நாகையில் சிபிசிஎல் நிர்வாகத்திற்கு எதிரான உண்ணாநிலை போராட்டம் வாபஸ்... என்னென்ன உத்தரவாதங்கள் தெரியுமா?
நாகை அடுத்த பனங்குடியில் சிபிசிஎல் நிர்வாகத்தை கண்டித்து 11 நாட்களாக நடந்து வந்த விவசாயிகளின் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.
நாகை அடுத்த பனங்குடியில் சிபிசிஎல் நிர்வாகத்தை கண்டித்து 11 நாட்களாக நடந்து வந்த விவசாயிகளின் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. ஆர்ப்பாட்டம், கைது, போலீஸ் குவிப்பு என அடுத்தடுத்து பரபரப்புகளை கொண்ட இந்த உண்ணாவிரதப் போராட்டம், அரசு தரப்பில் சில உத்தரவாதங்கள் அளிக்கப்பட்ட பின்னர் முடிவுக்கு வந்துள்ளது.
நாகை மாவட்டம் நாகூரை அடுத்துள்ளது பனங்குடி கிராமம். இதில், சிபிசிஎல் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. அண்மையில் அதை விரிவாக்க திட்டமிடப்பட்ட நிலையில், அதற்காக அருகில் உள்ள நிலங்கள் கையகப்படுத்தப்பட்டன. நிலங்களின் சொந்தக்காரர்களுக்கு உரிய இழப்பீட்டுத் தொகை வழங்கப்படும் என உத்தரவாதம் அளிக்கப்பட்டது. ஆனால், விரிவாக்கப் பணிகளை தொடங்குவதில் மும்முரம் காட்டும் சிபிசிஎல் நிறுவனம், மறுவாழ்வு மற்றும் மீள் குடியமர்வு இழப்பீட்டுத் தொகையை முறையாக வழங்கவில்லை என்று குற்றச்சாட்டு எழுந்தது. இதனால் பாதிக்கப்பட்ட மக்கள், கடந்த மே 1-ம் தேதி போராட்டத்தில் இறங்கினர்.
மக்களின் கடும் எதிர்ப்பையும் மீறி, போலீஸ் பாதுகாப்போடு நிலம் அளவிடும் பணிகளை தொடங்கியது சிபிசிஎல் நிர்வாகம். இதற்காக எல்லைக் கற்கள் பதிக்கப்பட்ட நிலையில், ஆவேசமடைந்த நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள், பணிகளை தடுத்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து காவல்துறையினர் அவர்களைக் கைது செய்தனர். இதனால் போராட்டம் மேலும் வலுவடைய, நாகை மாவட்ட துணை கண்காணிப்பாளர் பாலகிருஷ்ணன், போராட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார்.
பேச்சுவார்த்தையில், ஆகஸ்ட் 30-ம் தேதிக்குள் கையகப்படுத்தப்பட்ட நிலத்திற்கான இழப்பீட்டுத் தொகை தொடர்பான கணக்கெடுப்புகள் நடத்தப்படும் என்றும், அதுதுவரை போராட்டக்காரர்கள் மீது பதியப்பட்ட வழக்குகள் படிப்படியாக நீக்கப்படும் என்றும், கைது செய்யப்பட்ட 100 விவசாயிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளிக்கப்பட்டது. போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு பழச்சாறு வழங்கப்பட்ட நிலையில் உண்ணாவிரதம் முடிவுக்கு வந்தது.
11 நாட்கள் நடந்த உண்ணாவிரத போராட்டம் வாபஸ் பெறப்பட்ட நிலையில், தங்களுக்கு நியாயம் கிடைக்காவிட்டால் மீண்டும் போராடுவோம் என்று பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.
What's Your Reaction?