"நீங்கள் செய்கிறீர்களா? நாங்கள் செய்யட்டுமா?" - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் எச்சரிக்கை..!
கடலோர காவல்படையில் பெண் அதிகாரிகளுக்கு நிரந்தர ஆணையத்தை நீங்கள் விரிவாக்குகிறீர்களா? நாங்கள் செய்யட்டுமா? என மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் இறுதி எச்சரிக்கை விடுத்துள்ளது.
குறுகியகால சேவை ஆணையத்தின் கீழ், ராணுவம் மற்றும் கடற்படையில் ஒருவர் 14 ஆண்டுகள் வரை பணியாற்றலாம் என்ற நிலையில், ஓய்வுபெறும் வரை பணியாற்றும் நிரந்தர ஆணையம் ஆண் அதிகாரிகளுக்கு மட்டுமே அளிக்கப்பட்டு வந்தது. இதனை கடலோர காவல்படைக்கும் விரிவுபடுத்தி, தன்னை நிரந்தர ஆணையத்தில் இணைக்கக் கோரி, பெண் அதிகாரி பிரியங்கா தியாகி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இவ்வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, பெண் அதிகாரிகளுக்கு நிரந்தர கமிஷன் இல்லை என்பது 2024ம் ஆண்டில் ஏற்றுக்கொள்ளக் கூடிய கருத்து அல்ல என தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூத் தெரிவித்தார்.
பெண்களை இப்படி எடைபோடுவதை அனுமதிக்க முடியாது எனவும் அதிகாரத்தை நீங்கள் வழங்காவிடில் நாங்கள் வழங்க வேண்டியிருக்கும் எனவும் கூறி மத்திய அரசுக்கு இறுதி எச்சரிக்கை விடுப்பதாகவும் அவர் கூறினார். இதுதொடர்பாக பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய கடலோர காவல்படையிடம் வலியுறுத்துவதாக மத்திய அரசு கூறியதைத் தொடர்ந்து, மார்ச் 1ம் தேதிக்கு வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டது.
What's Your Reaction?