ராஜராஜ சோழன் கட்டிய திருவேங்கைவாசல்... லிங்கத்தில் தெரியும் புலி ரூபம்!

புதுக்கோட்டை அருகே ஆயிரம் ஆண்டு பழமையான திருவேங்கைநாதர் கோயில், ராஜராஜ சோழன் கட்டிய வரலாற்றுச் சிறப்புமிக்க தலமாகும். சூரிய ஒளியில் லிங்கத்தில் புலி தோற்றம் தெரியும் அதிசயமும், காமதேனுவின் சாப விமோசன தலமும் என்பதால் பக்தர்கள் அதிகம் தரிசனம் செய்கின்றனர்.

ராஜராஜ சோழன் கட்டிய திருவேங்கைவாசல்... லிங்கத்தில் தெரியும் புலி ரூபம்!

ஆயிரம் ஆண்டு கால மன்னன் இராஜராஜ சோழன் களுக்கும் முந்தையது என்றாலும் இன்றைக்கும் அவரின் பெயரைக் கேட்டாலே ஒருவித சிலிர்ப்பு ஏற்படும். அதற்குக் காரணம் வீரத்தில் மட்டுமன்றி, பக்தியிலும் அவர் சிறந்துவிளங்கியதும், கண்ணுக்கெட்டிய இடமெல்லாம் எண்ணற்ற கோயில் களைக் கட்டியதும்தான்.
அந்தவகையில் இராஜராஜ சோழன் புகழினைச் சொல்லும் ஊர்களுள் தனித்துவம்மிக்கது, திருவேங்கைவாசல். புதுக்கோட்டைக்கு அருகே உள்ள இவ்வூரில், இராஜராஜ சோழன் தனது 26 ஆம் ஆட்சியாண்டில் கற்றளியாய் சிவன் கோயில் ஒன்றை எழுப்பியுள்ளார்.

இறைவனுக்கு திருவேங்கைநாதர் என்றும், இறைவிக்கு பெரியநாயகி என்றும் பெயர் விளங்கி வருகிறது. மன்னர் நந்தா விளக்கிற்கும், அன்றாட வழிபாட்டிற்கும், உலா நிகழ்த்திக் கொள்வதற்கும் நிலக் கொடை வழங்கியுள்ளார். கருவறை முன் மண்டபத்தில் தமது புகழ்பெற்ற
மெய்க்கீர்த்தியையும் பொறித்துள்ளார்.

இராஜராஜ சோழனைத் தொடர்ந்து அவர் மகன் இராசேந்திர சோழன், அவர் பெயரன் இராசாதிராசன் ஆகியோரும் நிவந்தம் கொடுத்து கல்வெட்டுகளும் | தொடர்ந்து பாண்டியர்கள், புதுக்கோட்டை தொண்டைமான் மன்னர்கள், பல்லவ பொறித்துள்ளனர். இவர்களைத் ராயர்கள் ஆகியோரும் நிவந்தம் மற்றும் தானம் கொடுத்து வழிபட்டு வந்துள்ளனர். இக்கோயில் கல்வெட்டுகள் 15ஆம் புதுக்கோட்டை மாவட்ட கல்வெட்டுத் தொகுதியில் பதிவாகியுள்ளன.

மூவேந்தர்களில் சோழர்களுக்குப் புலிச் சின்னம் அடையாளமாகும். புலியை வேங்கை என்று அழைப்பது தமிழர் மரபு அவ்வகையில் இங்குள்ள கோயில் மூலவருக்கு திருவேங்கை நாதர் என்றும், இவ்வூருக்கு திருவேங்கை வாசல் எனவும் பெயர்கள் விளங்குகின்றன.
இதற்குக் காரணமாக செவிவழிக்கதை ஒன்றும் சொல்லப்படுகிறது. ஒருசமயம் தேவேந்திரன் தேவர்களை அழைத்து சபையைக் கூட்டினான். எல்லோரும் உரிய நேரத்தில் வந்துவிட, காமதேனுமட்டும் காலதாமதமாக வந்தது. அதற்கு அதுகூறிய காரணத்தை ஏற்காமல், காட்டுப்பசுவாக மாறி அலையுமாறு சாபமிட்டான், இந்திரன். அதனை ஏற்று காட்டுப்பசுவாக மாறிய காமதேனு, பூவுலகில் வந்து திரிந்தது.

பூவுலகில் வெள்ளாற்றங்கரை வந்த பசு, பூவுலகில் திக்குத் தெரியாமல் திகைத்து அலைந்தது. அச்சூழலில் கர்ப்பமடைந்த பசு, மூன்று மாத சினையினைச் சுமந்த வண்ணம் திரிந்த இடம் இன்றும் சிறுசினை என்ற பெயருடன் விளங்குகிறது. ஆறுமாத சினைக்கன்றினை சுமந்து திரிந்த இடம், பெருஞ்சினை என்று அழைக்கப்படுகிறது.

அலைந்து திரிந்த பசு, ஈன்றிட உரிய தருணத்தில் ஒரு மலையின் இடுக்கில் கன்றினை ஈன்றது. கன்று ஈன்ற இடம் இன்று
திருக்கோகர்ணம் என்று ஓர் ஊராக உள்ளது. கன்று வளர வளர, பசுவுக்குத் தன் சாபம் நினைவுக்கு வர, தன் நிலையை எண்ணி வருந்தியது. அந்த சமயத்தில் ஒருநாள், அங்கிருந்த மகிழ வனத்தில் கபிலமுனிவரை தரிசித்த பசு, தனக்கு நேர்ந்துள்ள சாபம் குறித்து அவரிடம் குறித்து வருந்தியது. கவனமாகக் கேட்ட கபில முனிவர், பசுவின் சாபத்தினைப் பரமன் தான் போக்கமுடியும் எனக் கூறி, அதற்கான பரிகாரத்தையும் சொன்னார். "நீ கன்றினை ஈன்ற இடத்தில் சிவலிங்கம் ஒன்று இருக்கிறது. அந்த இறைவனை, கங்கைநீரினால் அபிஷேகம் செய்து வணங்க வேண்டும். அதோடு உன்பாலால் அவரைக் குளிர்விக்க வேண்டும்!" என்று முனிவர் சொன்னதை ஏற்றது பசு.

கங்கையில் நீராடி, அந்த நீரைத் தன் காதுகளில் எடுத்துக்கொண்டுவந்து ஈசனுக்கு அபிஷேகம் செய்தது. தன் பாலைச் சுரந்து வணங்கியது. தொடர்ந்து இவ்வாறு வணங்கிய பசுவின் பக்தியை சோதிக்கத் தீர்மானித்தார், இறைவன். ஒருநாள், வழக்கம்போல் காதுகளில் கங்கையை நிரப்பி எடுத்துக்கொண்டுவந்த பசுவை வழிமறித்து வேங்கைவடிவில் நின்றார் வேதவேதியரான இறைவன்.

தனது அன்றாட வழிபாட்டினை முடித்துவிட்டு வந்து அதற்கு ஆகாரம் ஆவதாகச் சொல்லி அவகாசம் கேட்டது பசு. அதன் உண்மையான பக்தியை உணர்ந்த ஈசன், இந்திரன் அளித்த சாபத்தினை நீக்கி, பசுவுக்கு சிவகதி அளித்து அதனை மீண்டும் காமதேனுவாக தேவருலகில் பிறக்கச் செய்தார்.

இறைவன் வேங்கை ரூபத்தில் நின்று பசுவை இடைமறித்த இடம், இன்று திருவேங்கை வாசல் எனும் ஊராகத் திகழ்கிறது. இத்தலத்தில்தான் இறைவன், திருவேங்கைநாதர் என்ற திருப்பெயருடன் அருள்கிறார். பசு தன் காதுகளில் நீர் எடுத்துச் சென்று இறைவனை ஆராதித்த இடம் திருக் கோகர்ணம். மூலவர் கோகர்ணேஸ்வரர், அம்பிகை, ஸ்ரீபிரஹதாம்பாள். இத்தலத்தில் தினமும் காலைமுதல் உச்சிப் பொழுது வரை இறைவன் திருமேனியில் சூரிய ஒளி படர்ந்து கிடக்கும். இந்நேரத்தில் வழிபடுவோர், லிங்கத் திருமேனியில் புலியின் தோற்றத்தைக் காணமுடியும் என்பது சிலிர்ப்பான விஷயம்.

ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே சூரிய ஒளி கருவறைக்குள் விழ வேண்டும். அவ்வொளியில் புலியின் அடையாளம் நிலைபெற வேண்டும் என்ற தொழில் நுட்பம் அறிந்த வல்லுநராக மாமன்னர் இராஜராஜன் கண்பதி கோயிலை வடிவமைத்திருப்பது மனித வரலாற்றிற்கான புதுமையாகும். லிங்கத்தில் புலியின் முகத்தைக் காணும் பேறுபெற்ற இவர், ஒரு பெரும் சிவபக்தர் என்பதற்கு இது வரலாற்று உண்மையாகும்.

புலியைக் கண்ட பசுவுக்கு சாப அச்சம் நீங்கியது போல், இத்தலத்தில் இறைவன் திருமேனியில் புலியின் ரூபத்தைக் கண்டு வழி படுவோரின் மனத்துயர்களும் வாழ்வில் நேரும் அச்சங்களும் நீங்கி, வேண்டியவை நடக்கும் என்பது ஐதிகம். கருவறையின் முன்மண்டப வடதிசையில் துவாரபாலகரும், தென்திசையில் விநாயகரும் காவலாக வீற்றிருப்பது வேறு எங்குமில்லாத அமைப்பு. நந்தியின் வடிவம் கம்பீரமும் அழகும் நிறைந்தது. நவகிரஹங்களை ஆள்பவர் இறைவனே என்பதால், இத்தலத்தில் நவகிரஹ சன்னதி இல்லை. மேலும் இங்கே பிள்ளையாருக்கு ஒன்பது சன்னதிகள் இருப்பது விசேஷமாகச் சொல்லப்படுகிறது.
ஒரே கோயிலில் இரண்டு அம்மன்கள் இருப்பது அரிது.

அதுவும் இரு அம்மன்களும் ஒரே பெயரில் விளங்குவது அரிதிலும் அரிது. இத் தலத்தில் இரு சன்னதிகளில் அம்மன் பிரஹதாம்பாள் என்ற பெயருடனேயே அருள்பாலிப்பது மிகமிக அரிதான அற்புதமான விசேஷமாகச் சொல்லப்படுகிறது. புதுக்கோட்டை மன்னர்கள் தங்கள் அரசு நிர்வாகத்திற்காக அச்சடித்த நாணயத்தில் இந்த அம்மனின் திருவுருவைப் பதித்திருந்தனர். அந்த வரலாறு இன்றும் 'அம்மன் காசு' என்று பேசப்பெறுகிறது.

தொடக்கத்தில் உருவான முருகன் சந்நதியும் பிற்காலத்தில் உருவாக்கிய முருகன் வள்ளி, தெய்வானை சந்நதியும் உள்ளன. மூலவர் மண்டபத்தோடு இணைந்துள்ள தென்புற மேற்கு திசையில் முருகனுக்கு எண்கோண வடிவில் கருவறை அமைந்துள்ளது. இங்குள்ள முருகன் கையில் வேல் இல்லை. கிரீடம் இல்லை. பழைமைச் சிறப்போடு காட்சியளிக்கும் இம்முருகப் பெருமான், விலகாப் பெரும் தொல்லையையும் விரட்டி அடித்துக் காப்பவர் என்ற நம்பிக்கை இவ்வட்டார மக்களிடம் நிலவுகிறது.

தட்சிணாமூர்த்தி, இங்கே அர்த்தநாரீஸ்வரக் கோலத்தில் வீற்றிருக்கிறார். குருவின் கடாட்சம் பெற்றிட இவரை வணங்குகின்றனர். சைவசமயக் குரவர்கள் நால்வரும் தென்புற விதானத்தில் வீற்றுள்ளனர். இப்பிராகாரத்தில் நாகர் சிற்பங்களும் காணப்படுகின்றன. சூடாமணி சதுரவிடங்கர், கஜலட்சுமி, பிராம்மி, மாகேஸ்வரி, சாமுண்டீஸ்வரி, இந்திராணி தரிசனமும் கிட்டுகிறது.

தென்கயிலாயம் என்னுமளவில் இல்லத்தில் காசி விஸ்வநாதர், காசி விசாலாட்சி அமைந்து புண்ணிய அருட்கடாட்சத்தை அள்ளித் தருகின்றனர். தலவிருட்சத்தைத் தொடர்ந்து பைரவர். சூரியன், சனீ ஸ்வரன் உள்ளனர். இரண்டு தல விருட்சங்களைக் கொண்டது இத்தலம். ஒன்று மாமரம். இம்மரம் 700 ஆண்டு பழைமையானது. குழந்தைப்பேறு இல்லாதவர்கள் இந்த மாமர இலையில் கைப்பிடி அளவு எடுத்து அரைத்து, இறைவனுக்குப் பால் பூஜை செய்து கலந்து பருகிட குழந்தைப் பேற்றினைப் பெறுவதான நம்பிக்கை காலங்காலமாக உள்ளது. மற்றொன்று வில்வம் இறைவன், பசுவின் சாபம் தீர்த்த தலமானதால் பில்லி, சூனியம் செய்வினை முதலான தீவினைகளுக்கு பயந்தவர்கள் இங்கு வழிபட தீர்வு கிடைக்கும் என்பது நம்பிக்கை கோயிலின் தென்புறத்தில் பிரகதாம்பாள் தீர்த்தக்குளம் உள்ளது.

இக்குளத்தில் நீராடி அம்மனுக்கு நெய்தீபம் ஏற்றி வழிபட குடும்பம் விருத்திக்கும் என்பது நம்பிக்கை மனிதன் தன் செயலில் வெற்றிபெற காலம் தவறாமை முக்கியம் என்பதை பசுவுக்கு உணர்த்திய தலமும் இதுவே எனவே இங்கே வந்துவேண்டுவோர், வாழ்வில் வெற்றிகளைப் பெறுவர் என்பது இத்தலம் நாடி வரும் பக்தர்களின் கூற்றாக உள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow