வெப்ப அலை.. வெளியவே போகாதீங்க.. வயதானவர்கள் கவனம்.. முதல்வர் மு.க.ஸ்டாலின் அட்வைஸ்

வெப்ப அலை வீசக்கூடும் என்பதால் பொதுமக்கள் தேவையின்றி வெளியில் செல்ல வேண்டாம் என முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். பணி நேரங்களில் அடிக்கடி தண்ணீர் குடிக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார்.

Apr 26, 2024 - 08:23
வெப்ப அலை.. வெளியவே போகாதீங்க.. வயதானவர்கள் கவனம்.. முதல்வர் மு.க.ஸ்டாலின் அட்வைஸ்

தமிழ்நாட்டில் கடந்த சில வாரங்களாக கோடை வெயில் சுட்டெரிக்கிறது. சேலம், ஈரோடு மாவட்டங்களில் வெப்ப அலை வீசுவதால் பொதுமக்கள் வெளியே செல்ல முடியாத சூழல் நீடித்து வருகிறது. 

அக்னி நட்சத்திரம் மே மாதம் முதல் வாரத்தில் தொடங்க உள்ள சூழலில், தற்போதே வெப்பம் அதிகரித்துள்ளது. 15 ஊர்களுக்கு மேல் 100 டிகிரி பாரன்ஹீட்டிற்கு மேல் வெப்பநிலை பதிவாகியுள்ளது. வெப்பத்தை தாக்கு பிடிக்க முடியாமல் மக்கள் பகல் நேரங்களில் வீடுகளுக்குள் முடங்கியுள்ளனர். வெயில் நேரத்தில் என்ன செய்ய வேண்டும் என்ன செய்யக்கூடாது என பொது சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது. 

இந்த நிலையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில், “கோடை வெப்பம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அடுத்த 5 நாட்களுக்கு வட தமிழ்நாட்டின் உள் மாவட்டங்களில் அதிக வெப்பமும் வெப்ப அலையும் ஏற்படக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இந்த சூழலில் மக்கள் கவனத்துடனும் மிகுந்த எச்சரிக்கையுடனும் இருக்க வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளார்.

கோடை காலத்தில் மக்களை பாதுகாக்க வேண்டியது அரசின் கடமை என்பதால், தலைமைச் செயலகத்தில் அரசுத் துறை அதிகாரிகளுடன் இது தொடர்பாக விரிவான ஆலோசனை நடத்தியதாகக் குறிப்பிட்ட முதல்வர், “வெப்பம் அதிகமாகும் காலங்களில் குழந்தைகள், மாணவ மாணவிகள், வயதானவர்கள், கர்ப்பிணிகள், உடல்நலக் குறைபாடுகள் உடையவர்கள் அதிகமாக பாதிக்கப்படலாம். இவர்களை மிகக் கவனமாக பாதுகாக்க வேண்டும்” என்று கேட்டுக்கொண்டுள்ளார்.

பொதுமக்கள் தேவையின்றி வெளியில் செல்ல வேண்டாம் எனவும் முதல்வர் வலியுறுத்தியுள்ளார். பணி நேரங்களில் அடிக்கடி தண்ணீர் குடிக்க வேண்டும். தாகம் இல்லை என்றாலும், நீரை தொடர்ந்து பருக வேண்டும். மோர், அரிசிக் கஞ்சி, இளநீர், எலுமிச்சை பழச்சாறு பருகவேண்டும். நீர்ச்சத்து காய்கறிகளைச் சாப்பிட வேண்டும். பழச்சாறுகளை அதிகமாக உட்கொள்ள வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow