ரூ.1.70 கோடி அபேஸ்.. செக் மோசடி வழக்கு..! ஜெயிலுக்கு போன அஜித் பட தயாரிப்பாளர்..!
                                நடிகர் அஜித் நடித்த பல படங்களை தயாரித்த பிரபல தயாரிப்பாளர் சிவசக்தி பாண்டியன் செக் மோசடி வழக்கில் கைதாகி சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
வான்மதி, காதல் கோட்டை, வெற்றிக் கொடிகட்டு, காலமெல்லாம் காதல் வாழ்க உள்ளிட்ட படங்களை தயாரித்தவர் பிரபல தயாரிப்பாளர் சிவ சக்தி பாண்டியன். இவர் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் முன்னாள் செயலாளராகவும் இருந்துள்ளார்.
இந்த நிலையில் பிரபல தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜூனை வைத்து தயாரித்த படத்திற்காக தனியார் தொலைக்காட்சி நிறுவனத்திடம் சிவசக்தி பாண்டியன் ரூ.1.70 கோடி கடன் வாங்கியதாகவும், அதற்காக காசோலைகளை சிவசக்தி பாண்டியன் கொடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
ஆனால் பணம் இல்லாமல் காசோலை திரும்பி விட்டது. இதையடுத்து அந்த நிறுவனம் பலமுறை பணத்தை திருப்பி கேட்டும் சிவசக்தி பாண்டியன் பணத்தை கொடுக்காததால் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் காசோலை மோசடி வழக்கு தொடரப்பட்டது. நீதிமன்றமும் பல தவணைகள் அளித்தும் பணத்தை திருப்பித் தர முன்வராததால் சிவசக்தி பாண்டியனை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.
இதையடுத்து மகாலிங்கபுரத்தில் உள்ள வீட்டில் வைத்து நுங்கம்பாக்கம் காவல்துறையினர் சிவசக்தி பாண்டியனை கைது செய்தனர். பின்னர் அவரை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர். பிரபல தயாரிப்பாளர் செக் மோசடி புகாரில் கைது செய்யப்பட்டிருப்பது தமிழ் திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
What's Your Reaction?
                    
                
                    
                
                    
                
                    
                
                    
                
                    
                
                    
                

                                                                                                                                            
                                                                                                                                            
                                                                                                                                            