.

கடந்த தேர்தல்களில் குறைவான வாக்குப்பதிவு நடைபெற்ற நகரங்களைச் சார்ந்த மாவட்ட தேர்தல் அதிகாரிகள், மாநில தலைமை தேர்தல் அதிகாரிகளுடன் வாக்குப்பதிவை அதிகரிப்பது தொடர்பாக தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ்குமார் கடந்த சில தினங்களுக்கு முன்பு ஆலோசனை நடத்தினார்.

மக்களவை அல்லது சட்டப்பேரவை தேர்தல்கள் முடிந்ததும், தேர்தலில் பதிவான வாக்கு சதவீதம் அடிப்படையில், குறைவான வாக்கு பதிவு நடைபெற்ற தொகுதிகளில், தேர்தல் ஆணையம் ஆய்வுகளை மேற்கொள்ளும். அதன் அடிப்படையில் அடுத்து வரக்கூடிய தேர்தலில் வாக்குப்பதிவை அதிகரிக்க தேவையான விழிப்புணர்வு ஏற்படுத்துதல், பொதுமக்களை அச்சமின்றி வாக்களிக்கச் செய்வதற்கான நடவடிக்கைகள் எடுப்பது போன்ற பணிகளை தேர்தல் ஆணையம் மேற்கொள்வது இயல்பாகும்.

இந்நிலையில், இந்தத் தேர்தலில், வாக்குப்பதிவு குறைந்த நகரங்கள் மீது தேர்தல் ஆணையம் கவனம் செலுத்தி வருகிறது. இதுதொடர்பாக, சென்னை, பெங்களூரு, டெல்லி, மும்பை, ஐதராபாத், அகமதாபாத், புனே, தானே, நாக்பூர், பாட்னா, லக்னோ, கான்பூர் நகர தேர்தல் அதிகாரிகள், அந்தந்த மாநில தலைமை தேர்தல் அதிகாரிகளுடன் தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ்குமார் ஆலோசனை நடத்தினார்.

அந்தப் பட்டியல் படி, முதலில் நகரங்கள் வாரியாக அந்தந்த நகர தேர்தல் அதிகாரிகளிடம் வாக்குப்பதிவை அதிகரிக்க எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து கேட்டறிந்தார். இதில் சென்னை மாவட்ட தேர்தல் அதிகாரி ஜெ.ராதாகிருஷ்ணன் பங்கேற்று சென்னையில் எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து விளக்கினார். அதன்பின், காணொலி வாயிலாக பங்கேற்ற தலைமை தேர்தல் அதிகாரிகளுக்கு பல்வேறு அறிவுறுத்தல்களை வழங்கினார்.

சென்னையைப் பொருத்தவரையில், கடந்த தேர்தலில் குறைவான வாக்குப்பதிவு நடைபெற்ற 3761 வாக்குச்சாவடிகளில் 10% வரை வாக்குப்பதிவு அதிகரிக்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. சென்னை மாவட்டத்தின், அனைத்து சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் வாக்காளர் விழிப்புணர்வு பணிகள் கடந்த சில தினங்களாகவே நடைபெற்று வருகின்றன. அந்த வகையில், வாக்குசதவீதம் குறைவான தொகுதிகளில் மாநகராட்சி ஊழியர்கள் வீடு வீடாகச் சென்று ஏன் வாக்களிக்க வரவில்லை என்பதற்கான காரணங்களை கேட்கின்றனர்.

பொதுமக்கள் அடிப்படை வசதிகள் குறித்த குறைகளை கூறினால், அவை உடனடியாக அதிகாரிகள் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டு தீர்வு காணப்படுகிறது. பணி காரணமாக வாக்களிக்கச் செல்லவில்லை என்று கூறுபவர்களிடம் வாக்களிப்பதன் அவசியத்தை உணர்த்தி, வாக்களிப்பது தொடர்பான உறுதிமொழியை ஏற்கச்செய்கின்றனர். இதுதவிர, பொதுமக்கள் அதிகம் கூடும் பகுதிகளில் தினசரி வாக்காளர் விழிப்புணர்வு பிரச்சாரப்படங்கள் திரையிடப்படுவதுடன், துண்டு பிரசுரங்கள் போன்றவை மூலமும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. 

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில், சென்னையில் 29 வாக்குச்சாவடிகளில் 40 சதவீதத்திற்கும் குறைவாகவும், 224 வாக்குச்சாவடிகளில் 40 முதல் 50 சதவீத வாக்குகளும், 1580 வாக்குச்சாவடிகளில் 50 முதல் 60 சதவீத வாக்குகளும், 1537 வாக்குச்சாவடிகளில் 60 முதல் 70 சதவீத வாக்குகளும், 371 வாக்குச்சாவடிகளில் 70 சதவீதத்திற்கு மேல் வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow