பணப்பட்டுவாடா புகார்..? அதிமுக வேட்பாளரை சுத்துப்போட்ட ஐடி.. ராமநாதபுரத்தில் அதிரடி சோதனை
ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் ஜெயபெருமாள், அக்கட்சி நிர்வாகிக்கு சொந்தமான விடுதியில் தங்கியிருந்த நிலையில், அங்கு வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர்.
விருதுநகர் மாவட்டம் பூலாங்கால் கிராமத்தைச் சேர்ந்த அதிமுக மாவட்ட பிரதிநிதி முகமது யாசர் அராபத்(43) என்பவருக்கு, ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடியில் சொந்தமாக விடுதி ஒன்று உள்ளது. அந்த தங்கும் விடுதியில் இன்று (12-04-2024) வருமானவரித் துறையினர், தேர்தல் பறக்கும் படை அலுவலர்களுடன் இணைந்து சோதனை நடத்தினர். ஆனால் சோதனையில் பணம் ஏதும் கைப்பற்றப்படவில்லை என கூறப்பட்டாலும், கடந்த இரண்டு நாட்களாக அங்கு வந்த நபர்கள் குறித்த சிசிடிவி காட்சிகளை அவர்கள் ஆய்வு செய்துவிட்டு திரும்பிச் சென்றனர்.
மேலும் பூலாங்கல் கிராமத்தில் உள்ள முகமது யாசர் அராபத்தின் வீட்டிலும் இருதரப்பு அதிகாரிகளும் இணைந்து சோதனை மேற்கொண்டனர். அந்த சோதனையிலும் பணம் எதுவும் கைப்பற்றப்பவில்லை என தெரிகிறது.
கடந்த 10-ம் தேதி சாயல்குடி பகுதிக்கு தேர்தல் பிரசாரத்திற்கு வந்த அதிமுக வேட்பாளர் ஜெயபெருமாள் பிரசாரம் முடிந்ததும் அந்த விடுதியில் தங்கியிருந்தார். அப்போது வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்வதற்காக, அந்தப் பகுதிகளில் உள்ள கட்சி நிர்வாகிகளுக்கு விடுதியில் வைத்து பணத்தை பிரித்துக் கொடுத்ததாக வந்த புகாரை அடுத்து சோதனை நடத்தப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
What's Your Reaction?