ராஜபாளையத்தில் போக்குவரத்து நெரிசல்.. இணைப்புச் சாலை திட்டத்தை விரைந்து முடிக்க ஹைகோர்ட் உத்தரவு

ராஜபாளையம் நகரில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் திட்டத்தை விரைந்து முடிக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.

May 2, 2024 - 17:03
ராஜபாளையத்தில் போக்குவரத்து நெரிசல்.. இணைப்புச் சாலை திட்டத்தை விரைந்து முடிக்க ஹைகோர்ட் உத்தரவு

ராஜபாளையம் நகரில் தினந்தோறும் போக்குவரத்து நெரிசலில் சிக்கி மக்கள் அவதியுறுகின்றனர். இதனால் அன்றாடம் பணிக்கு செல்வோர் அவசர தேவைக்கு செல்வோர்கள் கூட மிகவும் சிரமத்தில் தான் உள்ளனர். இதனால் போக்குவரத்தில் மாற்றங்களை கொண்டு வந்து இணைப்பு சாலைகளை போட அரசு நிதி ஒதுக்கியது. ஆனால் இந்த இணைப்பு சாலைகளால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படும் என கூறி அப்பகுதியை சேர்ந்த ராமசந்திர ராஜா, கிருஷ்ண மா ராஜா பொது நல மனு ஒன்றை தாக்கல் செய்தனர்.

அதில் சங்கரன்கோவில் சாலை - தென்காசி சாலை இணைப்புத்  சாலை திட்டத்தை செயல்படுத்த வேண்டும் எனவும், வணிகா்கள், பொதுமக்கள் தொடா்ந்து வலியுறுத்தி வருவதாகவும் கூறப்பட்டுள்ளது. மேலும் இந்த திட்டத்தால் தென்காசி, குற்றாலம், கொல்லம் செல்லும் வாகனங்களும் புதிய பேருந்து நிலையம் வரும் பேருந்துகளும் நகருக்குள் வராமல் செல்வதால் சொக்கா் கோயில், காந்தி கலைமன்றம் உள்ளிட்ட பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த திட்டத்தின் அங்கமாக, புதிய பேருந்து நிலையம் முதல் தென்காசி சாலையில் உள்ள அரசு மருத்துவமனை வரையிலான 2 கிலோ மீட்டா் தொலைவுக்கு சாலை அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இவற்றை நடைமுறைப்படுத்த மக்களிடம் நிலம் கையகப்படுத்துதல் தொடா்பாக பொதுமக்களிடம் கருத்துக் கேட்புக் கூட்டம் வட்டாட்சியா் அலுவலகத்தில் நடைபெற்றது.

இந்நிலையில்  இந்த இணைப்பு சாலைக்கு நிலம் கையகப்படுத்துவதற்காக தமிழக அரசு ரூ.8.34 கோடி நிதி ஒதுக்கீடு செய்தது. ஆனால் இந்த இணைப்பு சாலை திட்டம்,  நீர் நிலையை ஒட்டி செல்வதால் சுற்று சூழல் முன் அனுமதி பெற வேண்டும். அனுமதி பெறாமல் அவசர அவசரமாக திட்டத்தை செயல்படுத்துவதால், சங்கரன்கோவில் சாலை - தென்காசி சாலை இணைப்புத்  சாலை திட்டத்திற்கு தடை விதிக்க வேண்டும் என மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனு நீதிபதிகள் சுரேஷ் குமார், அருள் முருகன் ஆகியோர் முன்  விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில், இந்த திட்டத்திற்கு தடை விதிக்க வேண்டும் என வாதிடப்பட்டது. இது  குறித்து  விரிவான ஆய்வு மேற்கொண்டு, தொழில்நுட்ப வல்லுனர்கள் மூலம் விரிவான திட்ட அறிக்கை தயாரித்ததன் பேரில், முன்மொழியப்பட்ட இணைப்பு சாலைக்கு,   நிர்வாக மற்றும் நிதி அனுமதி வழங்கப்பட்டது.
 
இதை தொடர்ந்து  விசாரணை நடத்திய நீதிபதிகள், இந்த திட்டம் மேலும்  செயல்படுத்த  தாமதிப்பது  பொதுமக்களின் நலனுக்கு பாதகமாக அமையும்  எனவே திட்டச் செலவு அதிகரிக்கும். இந்த இணைப்பு சாலை பயன்பாட்டிற்கு வருவது பொது மக்களின் நலனுக்கு உகந்தது என கூறி மனுக்களை தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow