புழல் சிறையில் வாடும் செந்தில் பாலாஜி.. வாதாட அவகாசம்.. 34வது முறையாக நீதிமன்ற காவல் நீட்டிப்பு

செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை ஏப்ரல் 25ம் தேதி வரை நீட்டித்தும் நீதிபதி உத்தரவிட்டார். இதன் மூலம் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 34 வது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது.

Apr 22, 2024 - 16:06
புழல் சிறையில் வாடும் செந்தில் பாலாஜி.. வாதாட அவகாசம்.. 34வது முறையாக நீதிமன்ற காவல் நீட்டிப்பு

சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்ட வழக்கில் கடந்த ஆண்டு ஜூன் 14ஆம் தேதி முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டார். தீபாவளி, பொங்கல், தமிழ் புத்தாண்டு என அனைத்து பண்டிகைகளையும் புழல் சிறையிலேயே கொண்டாடி விட்டார் செந்தில் பாலாஜி. 

இதற்கிடையில் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்திலும், சென்னை உயர்நீதிமன்றத்திலும் ஜாமீன் கோரி அவர் தாக்கல் செய்த மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. தற்போது செந்தில் பாலாஜி ஜாமின் கோரி உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு நிலுவையில் உள்ளது.

சட்ட விரோத பணப் பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் இருந்து  தன்னை விடுவிக்கக் கோரி முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த சென்னை  முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி எஸ்.அல்லி, தீர்ப்பை தள்ளிவைத்திருந்தார்.

இந்நிலையில், வழக்கு தொடர்பான வங்கி ஆவணங்களின் அடிப்படையில் வாதங்களை முன்வைக்க வேண்டியுள்ளதால், விடுவிக்க கோரிய மனு மீது மீண்டும் வாதிட அனுமதிக்க கோரி செந்தில் பாலாஜி சார்பில் முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. 

இந்த மனுவை ஏற்றுக் கொண்ட சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி, விடுவிக்க கோரிய மனு மீது மீண்டும் வாதங்களை முன்வைக்க செந்தில் பாலாஜி தரப்புக்கு அனுமதியளித்து உத்தரவிட்டார்.

இதற்கிடையில், இந்த வழக்கு தொடர்பாக வங்கியில் இருந்து நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட  அசல் ஆவணங்களை வழங்க வேண்டும் என, செந்தில் பாலாஜி தரப்பில் புதிய மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி எஸ். அல்லி, நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள ஆவணங்களை பெற்றுக்கொள்வதற்காக செந்தில் பாலாஜியை  இன்று பிற்பகல் மூன்று மணிக்கு மேல் நேரில்  ஆஜர்படுத்தும்படி சிறைத்துறைக்கு  நீதிபதி உத்தரவிட்டார். அதன்படி செந்தில் பாலாஜி  முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுத்தப்பட்டார். அவருக்கு வங்கி தொடர்பான ஆவணங்கள் வழங்கப்பட்டு, கையெழுத்து பெறப்பட்டது. பின்னர், விடுவிக்க கோரிய மனு மீது ஏப்ரல் 25ம் தேதி முதல் வாதங்களை துவங்க செந்தில் பாலாஜி தரப்புக்கு நீதிபதி அல்லி உத்தரவிட்டார்.

அதேபோல, செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை ஏப்ரல் 25ம் தேதி வரை நீட்டித்தும் நீதிபதி உத்தரவிட்டார். இதன் மூலம் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 34 வது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow