வார்த்தை ஜாலம்.. நான்காம் ஆண்டு பட்ஜெட் “கானல் நீர் பட்ஜெட்”..! எடப்பாடி பழனிசாமி காட்டம்..!
தமிழ்நாட்டின் வளர்ச்சி விகிதம் இந்த ஆண்டில் 7.96 சதவீதம்தான்
வார்த்தை ஜாலங்களால் மக்களின் கவனத்தை திசைதிருப்பி, மக்களை ஏமாற்றும் விடியா திமுக அரசின் நான்காம் ஆண்டு பட்ஜெட் “கானல் நீர் பட்ஜெட்” என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,“இந்த விடியா திமுக அரசு நான்காவது முறையாக தாக்கல் செய்துள்ள நிதிநிலை அறிக்கையால் மக்களுக்கு எதிர்பார்த்த பயன் இல்லை. 2024-2025 ஆம் ஆண்டு பட்ஜெட்டை வார்த்தை ஜாலங்களால் நிரப்பி, மக்களின் கவனத்தை திசை திருப்பி, ஏமாற்றும் முயற்சியாக இருந்ததே தவிர, எந்த நீண்டகால வளர்ச்சித் திட்டங்களோ, நிதிநிலையை சீராக்கும் முயற்சிகளோ இந்த நிதிநிலை அறிக்கையில் தென்படவில்லை.
அதிமுக அரசு அதிக கடன் வாங்கி, வருவாய் செலவினங்கள் மேற்கொள்வதாக குறை கூறிய திமுக, நாங்கள் ஆட்சிக்கு வந்தால் நிதி, ஆதாரத்தைப் பெருக்கி வருவாய்ப் பற்றாக்குறையை அறவே நீக்கிவிடுவோம் என்று வாய்ஜாலம் பேசி, மக்களை ஏமாற்றி ஆட்சியைப் பிடித்தது விடியா திமுக அரசு. உறுதி அளித்தபடி நிதிநிலையை மேம்படுத்தியதா? என்றால் இல்லை.
முதலமைச்சர் ஸ்டாலின், ஆளுநர் உரையின் மீது பதில் அளிக்கும்போது, தனது அரசின் சாதனைகளாக 10 சாதனைகளைக் குறிப்பிட்டுள்ளார். இவையெல்லாம் தமிழ்நாட்டின் சாதனையாகச் சொல்லலாமே தவிர, விடியா திமுக அரசின் திராவிட மாடல் சாதனை என்று சொல்ல முடியாது.
2021-2022 இல் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 8.7 சதவீதம். ஆனால் தமிழ்நாட்டின் வளர்ச்சி 7.92 சதவீதம்தான். நமக்குப் போட்டியாக உள்ள மாநிலங்களை ஒப்பிடும்போது எப்படி உள்ளது என்பதைப் பார்க்க வேண்டும்.
நம்மைவிட முன்னேற்றம் அடைந்துள்ள மகாராஷ்டிராவின் வளர்ச்சி விகிதம் 10.56 சதவிதம், கர்நாடகாவின் வளர்ச்சி விகிதம் 10.96 சதவீதம். ஆனால் தமிழ்நாட்டின் வளர்ச்சி விகிதம் இந்த ஆண்டில் 7.96 சதவீதம்தான். இந்த மாநிலங்களைக் காட்டிலும் அதிக வளர்ச்சியை நாம் பெற்றால்தான், நமது இரண்டாவது இடத்தைத் தக்க வைத்துக் கொள்ள முடியும்.
இந்த நிதிநிலை அறிக்கையில் இன்னும் பல ஏமாற்றங்கள் உள்ளன.குறிப்பாக, ஒவ்வொரு ஆண்டும் பட்ஜெட் வெளியிடுவதற்கு முன்பே கலால் வரி உயர்வு, சொத்துவரி உயர்வு, அனைத்து பதிவுத்துறை கட்டணங்களும் உயர்வு என்று அரசின் வருவாயை உயர்த்திவிட்டு, பிறகே நிதிநிலையை சட்டப் பேரவையில் தாக்கல் செய்வது இந்த அரசின் சாதனையாக உள்ளது. அதே சாதனையை இந்த ஆண்டும் செய்துள்ளது.
வார்த்தை ஜாலங்களால் மக்களின் கவனத்தை திசை திருப்பி மக்களை ஏமாற்றும் விடியா திமுக அரசின் நான்காம் ஆண்டு பட்ஜெட் “கானல் நீர் பட்ஜெட்” என்பதை மீண்டும் ஒருமுறை அழுத்தம் திருத்தமாகப்பதிவு செய்கிறேன்” என்று எடப்பாடி பழனிசாமி தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
What's Your Reaction?