தலைவராக பொறுப்பேற்ற முதல் விசிட்... கள்ளச்சாராய பாதிப்பால் சிகிச்சை பெறுபவர்களுக்கு நடிகர் விஜய் நேரில் ஆறுதல்
தமிழக வெற்றிக் கழகத்தின் பெயர் முறைப்படி பதிவு செய்யப்பட்டுள்ளதாக, தேர்தல் ஆணையம் சமீபத்தில் அறிவித்து இருந்தது.
கள்ளச்சாராயம் அருந்தியதால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களையும் அவர்களது குடும்பத்தினரையும் நடிகர் விஜய் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.
தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படத்தில் நடித்து வரும் விஜய், விரைவில் அரசியலில் களமிறங்கவுள்ளார். தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியைத் தொடங்கியுள்ள விஜய், பொது நிகழ்ச்சிகளிலும் அடிக்கடி பங்கேற்று வருகிறார். அதேபோல், அரசியல் ரீதியாக அறிக்கை வெளியிட்டு வருவதை பார்க்க முடிகிறது.
இந்நிலையில், கள்ளக்குறிச்சி அருகே கள்ளச்சாராயம் அருந்தி 40க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்த விவகாரத்தில், தமிழக அரசுக்கு கண்டனம் தெரிவித்த விஜய், அரசின் நிர்வாகத் திறன் பற்றியும் காட்டமாக விமர்சித்திருந்தார்.
அதன்படி விஜய் வெளியிட்ட அறிக்கையில், கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரம் பகுதியில் கள்ளச் சாராயம் அருந்திய 25க்கும் மேற்பட்டோர் காலமான செய்தி, மிகுந்த அதிர்சியையும் மன வேதனையையும் அளிக்கிறது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்வதோடு, உடல்நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்கள் விரைவில் முழு உடல்நலம் பெற இறைவனைப் பிரார்த்திக்கிறேன் எனக் கூறியிருந்தார்.
மேலும், கடந்த ஆண்டு இதே நிகழ்வு காரணமாகப் பல உயிர்களை இழந்த துயரத்தில் இருந்து இன்னும் முழுமையாக மீளாத நிலையில், மீண்டும் இப்படியொரு சம்பவம் நிகழ்ந்திருப்பது, அரசு நிர்வாகத்தின் அலட்சியத்தையே காட்டுகிறது என நேரிடையாக குற்றம் சாட்டியிருந்தார்.
இதுபோன்ற சம்பவங்கள் நிகழாத வண்ணம், இனிமேலாவது தமிழக அரசு கடுமையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு தடுக்க வேண்டும் எனவும் விஜய் வலியுறுத்தியிருந்தது அரசியல் வட்டாரத்தில் பலரது கவனத்தை ஈர்த்திருந்தது.
கள்ளக்குறிச்சிக்கு சென்ற நடிகர் விஜய் விஷச்சாராயத்தால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களையும், அவர்களது குடும்பத்தினரையும் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.
தமிழக வெற்றிக் கழகத்தின் பெயர் முறைப்படி பதிவு செய்யப்பட்டுள்ளதாக, தேர்தல் ஆணையம் சமீபத்தில் அறிவித்து இருந்தது. கட்சியின் தலைவராக விஜய்யும், பொதுச் செயலாளர் ஆனந்த், பொருளாளர் வெங்கட்ராமன், தலைமை கழக செயலாளர் ராஜசேகர், இணை கொள்கை பரப்புச் செயலாளராக தகிரா ஆகியோர் பெயரும் இடம் பெற்றது.
இந்நிலையில், தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவராக பொது நிகழ்ச்சியில் முதன் முறையாக கலந்துகொண்டது குறிப்பிடத்தக்கது.
What's Your Reaction?