திமுக அரசைக் கண்டித்து பாமக 3 நகரங்களில் பொதுக்கூட்டம் - ராமதாஸ் அறிவிப்பு

பல்வேறு காரணங்களுக்காக திமுக அரசினைக் கண்டித்து சிதம்பரம் / விருதாச்சலம், திண்டிவனம், சேலம் ஆகிய 3 நகரங்களில் பொதுக்கூட்டங்கள் நடத்தப்படும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் அறிவித்துள்ளார். 

Oct 12, 2024 - 18:12
திமுக அரசைக் கண்டித்து பாமக 3 நகரங்களில் பொதுக்கூட்டம் - ராமதாஸ் அறிவிப்பு
ramdoss

கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாத திமுக அரசினைக் கண்டித்து பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் பொதுக்கூட்டங்கள் நடத்தப்படும் என்றும் இக்கூட்டங்களில் பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாஸ் ஆகியோர் உரை நிகழ்த்தவிருக்கின்றனர் என்கிற அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. 

இது தொடர்பாக பாமக நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் அறிவிப்பில்... 

‘நாங்கள் ஆட்சிக்கு வந்தால் தமிழ்நாட்டில் தேனாறும், பாலாறும் ஓடும் என்று கூறி, பொய்யான வாக்குறுதிகளால் மக்களை ஏமாற்றி ஆட்சிக்கு வந்த திமுக, மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளில் 450க்கும் கூடுதலான வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. தமிழ்நாட்டில் ஐந்தரை லட்சம் இளைஞர்களுக்கு அரசு வேலை வழங்கப் படும் என்று அறிவித்த திமுக அரசு, ஓய்வுபெற்றவர்களால் ஏற்பட்ட காலியிடங்களைக் கூட நிரப்ப மறுக்கிறது. குத்தகை முறை பணி நியமனங்களின் மூலம் இளைஞர்களை அடிமாட்டு ஊதியத்திற்கு பணியமர்த்துகிறது. தனியார் நிறுவனங்களில் உள்ளூர் இளைஞர்களுக்கு 75% இட ஒதுக்கீடு வழங்கப்படும் என்று வாக்குறுதி அளித்த திமுக, பன்னாட்டு நிறுவனங்களுக்கு அஞ்சி, உள்ளூர் மக்களுக்கு வேலை உத்தரவாதத்தை மறுக்கிறது.

தமிழ்நாட்டில் வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் ஆணையிட்டு,  இரண்டரை ஆண்டுகளுக்கு மேலாகிவிட்ட நிலையில், இன்று வரை அதை நிறைவேற்ற அரசு மறுக்கிறது. ஏற்கனவே நடைமுறையில் உள்ள 69% இட ஒதுக்கீட்டைப் பாதுகாக்க சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்ற கோரிக்கையையும் மூன்றரை ஆண்டுகளாக செயல்படுத்த திமுக அரசு மறுக்கிறது.

திமுக ஆட்சிக்கு வந்த பிறகு மூன்று தவணைகளில் ரூ.40 ஆயிரம் கோடிக்கும் கூடுதலான மின்கட்டணத்தை உயர்த்தி ஏழை, எளிய மக்களை திமுக அரசு வாட்டி வதைக்கிறது. வீட்டு வரி, குடிநீர்வரி ஆகியவற்றை ஒரே முறையில் 150%க்கும் கூடுதலாக உயர்த்திய திமுக அரசு, அது போதாதென்று ஒவ்வொரு ஆண்டும் 6% உயர்த்தப்படும் என்று அறிவித்திருக்கிறது. பத்திரப்பதிவு கட்டணம், வாகனவரி என எந்தெந்த வகைகளில் எல்லாம் மக்களிடமிருந்து பணத்தை பறிக்க முடியுமோ? அனைத்து வழிகளிலும் மக்களிடம் பகல் கொள்ளை நடத்துகிறது. திமுகவுக்கு வாக்களித்த அனைவரும் தங்களின் செயலுக்கு வருந்தி பரிகாரம் தேட துடிக்கின்றனர்.

அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் ஏழைகள் மற்றும் நடுத்தர மக்களுக்கு எட்டாத உயரத்திற்கு  சென்று விட்டன. ஒரு கிலோ ரூ.40 முதல் ரூ.50 வரை விற்கப்பட்ட அரிசி, இப்போது 80 ரூபாய்க்கும் அதிகமாக விற்பனை செய்யப்படுகிறது. உளுந்து முதல் துவரம் பருப்பு வரை அன்றாடப் பயன்பாட்டுக்குத் தேவையான பருப்பு வகைகளின் விலைகள் கிலோ 200 ரூபாயை கடந்து விட்டன. தக்காளியின் விலை  கிலோ 120 ரூபாயையும், வெங்காயத்தின் விலை கிலோ 100 ரூபாயையும் தாண்டிவிட்டன. அதனால் மக்கள் வாழ முடியாத நிலைக்கு தள்ளப்பட்டிருக்கின்றனர். அனைத்து நிலையிலும் ஆட்சிக்கு எதிரான  அனல் தகிக்கிறது.

இன்னொருபுறம் நெல், கரும்பு, காய்கறிகள் என எந்த வேளாண் விளைபொருள்களுக்கும் உரிய விலை கிடைக்கவில்லை. அரசு அலுவலகங்களில் ஊழல் தலைவிரித்தாடுகிறது. பல இடங்களில் சாலைகள் பாய் போல சுருட்டி வீசும் அளவுக்குத் தான் தரமாக உள்ளன. கட்டி திறப்பு விழா நடத்தப்பட்டு 6 மாதங்கள் கூட ஆகாத அரசு மருத்துவமனைகளின் மேற்கூறைப்பூச்சு பெயர்ந்து விழுந்து நோயாளிகள் அலறியடித்து ஓடும் அவலங்கள் தினமும் அரங்கேறிக் கொண்டு தான் இருக்கின்றன. திமுக அரசு என்றாலே அவலம் தான்.

எந்தக் கோணத்தில் பார்த்தாலும் மக்கள் விரோத அரசாக திகழும் திமுக அரசை அகற்ற வேண்டிய நேரம் வந்து விட்டது. திமுக அரசின் அவலங்களையும், மக்கள்விரோதப் போக்கையும் மக்களிடம் கொண்டு செல்ல வேண்டியது பொறுப்புள்ள அரசியல் கட்சிகளின் கடமை. அந்தக் கடமையை நிறைவேற்றும் வகையில் மக்கள்விரோத திமுக அரசுக்கு எதிராக பொதுக்கூட்டங்களை நடத்த பாட்டாளி மக்கள் கட்சி தீர்மானித்து உள்ளது. அதன்படி முதல்கட்டமாக கீழ்க்கண்ட அட்டவணைப்படி 3 பொதுக்கூட்டங்கள் நடத்தப்படுகின்றன.

1. 17.10.2024 (வியாழக்கிழமை) மாலை -  சிதம்பரம்/விருத்தாசலம்
2. 20.10.2024 (ஞாயிற்றுக் கிழமை) மாலை -  திண்டிவனம்
3. 26.10.2024 (சனிக்கிழமை) மாலை -  சேலம்

மேற்கண்ட பொதுக்கூட்டங்களில் பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனரான நானும், பா.ம.க. தலைவர்  மருத்துவர் அன்புமணி இராமதாஸ், கவுரவத் தலைவர் ஜி.கே.மணி, வன்னியர் சங்கத் தலைவர் பு.தா.அருள்மொழி உள்ளிட்டோர் உரையாற்றுகிறோம். இந்தக் கூட்டங்களில் பா.ம.க. மற்றும் அதன் சார்பு, இணை அமைப்புகளின் அனைத்து நிலை நிர்வாகிகளும், பொதுமக்களும் பெருமளவில் கலந்து கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்’ என்று ராமதாஸ் தெரிவித்துள்ளார். 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow