24 ஆண்டுகளுக்கு பிறகு வடகொரியா சென்ற புதின்... ஆரத்தழுவி வரவேற்ற அதிபர் கிம் ஜாங் உன்!
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் சுமார் 24 ஆண்டுகளுக்கு பிறகு வடகொரியா சென்றுள்ளார். அவரை வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் ஆரத்தழுவி வரவேற்றார்.

உலகின் மர்ம பிரதேசமாக கருதப்படும் நாடு வடகொரியா. இந்நாடு அடிக்கடி அணு ஆயுத சோதனை மேற்கொண்டு தென்கொரியா உள்ளிட்ட உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. இதனால் அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் வடகொரியா மீது பொருளாதரத் தடைகளை விதித்துள்ளன.
ஆனால் இது எது குறித்தும் கவலைப்படாமல் வடகொரியா தொடர்ந்து அணு ஆயுத சோதனை நடத்தி வருகிறது. இதேபோல் உலகின் வலிமையான நாடுகளில் ஒன்றான ரஷ்யா, உக்ரைன் மீது 8 ஆண்டுகளுக்கும் மேலாக தாக்குதல் நடத்தி வருகிறது.
இதை கண்டித்து வரும் மேற்கத்திய நாடுகள், ரஷ்யாவுக்கு எதிராகவும் பல்வேறு பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளன. இதனால் ரஷ்யாவும், உக்ரைனும் மேற்கத்திய நாடுகளுக்கு எதிராக ஒன்று சேர்ந்துள்ளன. உக்ரைன் மீதான ரஷ்யாவின் போரை வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் ஆதரித்து வருகிறார்.
மேலும் உக்ரைனுக்கு எதிராக பயன்படுத்துவதற்காக ரஷ்யாவுக்கு ஆயுதங்களும் வழங்கி வருகிறார். இதனால் இரண்டு நாடுகளும் நட்புறவாக உள்ள நிலையில், கடந்த ஆண்டு கிம் ஜாங் உன், ரஷ்யாவுக்கு சென்றிருந்தார். அணு ஆயுத பரிமாற்றம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து இருவரும் ஆலோசனை நடத்தினார்கள்.
இந்நிலையில், ரஷ்ய அதிபர் புதின் 24 ஆண்டுகளுக்கு பிறகு 2 நாள் பயணமாக வடகொரியா சென்றுள்ளார். இந்திய நேரப்படி நேற்று நள்ளிரவு பியோங்கியங் விமான நிலையம் சென்றடைந்த அவருக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது.
விமானத்தை விட்டு கீழே இறங்கி வந்த புதினை வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் ஆரத்தழுவி, கைகுலுக்கி புன்னகை மலர வரவேற்றார் என்றும் ரஷ்யா-வடகொரியா அதிபர்களின் இந்த நட்புறவு மற்றும் ஒற்றுமை வெல்ல முடியாத நிலைத்தன்மையை வெளிப்படுத்துகின்றன என்றும் அந்நாட்டு செய்தி நிறுவனங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த பயணத்தின்போது, புதினும், கிம் ஜாங் உன்னும் இருநாடுகளுக்கு இடையேயான உறவுகளை வலுப்படுத்துவது தொடர்பாகவும், அணு ஆயுதங்கள் பரிமாற்ற ஒப்பந்தம் செய்வது தொடர்பாகவும் ஆலோசனை நடத்த உள்ளனர்.
குறிப்பாக மேற்கத்திய நாடுகளுக்கு எதிராக வலுவான வர்த்தகம் மற்றும் பொருளாதார கொள்கையை மேம்படுத்துவது தொடர்பாக இருவரும் ஆலோசிக்க உள்ளனர் என தகவல் வெளியாகி உள்ளது.
What's Your Reaction?






