சுட்டெரிக்கும் வெயில்.. தொழிலாளர்களுக்கு வேண்டிய வசதிகளை செய்யுங்கள்.. அரசு அட்வைஸ்

தமிழகத்தில் வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படும் நிலையில் தொழிலாளர்களை வெயிலிருந்து காக்கும் வகையில் தேவையான வசதிகளை செய்து தருமாறு நிறுவனங்களுக்கு தொழிலக  பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்குநரகம் அறிவுறுத்தி உள்ளது. 

Apr 26, 2024 - 17:25
சுட்டெரிக்கும் வெயில்.. தொழிலாளர்களுக்கு வேண்டிய வசதிகளை செய்யுங்கள்.. அரசு அட்வைஸ்

வட  தமிழக உள் மாவட்டங்களில் இன்று (ஏப்ரல் 26) முதல் 30.04.2024 வரை அடுத்த 5 நாட்களுக்கு ஓரிரு  இடங்களில் வெப்ப அலை வீசக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

தமிழ்நாட்டில் பல பகுதிகளில் வெப்பம் சுட்டெரித்து வருகிறது. வெயிலின் தாக்கத்தை எடுத்துரைக்க சாலையில் முட்டையை உடைத்து ஊற்றி ஆம்லேட் போட்டு சமூக வலைத்தளங்களில் நெட்டிசன்கள் பதிவு செய்து வருகின்றனர். 

இதற்கிடையில் வெப்ப அலை வீசக்கூடும் என்பதால் பொதுமக்கள் வெளியே வர வேண்டாம் என்று மாவட்ட ஆட்சியர்களும், முதலமைச்சரும் அறிவுறுத்தி வருகின்றனர். மாநில சுகாதாரத்துறையும் வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. 

இந்த நிலையில் தொழிலாளர்களுக்கு தேவையான வசதிகளை செய்து தர தொழிலக  பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்குநரகம் அறிவுறுத்தி உள்ளது. 

இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், காலையில் விரைவாக பணியை தொடங்கி மதிய வேளையில் தொழிலாளர்களுக்கு இடைவேளை அளிக்க வேண்டும் என்றும் பிறகு மாலையில் வெயில் குறைந்த பிறகு பணிகளை தொடங்க வேண்டும் என்றும் தொழிற்சாலைகள், கட்டடப் பணி, கல் குவாரி மற்றும் சாலை அமைத்தல் பணிகளை மேற்கொள்ளும் நிறுவனங்களுக்கு  அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

மேலும் பணி இடத்தில் போதுமான குடிநீர், நிழற்கூடங்கள் மற்றும் முதலுதவி வசதி ஏற்பாடு செய்ய  அறிவுறுத்தப்பட்டுள்ளது. தொழிற்சாலைகளுக்கு உள்ளே பணிபுரியும் தொழிலாளர்களுக்கு தேவையான குடிநீர் வசதியை ஏற்படுத்தி தர வேண்டும். 

வெப்பம் அதிகமான துறைகளில் பணியாற்றும் தொழிலாளர்களை சுழற்சி முறையில் பணி வழங்கும் வகையில் ஏற்பாடுகள் செய்ய வேண்டும். தொழிற்சாலைகளில் கழிவறைகளை தூய்மையாக பராமரிக்க வேண்டும். 

இந்த அறிவுறுத்தல்கள் முறையாக அமல்படுத்தப்படுகிறதா என்பதை துணை இயக்குனர்கள் கண்காணிக்க வேண்டும் என்று தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்ககம் அறிவுறுத்தி உள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow