+2 ரிசல்ட்.. சாதனை தங்கங்களுக்கு தலைவர்கள் வாழ்த்து.. தோல்வியடைந்தவர்கள் துவண்டு விடாதீர்கள்
+2 தேர்வில் வெற்றி பெற்ற மாணவ செல்வங்களுக்கு அரசியல் கட்சித்தலைவர்கள் வாழ்த்து கூறியுள்ளனர். வெற்றி வாய்ப்பை நழுவவிட்ட மாணவ, மாணவியர்கள் துவண்டு விடாமல் துணைத்தேர்வுகளை மனம் தளராமல் எதிர்கொண்டு வெற்றி பெற வேண்டும் என தெரிவித்துள்ளனர்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், தமிழ்நாட்டில் 12ஆம் வகுப்புப் பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ள மாணவச் செல்வங்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகள். வாழ்வின் அடுத்தக்கட்டத்திற்கு செல்லும் நீங்கள், உயர்கல்விப் படிப்பிலும் சிறந்து விளங்கி, தங்கள் பெற்றோருக்கும் நாட்டிற்கும் நற்பெருமை சேர்க்கும் விதத்தில் பல்வேறு சாதனைகளைப் புரிய எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
டிடிவி தினகரன்: அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், தமிழகத்தில் இன்று வெளியாகியிருக்கும் பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வு முடிவுகளில், வெற்றி பெற்று வாழ்க்கையின் அடுத்தகட்ட உயர்கல்வியை நோக்கி பயணிக்க தயாராகியிருக்கும் மாணவ, மாணவியர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
வெற்றி வாய்ப்பை நழுவவிட்ட மாணவ, மாணவியர்கள் தேர்வின் முடிவுகளை வாழ்க்கையின் மதிப்பீடுகளாக கருதாமல், விரைவில் நடைபெற இருக்கும் துணைத்தேர்வுகளை மனம் தளராமல் எதிர்கொண்டு, வெற்றிபெற்று வருங்காலத்தில் சிறந்து விளங்க எனது வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
அண்ணாமலை: பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், இன்றைய தினம் வெளிவந்துள்ள பன்னிரண்டாம் வகுப்பு தேர்வு முடிவுகளில் வெற்றி பெற்று, கல்லூரிக் கல்விக்குச் செல்லவிருக்கும் மாணவ மாணவியர் அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். புதிய துறைகளும், பல்வேறு வாய்ப்புகளும், அனைவருக்கும் சிறப்பானதொரு எதிர்காலத்தை உருவாக்கக் காத்திருக்கின்றன. மாணவர்கள், உயர்கல்வியில் தாங்கள் விரும்பும் துறையில் சாதனை படைக்க வேண்டிக் கொள்கிறேன்.
பன்னிரண்டாம் வகுப்புத் தேர்வில் வெற்றி வாய்ப்பை இழந்தவர்கள் துவண்டு விடாமல், அடுத்த முறை சிறப்பாக உழைத்து, முழு நம்பிக்கையுடன் தேர்வை எதிர்கொண்டு வெற்றி பெறவும் இறைவனை பிரார்த்திக்கிறேன். அனைவருக்கும் மிகச் சிறப்பான எதிர்காலத்தை ஆண்டவன் அருளட்டும்.
டாக்டர் ராமதாஸ்: பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், தமிழ்நாடு மற்றும் புதுவையில் நடைபெற்ற 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் 94.56% மாணவர்கள் வெற்றி பெற்றுள்ளனர். கடந்த ஆண்டை விட நடப்பாண்டில் தேர்ச்சி விகிதம் 0.53% அதிகரித்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. தேர்வில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியர் அனைவருக்கும் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவர்களின் உயர்கல்வி சிறப்பாக அமையவும் வாழ்த்துகிறேன்.
12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் தோல்வியடைந்த மாணவர்கள் அனைத்து நினைத்து கவலையடையக் கூடாது. அடுத்த மாதமே துணைத் தேர்வுகள் நடத்தப்படவுள்ள நிலையில், அதில் பங்கேற்று தேர்ச்சியடைந்து உயர்கல்வி பயணத்தைத் தொடங்க வாழ்த்துகிறேன் என்று டாக்டர் ராமதாஸ் பதிவிட்டுள்ளார்.
What's Your Reaction?