ஒரு கெட்ட செய்தி.. ஒரு நல்ல செய்தி.. தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் சொல்லும் குட்நியூஸ் என்ன?

தமிழகத்தின் வட உள் மாவட்டங்களான வேலூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், காஞ்சிபும் உள்ளிட்ட மாவட்டங்களில் மே 1 முதல் 4ஆம் தேதி வரை வெப்ப அலை உச்சத்தை எட்டும் என தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார். அதே நேரத்தில் ஒரு நல்ல செய்தியும் கூறியுள்ளார்.

Apr 26, 2024 - 17:02
ஒரு கெட்ட செய்தி.. ஒரு நல்ல செய்தி.. தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் சொல்லும் குட்நியூஸ் என்ன?

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக முன்னெப்போதும் இல்லாத அளவில் வெயிலின் தாக்கம் தீவிரமாக இருக்கிறது. பல ஊர்களில் தினசரியும் 100 டிகிரி பாரன்ஹீட்டைத் தாண்டி வெப்பம் பதிவாகி வருகிறது. 5 நாட்களுக்கு வெப்ப அலை வீசும் என்றும் வானிலை மையம் எச்சரித்திருக்கிறது. 

இந்நிலையில் இதற்கான காரணம் குறித்து தனியார் வானிலை ஆர்வலர், தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் விளக்கமளித்துள்ளார்.
பொதுவாக எல்-நினோ ஆண்டில் வெப்பம் அதிகமாக இருக்கும். ஆனால், எல்-நினோ முடிந்து அடுத்த ஆண்டும் வெப்பம் கடுமையாக இருக்கும். கடந்த 1998ம் ஆண்டு அதிக வெப்பம் பதிவாகியிருந்தது. காரணம் 1997ம் ஆண்டுதான் எல்-நினோ முடிந்தது.

கடந்த ஆண்டை எடுத்துக்கொண்டால் எல்-நினோ பாதிப்பு இருந்தது. எனவே வெப்பம் அதிகமாக இருந்தது. ஜூன் மாதத்தில் வெயில் தீவிரமாக இருந்ததால் பள்ளிகளுக்கு கூட விடுமுறை விடப்பட்டிருந்தது. சென்னையில் 15-16 நாட்கள் 40 டிகிரி செல்சியஸ் வெயில் இருந்ததை நாம் பார்த்திருக்கிறோம். அதேபோல இந்த காலங்களில் மழையும் பொய்த்துவிடும். இந்த ஆண்டை எடுத்துக்கொண்டால், வெப்பச்சலன மழை என்பது மிகவும் குறைவாகவே இருக்கிறது. 

மார்ச் இறுதியில் தொடங்கி ஏப்ரல் மாத காலங்களில் வெப்பச்சலன மழை பெய்யும். தென் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மழை தலை காட்டியிருந்தாலும், போதுமான அளவு பெய்யவில்லை. இப்படியாக மழை குறைவு மற்றும் எல்-நினோ பாதிப்பு முடிவின் அடுத்த ஆண்டு என்கிற காரணத்தினாலும் தமிழகத்தில் வெயில் சுட்டெரித்து வருகிறது.

இப்போதே இந்த அளவுக்கு வெயில் இருக்கிறது எனில், கத்திரி வெயில் எப்படி இருக்கும் என பலரும் கேள்வி எழுப்பியுள்ளனர். கத்திரி வெயில் என்பது மே மாதம் 4ம் தொடங்கி அந்த மாதம் 28ல் முடிந்துவிடும். இந்த நாட்களில் வழக்கமாக வெயில் உக்கிரமாக இருக்கும். ஆனால், கடந்த ஆண்டு ஜூன் மாதங்களில் வெயில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டை கடந்திருந்தது. அதேபோல, ஆகஸ்ட், செப்டம்பர் உள்ளிட்ட நாட்களில் தூத்துக்குடி, நெல்லை உள்ளிட்ட மாவட்டங்களில் வெயில் அதிகமாக இருந்தது.

முன்னெப்போதும் இல்லாததை விட இந்த நாட்களில் வெயில் அதிகமாக பதிவாகியிருந்தது. எனவே கத்திரி வெயில் நாட்களில் மட்டும்தான் வெப்பம் அதிகமாக இருக்கும் என்றும், அது முடிந்துவிட்டால் வெயில் தணிந்து விடும் எனவும் நினைக்க வேண்டாம். 

கடந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை தாமதமாகத்தான் தொடங்கியது. ஆனால் இந்த ஆண்டு பருவமழை நமக்கு கைகொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக ஜூன் மாதத்திலிலேயே நல்ல மழை கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும் மே இறுதியில்தான் பருவமழை குறித்து துல்லியமாக கணிக்க முடியும். வழக்கம்போல மே இறுதியில் ஜூன் தொடக்கத்தில் பருவமழை தொடங்கி விட்டால் வெப்பம் தணிந்து விடும். 

கோடை மழை: கடந்த சில நாட்களாக தென் மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. அடுத்த இரண்டு வாரங்களை பொறுத்த அளவில் கன்னியாகுமரி மாவட்டத்தில் தினமும் அல்லது ஒரு நாள் விட்டு ஒரு நாள் கோடை மழை பெய்வதற்கான வாய்ப்பு இருக்கிறது. மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள தென்காசி, ஊட்டி, கூடலூர் உள்ளிட்ட பகுதியில் மழை பெய்யும். சென்னையில் அடுத்த சில நாட்களுக்கு வெயில் அதிகரிக்கும். மழைக்கான வாய்ப்பு மிக மிக குறைவு என்றும் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.

காற்றழுத்த தாழ்வு பகுதி ஏதேனும் உருவானால் மழைக்கான வாய்ப்பு இருக்கும். மற்றபடி வேலூரில் மழை மேகங்கள் உருவானால் கூட அது சென்னை நோக்கி நகர்வதற்கான வாய்ப்பு குறைவு" என்று கூறியுள்ளார் பிரதீப் ஜான்.

இதனிடையே பிரதீப் ஜான் தனது ட்விட்டர் பக்கத்தில், மோசமான செய்தி  தமிழகத்தில் வெப்ப அலையானது மே 1 முதல் 4 வரை வட உள் தமிழகத்தில் குறிப்பாக வேலூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், காஞ்சேபுரம், ஈரோடு, சேலம், நாமக்கல், திருச்சி, கரூர் பெல்ட்களில் உச்சத்தை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில் ஒரு நல்ல செய்தி  மே 5 முதல் உள்பகுதிகளில் மழை பெய்யும் என்றும் பதிவிட்டுள்ளார்.

சென்னையில் என்ன நிலவரம் என்று ஒருவர் கேட்டதற்கு பிரதீப் ஜான் தனது ட்விட்டர் பக்கத்தில், மே 1ஆம் தேதி முதல் 4ஆம் தேதி வரைக்கும் வெப்பம்தான். மழைக்கு வாய்ப்பே இல்லை என்று பதிவிட்டுள்ளார் பிரதீப் ஜான். எது எப்படியோ இந்த ஆண்டு அக்னி நட்சத்திர காலத்தில் அனலுக்கு இதமாக கோடை மழை பெய்ய  வேண்டும் என்றே வருணபகவானை பலரும் வேண்டிக்கொள்கின்றனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow