கல்லூரி மாணவர்களை குறிவைக்கும் கஞ்சா கும்பல்.. வெளியூரில் இருந்து வந்து சென்னையில் முகாம்.. 3 பேர் கைது
சென்னை பூந்தமல்லியில் பேருந்து நிலையத்தில் இருந்து பஸ்சில் வெளி மாநிலங்களில் இருந்து கஞ்சாவை கடத்தி வந்து விற்பனை செய்ய முயன்ற 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
தமிழகத்தில் நாளுக்கு நாள் கஞ்சா புழக்கம் அதிகரித்து வரும் நிலையில் அதனால் ஆங்காங்கே தாக்குதல் சம்பவங்களும் அதிகரித்துள்ளது. இதனால் மக்கள் பெருமளவு பாதிக்கப்படுவதும் தொடர்கதையாகி வருகிறது. இந்நிலையில் பூந்தமல்லியில் இருந்து வெளியூர் செல்லும் பஸ் நிலையத்தில் நூதன முறையில் கஞ்சா எடுத்து செல்லப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் போலீசார் தீவிரமாக கண்காணித்து வந்தனர்.
இந்த நிலையில் பஸ் நிலையத்தில் சந்தேகத்திற்கிடமாக நின்று கொண்டிருந்த மூன்று பேரை பிடித்து விசாரித்ததில் அவர்கள் கஞ்சா வைத்திருப்பது தெரியவந்தது. பின்னர் மூவரையும் கைது செய்த போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டனர்.
மேலும் பிடிபட்டவர்கள் ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த 23 வயதான கோகுல்,21 வயதான ராகுல், நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த 23 வயதான சின்ராஜ் என்பது தெரியவந்தது. இவர்களிடமிருந்து 30 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.
வெளி மாநிலங்களிலிருந்து கஞ்சாவை மொத்தமாக வாங்கி வந்து பல்வேறு பகுதிகளுக்கு எடுத்து சென்று கல்லூரி மாணவர்களை குறி வைத்து விற்பனை செய்து வந்தது விசாரணையில் அம்பலமானது. இந்த சம்பவத்தில் வேறு யாருக்கெல்லாம் தொடர்பு உள்ளது என்பது குறித்தும் தொடர்ந்து மூவரிடமும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பூந்தமல்லி தற்காலிக பேருந்து நிலையத்தில் அடிக்கடி கஞ்சா விற்பனையாளர்கள் பிடிபடுவது அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.மேலும் இந்த பகுதியில் போலீசார் கவனம் செலுத்தாததே இது போன்ற குற்ற சம்பவங்களுக்கு காரணம் என அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
What's Your Reaction?