கள்ளச்சாராய விவகாரத்தில் உண்மையான குற்றவாளிகள் எங்கே?... அரசுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி கேள்வி!

கள்ளக்குறிச்சி சம்பவத்தை ஏற்று கொள்ள முடியாது. சம்பவம் நடைபெறும் மூன்று நாட்கள் நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. ஆனால் அதன் பின் வழக்கம் போல மாறிவிடுகின்றன தொடர்ந்து உயிர் இழப்புகள் ஏற்படுகின்றன.

Jun 25, 2024 - 20:34
கள்ளச்சாராய விவகாரத்தில் உண்மையான குற்றவாளிகள் எங்கே?... அரசுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி கேள்வி!
ஆளுநர் ரவி

சென்னை: கள்ளக்குறிச்சி கருணாபுரத்தில் கள்ளச்சாராயம் குடித்து இதுவரை 60 பேர் பலியாகி விட்டனர். 100க்கும் மேற்பட்டவர்கள் மருத்துமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் கள்ளச்சாராயத்தை கட்டுப்படுத்த தவறி விட்டதாகவும், இதற்கு பொறுப்பேற்று அவர் பதவி விலக வேண்டும் என்றும் அதிமுக, பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளன. இந்நிலையில், கள்ளக்குறிச்சி விவகாரம் தொடர்பாக ஆளுநர் ஆர்.என்.ரவியும் தமிழ்நாடு அரசை குற்றம்சாட்டியுள்ளார். 

சென்னை கிண்டி ஆளுநர் மாளிகையில் சர்வதேச போதைப்பொருள் பயன்பாடு மற்றும் சட்டவிரோத கடத்தலுக்கு எதிரான  பதாகையை ஆளுநர் ஆர்.என் ரவி வெளியிட்டார். போதைப்பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு பதாகையை பொதுமக்களுக்கு வழங்கினார். பின்பு பேசிய ஆளுநர் ஆர்.என்.ரவி கூறியதாவது:-

நாளை உலக போதைப்பொருள் பயன்பாடு மற்றும் சட்டவிரோத கடத்தல் தினம் கடைபிடிக்கப்படுகிறது. மற்ற ஆண்டுகளை போல இல்லாமல் ஒரு இருண்ட நிகழ்வுகள் கள்ளக்குறிச்சியில் நடைபெற்றுள்ள நிலையில் இந்த நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதுவரை 60 நபர்கள் உயிர் இழந்துள்ளனர் என தெரிய வந்துள்ளது.  போதைப்பொருளுக்கு இளைஞர்கள் அடிமையாகி வருகின்றனர்.

போதைப்பொருளுக்கு இளைஞர்கள் அடிமையாகுவது மூலம் நம் நாட்டின் எதிர்காலம் பாதிக்கப்படுகிறது. போதைப்பொருளினால் எவ்வளவு பெரிய பாதிப்பு ஏற்படும் என்பதை நமது நாடு பார்த்துள்ளது. 1980ம் ஆண்டு வரை பஞ்சாப் மாநிலம் வேளாண் உள்ளிட்ட அனைத்துத் துறைகளிலும் முன்னேறி இருந்தது. ஆனால் அடுத்த 20 ஆண்டுகளில் அங்கு போதைப்பொருள் என்ன செய்துள்ளது என்பதை பார்த்துள்ளோம். 

நான் தமிழ்நாடு மாநிலத்திற்கு வந்த முதல் நாள் முதல், எண்ணற்ற பெற்றோர்கள் பள்ளி மற்றும் கல்லூரிகளில் போதைப்பொருளை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.

ஆனால் தற்போது வரை இதை ஏற்றுக்கொள்ளும் மனநிலையில் அரசு அதிகாரிகள் இல்லை. இதுகுறித்து நான் கேட்டால் இங்கு கஞ்சா மட்டுமே உள்ளது; மற்ற போதை பொருள் இல்லை என கூறுகின்றனர். தமிழகத்தில் உள்ள பெற்றோர்கள் Synthetic drugs உள்ளது என தெரிவிக்கும் நிலையில் இங்கு உள்ள அதிகாரிகளுக்கு எப்படி தெரியாமல் உள்ளது. 

முதலில் நாம் இங்கு போதைப்பொருள் இல்லை என்ற மன நிலையில் இருந்து வெளியே வர வேண்டும்.  இல்லை என்றால் இளைஞர்கள் வாழ்க்கை கேள்வி குறியாக வாய்ப்புள்ளது. அதே போல மக்களுக்கு நாம் நேர்மையாக இல்லை. கடந்த ஆண்டு செங்கல்பட்டு மற்றும் விழுப்புரம் கள்ளச்சாராய உயிரிழப்புக்கு பிறகு  கைது நடைபெற்றது.

அதன் பின் என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது? என தெரியவில்லை. உண்மையான குற்றவாளிகள் கண்டறியப்பட்டனரா?  கள்ளக்குறிச்சி சம்பவத்தை ஏற்று கொள்ள முடியாது. சம்பவம் நடைபெறும் மூன்று நாட்கள் நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. ஆனால் அதன் பின் வழக்கம் போல மாறிவிடுகின்றன தொடர்ந்து உயிர் இழப்புகள் ஏற்படுகின்றன. 

போதைப்பொருட்களில் சமூகம் சார்ந்த பல பிரச்சனைகள் உருவாகின்றன. போதைப்பொருளுக்கு அடிமையாகி பல குற்ற சம்பவங்கள் தமிழ்நாட்டில் அரங்கேறியுள்ளன. என்ஐஏ நடத்திய விசாரணையில் தமிழ்நாட்டில் உள்ள ஒரு சிலர் பாகிஸ்தான் மற்றும் துபாயில் உள்ள சிலருடன் இணைந்து ஆப்கானிஸ்தான் நாட்டில் இருந்து ஹெராயின்  இறக்குமதி செய்வது தெரியவந்துள்ளது. 

கேரள கடல் பகுதியில் ஹெராயின் பிடிபட்ட நேரத்தில் அவர்களிடம் ஏகே 47 துப்பாக்கிகள் இருந்தன. போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் பணிகளை முறையாக மேற்கொள்ள வேண்டும். போதைப்பொருள் தமிழகத்தில் புழங்குவதை கடத்தப்படுவதை தடுக்க வேண்டும். இவ்வாறு ஆளுநர் ரவி கூறியுள்ளார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow