Ghilli Box Office: பாக்ஸ் ஆபிஸில் பட்டையை கிளப்பும் கில்லி… மூன்று நாட்களில் இத்தனை கோடி வசூலா?
விஜய்யின் கில்லி திரைப்படம் 20 ஆண்டுகளுக்குப் பின்னர் ரீ-ரிலீஸ் ஆன நிலையில், அதன் பாக்ஸ் ஆபிஸ் வசூல் கோலிவுட்டையே மிரள வைத்துள்ளது.
சென்னை: விஜய் நடிப்பில் கடைசியாக வெளியான லியோ திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது. இந்தப் படம் ஆயிரம் கோடி ரூபாய் வரை வசூலிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், லியோ 500 கோடி ரூபாய் வரை மட்டுமே கலெக்ஷன் செய்தது. இதனால் விஜய்யின் அடுத்தப் படமான தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் வசூல் எப்படி இருக்கும் என்பதே அதிக எதிர்பார்ப்பாக உள்ளது. வெங்கட் பிரபு இயக்கும் இந்தப் படத்தில் விஜய்யுடன் பெரிய நட்சத்திரப் பட்டாளமே நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் விஜய் நடிப்பில் சூப்பர் டூப்பர் ஹிட்டான கில்லி கடந்த வாரம் ரீ-ரிலீஸானது. தரணி இயக்கத்தில் விஜய், த்ரிஷா, பிரகாஷ்ராஜ், ஆசிஸ் வித்யார்த்தி உள்ளிட்ட பலர் நடித்த இந்தப் படத்துக்கு வித்யாசாகர் இசையமைத்திருந்தார். விஜய் கேரியரில் ரசிகர்களின் ஆல்டைம் ஃபேவரைட் மூவியாக கொண்டாடப்படும் கில்லி, 2கே கிட்ஸ்களையும் விட்டுவைக்கவில்லை. கடந்த வாரம் வெள்ளிக்கிழமை ரிலீஸான கில்லி முதல் நாளில் 4 கோடி ரூபாய் வசூலித்து மாஸ் காட்டியது.
கடந்த சில மாதங்களாகவே ரஜினி, கமல், தனுஷ், சூர்யா என முன்னணி ஹீரோக்களின் படங்கள் ரீ-ரிலீஸாகி வருகின்றன. ஆனால், கில்லி அளவிற்கு வேறு எந்த படங்களும் பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷனில் கெத்து காட்டவில்லை என திரையரங்க உரிமையாளர்கள் கூறி வருகின்றனர். வெள்ளிக்கிழமையை தொடர்ந்து கடந்த வார இறுதியான சனி, ஞாயிறுகளிலும் கில்லியின் பாக்ஸ் ஆபிஸ் வசூல் கோலிவுட்டையே மிரள வைத்துள்ளது.
அதன்படி, கில்லி திரைப்படம் மூன்று நாட்களில் 10 கோடி ரூபாய் வரை வசூல் செய்துள்ளதாக பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதனை விஜய் ரசிகர்கள் வெறித்தனமாக கொண்டாடி வருகின்றனர். கில்லி ரீ-ரிலீஸான 325 திரையரங்குகளிலும் விஜய் ரசிகர்கள் பட்டாசு வெடித்தும் ஆட்டம் போட்டும் அமர்க்களப்படுத்தினர். இந்த வீடியோக்களும் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் விஜய்யின் கில்லியை தொடர்ந்து மங்காத்தா திரைப்படம் அஜித்தின் பிறந்தநாளை முன்னிட்டு மே 1ம் தேதி ரீ- ரிலீஸாகவுள்ளது. விஜய்யை போல அஜித்தும் ரீ-ரிலீஸில் மாஸ் காட்டுவாரா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.
What's Your Reaction?