நண்பனே திரும்பி வா..! கடற்கரையில் காத்திருந்த நண்பர்கள்..
மாமல்லபுரத்தில் கடல் அலையில் இழுத்துச் செல்லப்பட்ட நபரின் நண்பர்கள் ஒன்றிணைந்து கடற்கரையில் அவரது புகைப்படத்தை வைத்து காத்திருந்த சம்பவம் காண்போரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
ஆந்திர மாநிலம், அனந்தபூர் பகுதியை சேர்ந்த கலைக்கல்லூரி மாணவர்கள் 18 பேர் மற்றும் சித்தூர் மாவட்டம், நலகாம்பள்ளியை சேர்ந்த கலைக்கல்லூரி மாணவர்கள் என மொத்தம் 22 பேர் இரு குழுக்களாக நேற்று முன்தினம் (02.03.2024) மாமல்லபுரத்திற்கு சுற்றுலா வந்துள்ளனர். அனைத்து புராதன சின்னங்கங்களையும் சுற்றி பார்த்த கல்லூரி மாணவர்கள் கடற்கரைக்கு சென்ற நிலையில், 20-க்கும் மேற்பட்டோர் கடலில் குளித்து மகிழ்ந்துள்ளனர். கடல் சீற்றத்தினால் 10 மாணவர்கள் ராட்சத அலையால் இழுத்துச் செல்லப்பட்ட நிலையில், சக மாணவர்கள், அக்கம் பக்கத்தினர், மீனவர்கள் என பலரின் உதவியுடன் 5 மாணவர்கள் மீட்கப்பட்டு கரைக்கு அழைத்து வரப்பட்டனர்.
காணாமல் போனவர்களில் விஜய் என்பவரது சடலம் கரை ஒதுங்கிய நிலையில், மீதமுள்ள 4 பேரை தேடும் பணி தீவிரமாக நடைபெற்றது. போலீசார், தீயணைப்புத் துறையினர், சென்னை மெரினா மீட்புக் குழுவினர் என பலர் இந்த தேடுதலில் ஈடுபட்ட நிலையில், பெத்துராஜ், சேஷாரெட்டி, மவுனீஷ், பார்த்துஷா ஆகிய 4 பேரின் உடலையும் மீட்டனர். உடற்கூறு ஆய்வுக்காக அவர்களது உடல் செங்கல்பட்டு அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த நிலையில், கடலில் அடித்துச் செல்லப்பட்ட தங்களது நண்பரின் படத்தை கடற்கரையில் வைத்துக்கொண்டு சக மாணவர்கள் கண்ணீருடன் காத்திருப்பது காண்போரை கண்கலங்க வைத்துள்ளது.
What's Your Reaction?