சினிமா மயமாகும் அரசாங்கம்..? தயாரிப்பாளர்களுக்கு வாரி வழங்கப்படும் அரசு பதவிகள்... விஜய்யின் திட்டம் என்ன?

தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் நடித்த திரைப்படங்களில் பணியாற்றிய தயாரிப்பாளர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் மற்றும் அவருக்கு நெருக்கமானவர்களுக்கு அரசு பொறுப்புகள் வழங்கப்பட்டு வருவதாக எழுந்துள்ள விமர்சனம் அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாகியுள்ளது. இதுவரை விஜய்யின் திரைப்படக் குழுவில் இடம்பெற்றவர்களில் யார் யாருக்கு அரசு பதவிகள் வழங்கப்பட்டுள்ளன என்பதை பார்க்கலாம்.

Aug 11, 2026 - 07:15
Aug 11, 2026 - 07:48
சினிமா மயமாகும் அரசாங்கம்..? தயாரிப்பாளர்களுக்கு வாரி வழங்கப்படும் அரசு பதவிகள்... விஜய்யின் திட்டம் என்ன?

முதலமைச்சராக விஜய் பொறுப்பேற்ற பிறகு மேற்கொள்ளப்படும் பல்வேறு நியமனங்கள் கவனம் பெற்றுள்ளன. குறிப்பாக, அவரது ஆஸ்தான ஜோதிடருக்கு ஆலோசகர் பதவி வழங்கப்பட்டதாக வெளியான தகவல் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதையடுத்து அந்த முடிவில் இருந்து விஜய் பின்வாங்கினார். இந்த நிலையில், அடுத்தடுத்து மேற்கொள்ளப்பட்ட சில நியமனங்கள் தற்போது விவாதத்தை ஏற்படுத்தியுள்ளன.

ஜெகதீஷ் பழனிசாமி - தனி செயலாளர்

விஜய்யின் மேலாளராக நீண்ட காலம் பணியாற்றிய ஜெகதீஷ் பழனிசாமிக்கு தனி செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டது. இந்த நியமனம் குறித்து ஜெகதீஷ் பழனிசாமி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்ட பின்னரே தகவல் வெளியானது. ஆஸ்தான ஜோதிடருக்கு முன்பே இவர் நியமிக்கப்பட்டு விட்டார், ஆனால் சர்ச்சைகள் எழும் என்பதால் தாமதமாக அறிக்கையை வெளியிட்டதாகக் கூறப்பட்டது.  

விஜய்யுடன் நெருக்கமாக பணியாற்றிய அவர், லியோ திரைப்படத்தின் இணை தயாரிப்பாளராகவும் இருந்துள்ளார். இதனால், விஜய்யின் சினிமா பயணத்தில் அவருடன் இருந்தவருக்கு அரசு பொறுப்பு வழங்கப்பட்டிருப்பது குறித்து விமர்சனங்கள் எழுந்தன.

மனோஜ் பரமஹம்சா - திரைப்பட பயிற்சி நிறுவனத் தலைவர்

விஜய்யின் பீஸ்ட் திரைப்படத்தின் ஒளிப்பதிவாளராக பணியாற்றிய மனோஜ் பரமஹம்சா, தமிழ்நாடு அரசின் திரைப்படப் பயிற்சி நிறுவனத்தின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

திரைப்படம் சார்ந்த பயிற்சிகளை வழங்கும் நிறுவனத்தின் முக்கிய பொறுப்பு என்பதால், இந்த நியமனமும் கவனத்தை ஈர்த்துள்ளது. குறிப்பாக, விஜய்யின் திரைப்படத்தில் பணியாற்றிய ஒருவருக்கு அரசு நிறுவனத்தின் தலைமைப் பொறுப்பு வழங்கப்பட்டிருப்பது குறித்து விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன.

வெங்கட நாராயணா - டெல்லி சிறப்பு பிரதிநிதி

விஜய்யின் நடிப்பில் வெளியான ஜனநாயகன் திரைப்படத்தை தயாரித்த கேவிஎன் புரொடக்‌ஷன்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் வெங்கட நாராயணாவுக்கு தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி பொறுப்பு வழங்கப்பட்டது.

இந்த நியமனத்துக்கு எதிர்க்குரல்கள் எழுந்த நிலையில், அமைச்சர் நிர்மல் குமார் இதற்கு விளக்கம் அளித்திருந்தார். டெல்லி சிறப்பு பிரதிநிதி என்பது முக்கியமான நிர்வாக முடிவுகளை எடுக்கும் பதவி அல்ல என்றும், விஜய்க்கு இக்கட்டான சூழல்களில் வெங்கட நாராயணா ஆதரவாக இருந்தவர் என்றும் அவர் தெரிவித்திருந்தார்.

அர்ச்சனா கல்பாத்தி - கோவில் அறங்காவலர் நியமனக் குழு

விஜய் நடித்த பிகில் மற்றும் கோட் ஆகிய திரைப்படங்களை தயாரித்தவர் அர்ச்சனா கல்பாத்தி. திரைப்படத் தயாரிப்பில் பிரபலமான இவர், தற்போது கோவில்களுக்கான அறங்காவலர் நியமனக் குழுவில் உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார்.

வருமானம் அதிகமாக உள்ள கோவில்களுக்கு பரம்பரை சாரா அறங்காவலர்களை நியமிப்பது உள்ளிட்ட பணிகளை இந்தக் குழு மேற்கொள்கிறது. சினிமா தயாரிப்பாளருக்கு இத்தகைய அரசு சார்ந்த பொறுப்பு வழங்கப்பட்டிருப்பது குறித்தும் கேள்விகள் எழுந்துள்ளன.

வேல்முருகன் - அறங்காவலர் நியமனக் குழு

பின்னணி பாடகர் வேல்முருகனுக்கும் கோவில் அறங்காவலர் நியமனக் குழுவில் உறுப்பினர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. இதே குழுவில் அர்ச்சனா கல்பாத்தியும் இடம்பெற்றுள்ள நிலையில், வேல்முருகனின் நியமனமும் பேசுபொருளாகியுள்ளது.

தவெக கட்சியின் இரண்டாம் ஆண்டு தொடக்க விழாவில் விஜய்யை புகழ்ந்து பாடியபோது, முருகன் பக்திப் பாடலின் வரிகளை மாற்றி பாடியதாக வேல்முருகன் மீது சர்ச்சை எழுந்திருந்தது. அந்த சம்பவத்தை குறிப்பிட்டு அவரின் அரசு சார்ந்த நியமனத்தையும் சிலர் விமர்சித்து வருகின்றனர்.

நியமனங்கள் தொடர்வது ஏன்?

விஜய்யுடன் திரைப்படத் துறையில் பணியாற்றியவர்கள் மற்றும் அவருக்கு நெருக்கமானவர்களுக்கு அடுத்தடுத்து அரசு பொறுப்புகள் வழங்கப்படுவதாக கூறப்படும் நிலையில், இந்த நியமனங்கள் அரசியல் ரீதியாகவும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளன. ஒருபுறம் தகுதி மற்றும் நம்பிக்கையின் அடிப்படையிலேயே நியமனங்கள் மேற்கொள்ளப்படுவதாக ஆதரவாளர்கள் கூறும் நிலையில், மறுபுறம் தனிப்பட்ட நெருக்கம் காரணமாக பதவிகள் வழங்கப்படுகிறதா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

இதனால், விஜய்யின் சினிமா வட்டாரத்தைச் சேர்ந்தவர்களுக்கு வழங்கப்படும் அரசு பொறுப்புகள் குறித்து சட்டமன்றக் கூட்டத் தொடரில் எதிர்க்கட்சிகள் கேள்விகள் எழுப்பும் என்றும், அதற்கு அரசு தரப்பு என்ன பதில் வைத்துள்ளது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow