அனைத்து நகரப் பேருந்துகளுக்கும் மாதாந்திர பயணச்சீட்டு முறை... சட்டப்பேரவையில் வெளியான அறிவிப்பு!
5வது நாளாக இன்று சட்டப்பேரவை கூடியது முதல் மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடந்தது. உறுப்பினர்களின் கேள்விக்கு, அந்தந்த துறைசார்ந்த அமைச்சர்கள் பதிலளித்தனர்.
சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று பல்வேறு துறைகளின் கீழ் புதிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டன.
தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் கடந்த 20ம் தேதி தொடங்கியது. 5வது நாளாக இன்று சட்டப்பேரவை கூடியது முதல் மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடந்தது. உறுப்பினர்களின் கேள்விக்கு, அந்தந்த துறைசார்ந்த அமைச்சர்கள் பதிலளித்தனர்.
மேலும் பல்வேறு துறைகளின் கீழ் முக்கிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டது. தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறையில் பல புதிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டன.
நெடுஞ்சாலைத் துறையின் கீழ் வெளியிடப்பட்ட அறிவிப்புகள்:-
* முதலமைச்சர் சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் நடப்பாண்டில் 200 கிமீ நீளச்சாலைகள் நான்கு வழித்தடமாகவும், 550 கிமீ நீளச் சாலைகள் இருவழித்தடமாகவும் அகலப்படுத்தி மேம்படுத்தப்படும்.
* ஊராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றிய சாலைகளில் 600 கிமீ சாலைகள், ரூ.680 கோடி மதிப்பீட்டில் இதர மாவட்டச் சாலைகளாகத் தரம் உயர்த்தப்படும்.
* தென்காசி, ஆற்காடு, போடிநாயக்கனூர், திருநெல்வேலி ஆகிய 4 நகரங்களில் புறவழிச்சாலை அமைக்கப்படும்.
பொதுப்பணித்துறையின் கீழ் வெளியிடப்பட்ட அறிவிப்புகள்:-
* சென்னை தியாகராய நகரில் உள்ள காமராஜர் இல்லம் ரூ.2.60 கோடி மதிப்பீட்டில் புனரமைக்கப்படும்.
* சென்னை பூந்தமல்லியில் உள்ள விக்டரி நினைவு பார்வையற்றோர் பள்ளிக் கட்டடம் ரூ.24.20 கோடி மதிப்பீட்டில் புனரமைக்கப்படும்.
* திருச்சி டவுன்ஹாலில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளிக் கட்டடம் ரூ.4.85 கோடி மதிப்பீட்டில் புனரமைக்கப்படும்.
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் கீழ் வெளியிடப்பட்ட அறிவிப்புகள்:-
* ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாணாக்கருக்கு புதிய விடுதிகள் கட்டப்படும்.
* விடுதி மாணாக்கருக்கு ஒருங்கிணைந்த சமையலறை மூலம் உணவு வழங்குதல் அமுத சுரபி திட்டத்தை விரிவுபடுத்தப்படும்.
* பழங்குடியினர் உண்டி உறைவிட பள்ளிகள் பழங்குடியினர் தேவைகளின் அடிப்படையில் மறு சீரமைக்கப்படும்.
* வீடற்ற பழங்குடியினருக்கு வீடுகள் கட்டித் தரப்படும்.
* பழங்குடியினர் குடியிருப்புகளில் அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தி தன்னிறைவு அடையச் செய்யப்படும்.
* பழங்குடியின மக்களின் குடியிருப்புகளை இணைப்பதற்காக அணுகுசாலை வசதிகளை ஏற்படுத்தப்படும்.
போக்குவரத்து துறையின் கீழ் புதிய அறிவிப்புகள்:-
* சென்னை மாநகர பேருந்துகளில் உள்ள மாதாந்திர பயணச்சீட்டு முறை அனைத்து நகரப் பேருந்துகளுக்கும் விரிவாக்கம் செய்யப்படும்.
* 3,886 பேருந்துகளுக்கு ₹15.54 கோடி செலவில் தானியங்கி கதவுகள் பொருத்தப்படும்.
* சென்னையில் இரண்டாம்கட்டமாக மின்சார பேருந்துகள் வாங்கப்படும்.
What's Your Reaction?