மூட்டை மூட்டையாக மலைபோல் குப்பைகளை சேகரித்து வைத்த மனநலம் பாதிக்கப்பட்ட பெண்...அதிகாரிகள் செய்த செயல்...
தென்காசியில் மனநலம் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர், மலைபோல் சேர்த்து வைத்திருந்த குப்பைகளை நகராட்சி அதிகாரிகள், பெரும் போராட்டத்திற்கு பின்னர் அகற்றியுள்ளனர்.
தென்காசி பழைய பேருந்து நிலையத்திலிருந்து குற்றாலம் செல்லும் சாலையில் மனநலம் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் நீண்ட காலமாக, நகரப் பகுதியில் உள்ள குப்பைகளை சிறிது, சிறிதாக சேகரித்து யானை பாலம் என்ற பகுதியில் சேமித்து வந்துள்ளார். இந்த நிலையில், அந்த மனநலம் பாதிக்கப்பட்ட பெண், தான் சேமித்த குப்பைகளை மலைபோல் அடுக்கி வைத்ததன் காரணமாக, குற்றாலம் செல்லும் சாலையை பாதியளவுக்கும் மேல் ஆக்கிரமித்ததால், போக்குவரத்துக்கு இடையூறாக இருந்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்து, தொடர் புகார்கள் எழுந்த நிலையில், தென்காசி போலீசார் அந்த ஆக்கிரமிப்புகளை அகற்ற பல நாட்களாக முயற்சி செய்து வருகின்றனர். ஆனால், அந்த மனநலம் பாதிக்கப்பட்ட பெண், அந்த குப்பைகளை அகற்ற செல்லும் போதெல்லாம் பிரச்னை செய்ததால், போலீசார் அதனை அப்புறப்படுத்த முடியாமல் திணறி வந்தனர்.
இதனிடையே அந்த வழியாக சென்ற தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டி.பி.சுரேஷ்குமார், சாலையின் நடுவே இருந்த குப்பை குவியலை கண்டு, போலீசாரிடம் விசாரித்துள்ளார். அப்பொழுது, அந்த மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை பற்றி போலீசார் கூறவே எந்த விதமான இடையூறும் இல்லாமல் சாலையில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டார்.
அதனைத்தொடர்ந்து, மனநலம் பாதிக்கப்பட்ட பெண் அந்த பகுதியில் இல்லாத நேரத்தில், போலீசார், நகராட்சி ஊழியர்கள் உதவியுடன் டன் கணக்கில் சேமித்து வைக்கப்பட்டிருந்த குப்பைகளை அங்கிருந்து அகற்றினர். இந்த நிலையில், நீண்ட நாளாக சேகரித்து வைத்திருந்த குப்பைகளை அகற்றப்பட்டுள்ள நிலையில், மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணால் வேறு ஏதேனும் பிரச்னை வருமோ என போலீசார் கலக்கத்தில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.
What's Your Reaction?