குமரி மருத்துவர் கொலை - தலைமறைவான குற்றவாளி சென்னையில் கைது

சென்னை விரைந்த போலீசார் அங்கு வைத்து சங்கரனை அதிரடியாக கைது செய்து களியக்காவிளை அழைத்து வந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Jan 6, 2024 - 13:08
Jan 6, 2024 - 16:59
குமரி மருத்துவர் கொலை -  தலைமறைவான குற்றவாளி சென்னையில் கைது

களியக்காவிளை அருகே கோழிவிளை சந்திப்பு பகுதியில் உள்ள அரசு டாஸ்மாக் பாரில் பிசியோதெரபிஸ்ட் மருத்துவரை கத்தியால் குத்தி கொலை செய்துவிட்டு சென்னையில் தலைமறைவாக இருந்த குற்றவாளியை 6 நாட்களுக்கு பின் போலீசார் கைது செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குமரி மாவட்டம், தமிழக-கேரள எல்லை பகுதியான களியக்காவிளை அருகே கோழிவிளை சந்திப்பு பகுதியில் அரசு டாஸ்மாக் கடையோடு சேர்ந்து அரசு பாரும் செயல்பட்டு வருகிறது.இந்த பாரில் கடந்த 31 ம் தேதி மாலை வேளையில் கூட்டப்புளி பகுதியை சேர்ந்த பிசியோதெரபிஸ்ட் மருத்துவரான சுனில் 45 என்பவர் அவரது நண்பருடன் மது அருந்துவதற்காக சென்றுள்ளார்.

 அப்போது அங்கு பணியில் இருந்த எஸ.டி மங்காடு பகுதியை சேர்ந்த சங்கரன் என்பவர் சுனில் ஆர்டர் செய்யும் சைடிஸ்களை தாமதமாக எடுத்துவந்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த சுனில் சங்கருடன் தகராறில் ஈடுபட்டுள்ளார்.

 அப்போது தன்னிலை இழந்த சங்கரன் கடையில் இருந்த கத்தியால் சுனிலை அடிவயிற்றில் குத்திவிட்டு தப்பி ஓடி உள்ளார். இதில் சுனில் குடல் வெளியே தள்ளியபடி உயிருக்கு போராடியபடி கீழே விழுந்துள்ளார். அவரை பாரில் இருந்தவர்கள் மீட்டு குழித்துறை அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதனையடுத்து களியக்காவிளை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டு தப்பி ஓடிய சங்கரை தேடி வந்தனர். அவரை குறித்து எந்த தகவலும் கிடைக்காத நிலையில் இரண்டு தனிப்படைகள் அமைத்து தேடி வந்தனர். இந்த நிலையில் சங்கரன் சென்னையில் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அதன்பேரில் சென்னை விரைந்த போலீசார் அங்கு வைத்து சங்கரனை அதிரடியாக கைது செய்து களியக்காவிளை அழைத்து வந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.இறந்துபோன சுனிலுக்கும் திருமணம் ஆகாமல் தாய் தந்தையரை இழந்து தனிமையில் வாழ்ந்து வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow