Hard Disk-கள் திருட்டு, சிபிஐ விசாரணை தேவை: எடப்பாடி வலியுறுத்தல்
மின்வாரிய அலுவலகத்தில் Hard Disk-கள் திருட்டு தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தி உண்மையை கொண்டு வர வேண்டும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தி உள்ளார்.
சென்னை அண்ணாசாலையில் தமிழ்நாடு மின்வாரிய தலைமையகம் செயல்பட்டு வருகிறது. இந்த தலைமை அலுவலகத்திலிருந்து டெண்டர், கொள்முதல் மற்றும் விசாரணை தொடர்பான முக்கிய ரகசியத் தகவல்கள் அடங்கிய 20-க்கும் மேற்பட்ட ஹார்டு டிஸ்க்குகள் திருடப்பட்டுள்ளதாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக, நிலக்கரி கொள்முதல் தொடர்பான தகவல்கள் திருடப்பட்டு இருக்கலாம் என அதிகாரிகள் புகாரில் தெரிவித்தனர். இந்தச் சம்பவம் தொடர்பாக சிந்தாதிரிப்பேட்டை காவல் நிலையத்ல் மின்வாரிய உதவி செயற்பொறியாளர் மலர்விழி புகார் அளித்துள்ளார். இது குறித்து திருட்டு வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
திருவல்லிக்கேணி துணை காவல் ஆணையர் ஜெயச்சந்திரன் தலைமையிலான தனிப்படை விசாரணையை தொடங்கியது.மேலும், இந்தச் சம்பவம் தொடர்பாக மின்வாரிய தலைமை அலுவலக ஊழியர்கள் இருவரையும் பிடித்து சிந்தாதிரிப்பேட்டை போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
இதில், உதவி செயற்பொறியாளர் உள்பட 3 பேரை போலீசார் சந்தேகத்தின் பேரில் விசாரணை மேற்கொண்டனர். அதில் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர். அவரது பெயர் கோபிநாத் ராணிப்பேட்டை மாவட்டத்தைச் சேர்ந்தவர் என்பது தெரிய வந்தது. இவர் தனியார் மென்பொருள் நிறுவனத்தின் அதிகாரியாக உள்ளார். மின்வாரியத்தில் ஒப்பந்த அடிப்படையில் மென்பொருள் தொடர்பான பணியில் ஈடுபட்டு வருவது தெரிய வந்துள்ளது. கைதான கோபிநாத் திருடிய ஹார்டுடிஸ்குகளை பணத்திற்கு விற்றுள்ளதாக போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இந்நிலையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் தளத்தில், மின்துறை தலைமை அலுவலகத்தில் முக்கிய விவரங்கள் அடங்கிய 18 Hard Disk-கள் காணவில்லை என செய்திகள் வருகின்றன. தூயசக்தி என்று சொல்லிக்கொள்ளும் ஆட்சியில் டெண்டர் தொடர்பான தரவுகள் காணாமல் போயிருப்பதை என்னவென்று எடுத்துக்கொள்ள வேண்டும்?
நடு இரவில் திருடர்கள் வந்து திருட ,இது என்ன மந்தையில் இருக்கும் ஆடா? கண்டிப்பாக இந்த திருட்டில் ஏதோ ஒரு உள்நோக்கம், யாரையோ காப்பாற்றும் சதி இருக்கிறது என உறுதியாக சொல்லலாம்.தூரசக்தி, ஓரசக்தி என்று சொன்ன கட்சியை காப்பாற்ற முயல்கிறதா இந்த பேரசக்தி? Hard Disk திருட்டு குறித்து முறையான CBI விசாரணை நடத்தப்பட்டு , உண்மை வெளிவர வேண்டும்!. என பதிவிட்டுள்ளார்.
What's Your Reaction?