மாநகராட்சியில் வேலை வாங்கி தருவதாக பணமோசடி: திமுக மாவட்ட செயலாளர் மீது போலீசில் புகார்
சென்னை மாநகராட்சியில் அரசு வேலை வாங்கித்தருவதாக கூறி ரூ. 69 லட்சம் மோசடியில் ஈடுபட்டதாக திமுக மாவட்டச் செயலாளர் சிற்றரசு மீது சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் அக்கட்சி பிரமுகர் புகார் அளித்துள்ளார்.
திமுகவின் தென் சென்னை மேற்கு மாவட்ட செயலாளராகவும், 110 வது வார்டு மாமன்ற உறுப்பினராகவும் இருப்பவர் சிற்றரசு. நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் திமுக சார்பில் அண்ணாநகர் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். இந்த நிலையில் சிற்றரசு மீது மோசடி புகார் ஒன்றை திமுக பிரமுகரே சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.
அவரது பெயர் துளிசிராமன். சென்னை திருவல்லிக்கேணியைச் சேர்ந்த இவர் திமுக மேற்கு மாவட்ட பிரதிநிதியாக உள்ளார். துளசிராமன் அளித்துள்ள புகாரில், "சிற்றரசு தனக்கு நன்கு அறிமுகமுடையவர். சிற்றரசு மாநகராட்சியில் பணிக்குழுத் தலைவராக இருப்பதால் சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட இடங்களில் வேலை வாய்ப்பு இருப்பதாக என்னிடம் கூறினார்.
உனக்குத் தெரிந்த நபர்கள் இருந்தால் கூறு என ஆசை வார்த்தை கூறினார். இதனால் கடந்த 2022 ஆம் ஆண்டு நண்பர்கள் ராஜேஷ், சரவணன், பாலசுப்ரமணியன். சசிகுமார் கௌரி, பாஷித் சித்திக் மற்றும் வெங்கடேசன் ஆகிய நபர்கள் என்னிடம் சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட டிரைவர், அலுவலக உதவியாளர் பணிகளுக்கும் வேலை வாங்கி தரும்படி கேட்டனர்.
மேலும் சென்னைக்கு உட்பட்ட கோவில்களில் அலுவலக உதவியாளர்களாக வேலைக்கு ஆட்கள் தேவைப்படுவதாக கூறி அதனை பெற்றுத் தருமாறு என்னிடம் கூறினார். நானும் ஏற்கனவே சிற்றரசுவிடம் வேலை கேட்டநபர்களை அறிமுகப்படுத்தி வைத்தேன். அவர் தன்னுடைய உதவியாளர்கள் ஆகிய பிரசன்னா, ((சன் டிவி)) தனியார் தொலைக்காட்சி ஊழியர் வினோத் (எ) வினோத் ஆகியோரை சந்திக்க அனுப்பி வைத்தார். இருவரும் மாநகராட்சி தலைமை இடத்திலும், சென்னை பார்த்தசாரதி கோவிலும் வேலை வாய்ப்பு இருப்பதாக கூறி நம்ப வைத்தனர்.
வேலைக்கு தகுந்தார் போல் தலா 3 முதல் 7 லட்சம் வரை ஆகும் என்றும் இதனால் நான் என் மனைவியின் வேலைக்கு 5 லட்சம் பணத்தையும் வேலை கேட்டவர்களிடம் பணத்தை தயார் செய்து கொண்டு சிற்றரசு மற்றும் அவர்கள் உதவியாளர்கள் பிரசன்னா மற்றும் வினோத்யிடம் நுங்கம்பாக்கத்தில் உள்ள சிற்றரசின் அலுவலகத்தில் வைத்து கடந்த 2024 ஆம் ஆண்டு வெவ்வேறு காலகட்டங்களில் சுமார் 69 லட்சம் பணம் கொடுத்தேன்.
இந்நிலையில் எந்த வேலைக்கு பணம் வாங்கினார்களோ அந்த வேலையை அவர்கள் வேறு நபர்கள் பணம் வாங்கிக்கொண்டு பணிக்கு அமர்த்தப்பட்டது எனக்கு தெரிய வந்தது. இது தொடர்பாக சிற்றரசிடம் கேட்டபோது ஆரம்பத்தில் பணத்தை திருப்பித் தருவதாக கூறி ஏமாற்றி விட்டார். என் மூலமாக பணம் கொடுத்தவர்கள் என்னைத் தொடர்ந்து பணம் கேட்டு தொந்தரவு செய்ய ஆரம்பித்ததால் இதனால் நான் கடன் வாங்கியும் மனைவி நகைகளை விற்றும் பலருக்கு பணத்தை கொடுத்து விட்டேன். இதனால் எனக்கு கடன் சுமை ஏற்பட்டது இது தொடர்பாக இதையெல்லாம் எடுத்துக் கூறி சிற்றரசுவிடமும் அவரின் உதவியாளரிடம் பணம் கேட்ட பொழுது பணத்தை எல்லாம் திருப்பித் தர முடியாது என மிரட்டினர்.
பணம் கேட்டால் உன் மீதும் உன் குடும்பத்தினர் மீதும் பொய் வழக்கு பதிவு செய்து உள்ளே தள்ளிவிடுவேன், இது தொடர்பாக திமுக மேல்மட்ட நிர்வாகிகளை சந்தித்து புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை. நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தேன் ஆனால் என் புகாரை காவல் நிலையத்தில் ஏற்க மறுத்துவிட்டனர். இதனால் 15-05-2025 அன்று ஆன்லைனில் புகார் கொடுத்தேன், ஆனால் அதன் மீதும் எவ்வித நடவடிக்கையும் இல்லை,
மேலும் 2026 சட்டமன்ற தேர்தலுக்கு முன் மார்ச் மாதம் சிற்றரசு துன்டுதலின் படி என் மீதும், என் மனைவியின் மீதும் பொய்யான புகாரினை கொடுத்து அதன் மேல் வழக்கு பதிவு செய்யப்பட்டு என்னை சிறையில் அடைத்து விட்டனர். சிறையிலிருந்து வெளியே வந்து கடந்த பத்து நாட்களாக சிற்றரசு, பிரசன்னா மற்றும் வினோத்விடம் பணத்தை கேட்ட பொழுது, கொலை மிரட்டல் விடுக்கின்றனர். திமுக தென்சென்னை மேற்கு மாவட்ட கழக செயலாளரும் 110வது வார்டு சென்னை மாநகராட்சி கவுன்சிலருமாகிய சிற்றரசு மற்றும் அவருடைய உதவியாளர்கள் பிரசன்னா மற்றும் வினோத் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று துளசிராமன் தெரிவித்துள்ளார்.
What's Your Reaction?