விக்ரமால் சம்பந்திக்கு வந்த சிக்கல்... உடனே DELETE ஆன வீடியோ..!
நடிகர் விக்ரம் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்த அரிய வகை குரங்குடன் இருக்கும் வீடியோ தற்போது புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
விக்ரம் வெளியிட்டிருந்த வீடியோவில், குரங்கை மடியில் வைத்துக்கொண்டு அதனுடன் அவர் நெருக்கமாக பழகும் காட்சிகள் இடம்பெற்றிருந்தன. இந்த வீடியோ இணையத்தில் பரவிய நிலையில், அந்த குரங்கு எந்த இனத்தைச் சேர்ந்தது, அதை வீட்டில் வளர்க்க சட்டப்படி அனுமதி உள்ளதா என்ற கேள்விகள் எழுந்தன.
வீடியோவை விக்ரம் நீக்கியிருந்தாலும், அது வனத்துறை அதிகாரிகளின் கவனத்துக்குச் சென்ற நிலையில், அந்த குரங்கு தொடர்பாக விசாரணை தொடங்கப்பட்டுள்ளது.
வனத்துறை தரப்பில் முதற்கட்டமாக நடத்தப்பட்ட விசாரணையில், அந்த குரங்கு லார் கிப்பன் (Lar Gibbon) இனத்தைச் சேர்ந்ததாக கூறப்படுகிறது. பாதுகாக்கப்பட்ட வனவிலங்கு இனமாக கருதப்படும் இந்த குரங்கை தனிநபர்கள் வளர்ப்பதற்கான சட்ட விதிமுறைகள் தொடர்பாகவும் அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.
இதற்கிடையே, அந்த குரங்கு விக்ரமின் சம்பந்தியான சிகே ரங்கநாதனுக்கு சொந்தமானதாக இருக்கலாம் என்ற தகவலும் வெளியாகியுள்ளது. மணிப்பூரில் இருந்து குரங்கு வாங்கப்பட்டதாக கூறப்படும் தகவலுக்கு இதுவரை அதிகாரப்பூர்வ உறுதிப்படுத்தல் இல்லை.
இதையடுத்து சென்னை வனவிலங்கு வார்டன் யோகன் குலாலா தலைமையிலான அதிகாரிகள், சிகே ரங்கநாதனிடம் விசாரணை நடத்தியதாக கூறப்படுகிறது. குரங்கை வைத்திருப்பதற்கான உரிய ஆவணங்கள் குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்துள்ளனர்.
இந்த விசாரணையில், அரிய வகை குரங்கை வைத்திருப்பதற்கான தேவையான ஆவணங்கள் இருப்பது தொடர்பாக தெளிவான தகவல் கிடைக்கவில்லை என கூறப்படுகிறது. இதனால், குரங்கு எங்கிருந்து கொண்டு வரப்பட்டது, அதை வைத்திருப்பதற்கு சட்டப்பூர்வ அனுமதி பெறப்பட்டுள்ளதா உள்ளிட்ட விவரங்களை வனத்துறை தொடர்ந்து விசாரித்து வருகிறது.
விக்ரம் வெளியிட்ட வீடியோ பின்னர் நீக்கப்பட்டாலும், அதிலிருந்த காட்சிகள் இணையத்தில் பரவியதால் விவகாரம் தற்போது வனத்துறை விசாரணை வரை சென்றுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக நடிகர் விக்ரமிடமும் அதிகாரிகள் விசாரணை நடத்த வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
What's Your Reaction?