மரபணு சிகிச்சை மூலம் செவித்திறன் மீட்பு - இங்கிலாந்தில் சுவாரஸ்யம்...
மரபணு சிகிச்சை சோதனையின் மூலம் இங்கிலாந்தைச் சேர்ந்த 18 மாத சிறுமி உலகிலேயே முதன்முறையாக செவித்திறன் பெற்றுள்ளார்.
இங்கிலாந்து ஆக்ஸ்ஃபோர்ஷையரைச் சேர்ந்த 18 மாத வயதுடைய ஓபல் சாண்டி என்ற குழந்தை, காதில் இருந்து மூளைக்குச் செல்லும் இடத்தில் செவிப்புல நரம்பியல் நிலை காரணமாக முற்றிலும் காது கேளாதவராகப் பிறந்தார். தொடர்ந்து கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் NHS அறக்கட்டளையின் ஒரு பகுதியான ஆடன்ப்ரூக்ஸ் மருத்துவமனையில் குழந்தைக்கு சிகிச்சை முறை தொடங்கியது.
ஓடோஃபெர்லின் எனப்படும் புரதத்தை உருவாக்கத் தேவையான OTOF மரபணுவில் உள்ள பிழையால் செவிப்புல நரம்பியல் ஏற்பட வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து ரீஜெனெரானின் பயோடெக் நிறுவனத்தால் மரபணு சோதனைக்கான சிகிச்சைமுறை மேற்கொள்ளப்பட்டது. இந்நிலையில் கடந்த செப்டம்பர் மாதம் குழந்தைக்கு காதில் மரபணு சிகிச்சை நடத்தப்பட்டது. இதையடுத்து 24 வாரங்களுக்குப்பின் குழந்தையால் கேட்க முடிவதாக பெற்றோர் தெரிவிக்கின்றனர். தங்களது கேள்விக்கும் சத்தங்களுக்கும் குழந்தை பதிலளிப்பதாகவும் பெற்றோர் கூறுகின்றனர்.
இதன் மூலம் மரபணு சோதனையால் முதன்முறையாக செவித்திறன் பெற்றவர் என்ற பெருமையை 18 மாத குழந்தையான ஓடல் சாண்டி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
What's Your Reaction?