உறுப்பினர் அட்டை தூக்கி வீசிய முன்னாள் எம்எல்ஏ: அறிவாலயத்தில் பரபரப்பு
திமுக தலைமை அலுவலகத்தில் ஸ்டாலினை சந்திக்க விடாமல் தடுத்ததால், முன்னாள் எம்எல்ஏ ஒருவர் கட்சி உறுப்பினர் அட்டையை தூக்கி வீசிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை தேனாம்பேட்டையில் உள்ள திமுக தலைமை அலுவலகத்திற்கு அக்கட்சியின் தலைவரும், முதல்வருமான ஸ்டாலின் அவ்வப்போது வருகை தருவது வழக்கம். அப்படி அறிவாலயத்திற்கு ஸ்டாலின் வருகை தரும் போதெல்லாம், கட்சி நிர்வாகிகள் மரியாதை நிம்மித்தமாக சந்தித்து வாழ்த்து பெறுவார்கள்.
அந்த வகையில் தேனாம்பேட்டையில் நடைபெற்ற கட்சி நிகழ்ச்சியில் பங்கேற்றுவிட்டு, இன்று ஸ்டாலின் அறிவாலயத்திற்கு வருகை புரிந்து இருந்தார். அப்போது, திமுகவை சேர்ந்த திருத்துறைப்பூண்டி முன்னாள் எம்எல்ஏ ஆடலரசன் இன்று திமுக தலைமையகமான அறிவாலயத்திற்கு வருகை தந்து இருந்தார்.
அவர், முதல்வர் ஸ்டாலினை சந்திக்க வேண்டும் என்று கேட்டு இருந்தார். அங்கிருந்த காவலர்கள் அனுமதி மறுத்ததால், கோபத்தில் தனது கட்சி உறுப்பினர் அட்டையை ஆடலரசன் துாக்கி வீசினார்.
கோபமடைந்த முன்னாள் எம்எல்ஏ ஆடலரசன், நான் பட்டியல் இனத்தை சேர்ந்தவர் என்பதால் அனுமதிக்க மறுக்கிறீர்களா என்று ஆவேசம் அடைந்தார். இந்த தகவல் அப்பகுதியில் பரவிய நிலையில், முதல்வர் ஸ்டாலினுக்கு தகவல் அறிந்து, ஆடலரசனை அழைத்து பேசினார்.
இந்த சந்திப்பின் போது அறிவாலய நிர்வாகிகள் சிலர் மீது ஆடலரசன் புகார் வாசித்தாக தெரிகிறது. மேலும், பொதுவெளியில் இப்படி கோபப்பட்டு கட்சி அவப்பெயரை ஏற்படுத்த வேண்டாம் என ஆடலரசனை ஸ்டாலின் கண்டித்தகாவும் அறிவாலய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
What's Your Reaction?

