தமிழ்நாட்டை வெளுத்த கனமழை.. ஏற்பட்ட பாதிப்புகள் என்ன?

தென் தமிழகத்தின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சியின் காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக கனமழை பெய்துள்ளது.  மதுரை மற்றும் புதுக்கோட்டை கனமழை காரணமாக சாலைகளில் மழைநீர் ஆறுபோல் பெருக்கெடுத்து ஓடியது. 

Oct 13, 2024 - 07:44
தமிழ்நாட்டை வெளுத்த கனமழை.. ஏற்பட்ட பாதிப்புகள் என்ன?

தென் தமிழகத்தின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சியின் காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக கனமழை பெய்துள்ளது.  மதுரை மற்றும் புதுக்கோட்டை கனமழை காரணமாக சாலைகளில் மழைநீர் ஆறுபோல் பெருக்கெடுத்து ஓடியது. 

மதுரை மாவட்டம் மாட்டுத்தாவணி, அண்ணா நகர், ஆட்சியர் அலுவலக சாலை, வண்டியூர், காமராஜர் சாலை, விளக்குத்தூண், பெரியார் பேருந்து நிலையம், பழங்காநத்தம் உள்ளிட்ட மாநகர் பகுதிகளில் ஒரு மணி நேரத்துக்கு மேலாக இடி மின்னலுடன் கனமழை பெய்தது. இதனால் சாலைகளில் குளம்போல் மழைநீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகினர். 

புதுக்கோட்டை மாவட்டத்தில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக கனமழை கொட்டி தீர்த்தது. குறிப்பாக நகர்பகுதிகளான ஜீவாநகர், மாப்பிள்ளையார்குளம், அடப்பன்வயல், காந்திநகர், உசிலங்குளம், அக்கச்சிவயல், சந்தப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்ததால் நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. இதனால் வீடுகளுக்குள் மக்கள் தங்க முடியாத சூழல் ஏற்பட்டதால் வீதிகளில் தஞ்சம் அடைந்தனர். முக்கிய சாலைகளில் மழைநீர் ஆறுபோல் பெருக்கெடுத்ததால் வாகன ஓட்டிகள் சிரமத்திற்குள்ளாகினர். 

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் சுற்றுவட்டாரப் பகுதியில் பலத்த காற்றுடன் கனமழை பெய்தது.  குறிப்பாக புஞ்சைபுளியம்பட்டி, பவானிசாகர் உள்ளிட்ட பகுதிகளில் இடியுடன் கூடிய கன மழை பெய்தது. இதனால் சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது. புஞ்சைபுளியம்பட்டி பகுதியில்  கழிவு நீருடன் சேர்ந்து மழை நீர் வீடுகளுக்குள் புகுந்ததால் பொதுமக்கள் சிரமத்திற்குள்ளாகினர். 

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் சுமார் இரண்டு நேரத்திற்கும் மேலாக கனமழை வெளுத்து வாங்கியதால் வெள்ளி நீர்வீழ்ச்சியில் தண்ணீர் ஆர்பரித்து கொட்டியது. இதனை ஏராளமான சுற்றுலா பயணிகள் புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர். 

கோவை மாவட்டம் ஆனைமலை அடுத்த ஆழியார் கவியருவியில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் சுற்றுலா பயணிகள் குளிக்க தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது. அருவிக்கு வரும் நீரின் அளவு சீரான பின்பு சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி வழங்கப்படும் என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே  ஆங்குடி வயல் கிராமத்தில் கனமழையால் ஓட்டு வீடு இடிந்து விழுந்து சேதமடைந்த நிலையில் வீட்டில் இருந்தவர்கள் வெளியேறியதால் உயிர்சேதம் தவிர்க்கப்பட்டது. காரைக்குடியில் கனமழையால் கடைகளில் மழை நீர் புகுந்து பாதிக்கப்பட்ட வியாபரிகளுக்கு  கணக்கு எடுக்கப்பட்டு நிவாரண வழங்கப்படும் துணை மேயர் குணசேகரன் ஆறுதல் தெரிவித்தார்.

நாமக்கல் மாவட்டம்  திருச்செங்கோடு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான தோக்கவாடி, கொல்லப்பட்டி, கூட்டப்பள்ளி, மண்டகபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்தது. இதனால் நகரின் முக்கிய சாலைகளில் மழைநீர் ஆறு போல் ஓடியதால் சிறிது நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow