தங்கம் விலை மீண்டும் ரூ. 53 ஆயிரத்தை தாண்டியது.. அட்சய திருதியை நாளில் விலை குறையுமா?

சென்னை: ஆபரண தங்கம் கிராமிற்கு 30 ரூபாய் அதிகரித்து 6640க்கு விற்பனையாகிறது. சென்னையில் ஒரு சவரனுக்கு 240 ரூபாய் அதிகரித்து 53,120 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

May 7, 2024 - 10:41
தங்கம் விலை மீண்டும் ரூ. 53 ஆயிரத்தை தாண்டியது.. அட்சய திருதியை நாளில் விலை குறையுமா?

தங்க நகைகளின் மீது பெண்களுக்கு ஆர்வம் அதிகம். பண்டிகை நாட்களில் கால் சவரன் தங்கமாவது வாங்க வேண்டும் என்று நினைப்பார்கள். தங்கம் மிகச்சிறந்த முதலீடு என்பதால்தான் இந்தியர்கள் தங்கத்தை வாங்குவதில் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். 

சர்வதேச பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் தங்கம் விலை நாள்தோறும் நிர்ணயம் செய்யப்படுகிறது. அதன்படி, தங்கம் விலை கடந்த சில மாதங்களாக திடீரென அதிரடியாக உயர்வதும், குறைவதுமாக இருந்து வருகிறது.  

ஆபரணத் தங்கத்தின்  விலை கடந்த ஏப்ரல் மாதத்தின் மத்தியில் ஒரு சவரன் ரூ.55,000த்தை தாண்டியது. கடந்த ஏப்ரல் 20ஆம் தேதியில் இருந்து தங்கத்தின் விலை படிப்படியாக குறையத் தொடங்கியது. 22ஆம் தேதியன்று ஒரு கிராம் ஆபரணத்தங்கம் 6,845 ரூபாய்க்கு ஒரு கிராம் ஆபரணத் தங்கம் விற்பனை செய்யப்பட்டது. இந்த நிலையில் தங்கம் தடாலடியாக குறையத் தொடங்கியது.

கடந்த 23ஆம் தேதியன்று அதிகபட்சமாக கிராமுக்கு 145 ரூபாய் குறைந்து 6,700 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. சவரனுக்கு ரூ.1,160 குறைந்து 53 ஆயிரத்து 600 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. இதனால் இல்லத்தரசிகள் மகிழ்ச்சியடைந்தனர். இந்த நிலையில் ஏப்ரல் 24ஆம் தேதியன்று 22 காரட் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.30 உயர்ந்து ஒரு கிராம் ரூ.6,730 க்கும், சவரனுக்கு ரூ.240 உயர்ந்து ஒரு சவரன் ரூ.53,840க்கும் விற்பனை செய்யப்பட்டது.

இந்த நிலையில் கடந்த ஏப்ரல் 25ஆம் தேதியன்று ஒரு கிராமுக்கு 20 ரூபாய் குறைந்தது. ஒரு கிராம் தங்கம் ரூ.6710 ஆக விற்பனையானது. சவரனுக்கு 160 ரூபாய் குறைந்து ரூ. 53,680 ஆக விற்பனை செய்யப்பட்டது. கடந்த 15 நாட்களில் தங்கத்தின் விலை சவரனுக்கு 3000 ரூபாய் வரை குறைந்தது. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று (மே 06) சவரன் ரூ.52,880க்கு விற்கப்பட்டது. ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ரூ.6,610க்கு விற்பனை செய்யப்பட்டது.

தங்கத்தின் விலை பரமபதம் ஆடி வரும் நிலையில், இந்நிலையில் ஈரான் இஸ்ரேல் போரால் தங்கத்தின் விலை மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக நகை விற்பனையாளர்களும் நிபுணர்களும் கூறியிருந்தனர். இந்த நிலையில்தான் சென்னையில் ஆபரணத் தங்கம்  சற்றே உயரத் தொடங்கியுள்ளது.

இன்றைய தினம்  சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.240 உயர்ந்து ஒரு சவரன் ரூ.53,120க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.30 உயர்ந்து ரூ.6,640க்கு விற்பனையாகிறது. 

வெள்ளி கிராமுக்கு ஒரு ரூபாய் அதிகரித்து 88 ரூபாய் 50 காசுகளுக்கும் ஒரு கிலோ 88 ஆயிரத்து 500 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
மே மாதத்தின் முதல் நாளில் இருந்தே தங்கத்தின் விலை ஏற்ற இறக்கமாகவே இருந்து வருகிறது. மே 10ஆம் தேதி அட்சய திருதியை பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில் தங்கத்தின் விலை ஊசலாட்டமாகவே இருந்து வருகிறது. அட்சய திருதியை நாளில் தங்கத்தின் விலை குறையுமா என்ற எதிர்பார்ப்பு  நகை வாங்குபவர்களிடையே அதிகரித்துள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow