மூளை வளர்ச்சி குறைபாடு, இதயத்தில் ஓட்டை.. ஸ்கேனில் கண்டறியாத மருத்துவர்கள்.. கேள்விக்குறியான குழந்தையின் எதிர்காலம்?

Apr 28, 2024 - 11:51
மூளை வளர்ச்சி குறைபாடு, இதயத்தில் ஓட்டை.. ஸ்கேனில் கண்டறியாத மருத்துவர்கள்.. கேள்விக்குறியான குழந்தையின் எதிர்காலம்?

ராணிப்பேட்டையில் குழந்தை கருவில் இருக்கும்போதே மூளை வளர்ச்சி குறைபாடு இருப்பதை கண்டறிந்து கூறாமல், மருத்துவர்கள் அலட்சியமாக செயல்பட்டதால் தங்களது குழந்தையின் எதிர்காலம் கேள்விக்குறியாக உள்ளதாக பெற்றோர் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் ஏ.பி.எம் சர்ச் பகுதியை சேர்ந்த தம்பதி மோகன், காயத்ரி. இவர்களுக்கு 6 வயதில் ஒரு மகன் உள்ள நிலையில், காயத்ரிக்கு இரண்டாவதாக செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் ஆண் குழந்தை பிறந்துள்ளது.

பிறந்த பச்சிளம் குழந்தைக்கு மூளை வளர்ச்சி குறைபாடு உள்ளதையும், இதயத்தில் ஓட்டை உள்ளதையும் கண்டுபிடித்த மருத்துவர்கள், இது குறித்து குழந்தையின் பெற்றோரிடம் தெரிவித்துள்ளனர். மேலும் குழந்தை கருவில் இருக்கும்போது 5, 7 மற்றும் 9-வது மாதத்தில் எடுக்கப்படும் ஸ்கேன் மூலம் கண்டுபிடித்து மருத்துவர்கள் தெரிவிக்கவில்லையா எனவும் கேட்டுள்ளனர். இதனால் அதிர்ச்சியும், வேதனையும் அடைந்த மோகன், காயத்ரி தம்பதி மற்றும் அவரது உறவினர்கள், கருவுற்றிருந்தபோது மருத்துவ பரிசோதனை மேற்கொண்ட அரக்கோணம் எஸ்.ஆர்.கேட் பகுதியில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை முற்றுகையிட்டனர்.

அங்கிருந்த மருத்துவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதையடுத்து, தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த நகர காவல்துறையினர், ஸ்கேன் உள்ளிட்ட மருத்துவ ஆவணங்களை எடுத்துவரச் சொல்லி குழந்தையின் பெற்றோரையும், உறவினர்களையும் அனுப்பி வைத்தனர்.

இதுபோன்ற ஒரு சில மருத்துவர்களின் கவனக்குறைவாலும், அலட்சியத்தாலும் குழந்தையின் எதிர்காலமே கேள்விக்குறியாகி விட்டதாக பெற்றோர் குற்றஞ்சாட்டினர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow