திமுக ஆட்சியில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரிப்பது ஏன் தெரியுமா?... நாகையில் ராஜ்நாத் சிங் குற்றச்சாட்டு

"காங்கிரஸ் - திமுக கூட்டணிதான் கச்சத்தீவை இலங்கைக்குத் தாரை வார்த்தது"

Apr 9, 2024 - 07:35
திமுக ஆட்சியில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரிப்பது ஏன் தெரியுமா?... நாகையில் ராஜ்நாத் சிங் குற்றச்சாட்டு

நாடாளுமன்றத்தில் மகளிர் இடஒதுக்கீட்டு மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்த திமுக ஆட்சி செய்வதால்தான் தமிழ்நாட்டில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துள்ளாக பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் குற்றஞ்சாட்டினார்.

நாடாளுமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 19-ம் தேதி நடைபெறவுள்ள நிலையில், தமிழ்நாட்டில் பிரசாரம் மேற்கொள்ள பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் வருகை தந்தார். நாகை நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் ரமேஷ் கோவிந்தை ஆதரித்து திருவாரூரில் அவர் வாக்கு சேகரித்தார். அப்போது, தமிழ்மொழி அழகானது மட்டுமல்ல, மிகவும் தொன்மைவாய்ந்தது என்றும், தமிழ்நாடு, சித்தர்கள், ஆழ்வார்கள், நாயன்மார்கள் வாழ்ந்த பண்பாட்டு வளமும், தெய்வீகமும் நிறைந்தது என்றும் புகழாரம் சூட்டினார். 

கடந்த 10 ஆண்டுகால ஆட்சியில் இந்தியாவில் பெரிய மாற்றங்களை பிரதமர் நரேந்திரமோடி தந்துள்ளார் என்று பேசிய அவர், காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் சிறிய அளவிலான பாதுகாப்புப் பொருள்கள் கூட இறக்குமதி செய்யப்பட்டு வந்த நிலையில், பாஜக ஆட்சியில் சுயசார்பு இந்தியா திட்டம் மூலம் பாதுகாப்பு உபகரணங்களை உற்பத்தி செய்து, ஏற்றுமதி செய்யும் நாடாக இந்தியா உயர்ந்துள்ளது என்று பேசினார்.

பாஜக ஆட்சியில்தான் 22 புதிய எய்ம்ஸ் மருத்துவமனைகள் கட்டப்பட்டன என்று தெரிவித்த அவர், தமிழ்நாட்டிற்கும் விரைவில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டி முடிக்கப்படும் என்று தெரிவித்தார். இந்தியா கூட்டணியினர் தொடர்ந்து இந்து மதத்தை இழிவாகப் பேசி வருகின்றனர் என்று குற்றஞ்சாட்டிய ராஜ்நாத்சிங், தாய் சக்தியையும் பெண் சக்தியையும் அவமதிக்கும் இந்தியா கூட்டணிக்கு தேர்தலில் தக்க பாடம் புகட்ட வேண்டும் என்று வலியுறுத்தினார்.

தொடர்ந்து பேசிய அவர், திமுக கூட்டணி நாடாளுமன்றத்திலேயே மகளிர் இடஒதுக்கீடு மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்தார்கள். அவர்கள் ஆட்சி செய்வதால்தான் தமிழ்நாட்டில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருகின்றன என்று சாடினார். மேலும், காங்கிரஸ் - திமுக கூட்டணிதான் கச்சத்தீவை இலங்கைக்குத் தாரை வார்த்தது என்றும் குற்றஞ்சாட்டினார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow