பழங்குடியினர் நிலத்தில் ஈஷா தகன மேடை - ஆய்வுக்கு சென்றவர்களை தாக்கிய வழக்கில் முன்ஜாமின்

ஈஷா தகன மேடைக்கு செல்லும் வழி மற்றும்  குளம் அமைந்துள்ள பகுதி ஈஷாவுக்கு சொந்தமானதல்ல எனவும் அது நில உச்சவரம்பு சட்டத்தின் படி பழங்குடியின மக்களுக்கு சொந்தமானது என கூறினார்.

Jun 21, 2024 - 15:52
பழங்குடியினர் நிலத்தில் ஈஷா தகன மேடை - ஆய்வுக்கு சென்றவர்களை தாக்கிய வழக்கில் முன்ஜாமின்

கோவையில் ஈஷா மையத்தில் தகன மேடையை ஆய்வு செய்யச் சென்ற பெரியார் திராவிடர் கழகத்தினரை தாக்கியதாக பதியப்பட்ட வழக்கில், ஈஷா அறக்கட்டளையைச் சேர்ந்த இருவருக்கு இடைக்கால முன் ஜாமீன் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கோவை முட்டத்துவயல் பகுதியில் பழங்குடியின மக்களுக்கு சொந்தமான நிலத்தில், ஈஷா அறக்கட்டளை சார்பில் மின் தகன மேடை அமைக்கப்பட்டு வருகிறது. இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில், பெரியார் திராவிடர் கழகத்தினரின் உண்மை கண்டறியும் குழு மின் தகன மேடையை கடந்த 15ம் தேதி ஆய்வு செய்ய சென்றது. 

அப்போது, ஈஷா அறக்கட்டளை நிர்வாகிகள், பெரியார் திராவிடர் கழக அமைப்பினர் மீது தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது. இதனையடுத்து முற்போக்கு அமைப்பினர் அளித்த புகாரின் அடிப்படையில், ஈஷா அறக்கட்டளையைச் சேர்ந்தவர்கள் மீது காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்தனர்.

இந்த வழக்கில் முன் ஜாமீன் கோரி ஈஷா அறக்கட்டளையைச் சேர்ந்த தினேஷ் ராஜா, வெங்கடராசா ராதாகிருஷ்ணன் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தனர். 

நீதிபதி T.V.தமிழ்ச்செல்வி முன் இந்த மனு விசாரணைக்கு வந்த போது, மனுதாரர்கள் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஏ.கே. ஸ்ரீராம், உண்மைக் கண்டறியும் குழுவின் சோதனை என்ற பெயரில் தங்களது நிலத்தில் அத்துமீறி நுழைந்ததாகவும், அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையால்  இந்த வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறினார். 

தந்தை பெரியார் திராவிடர் கழகம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் எம்.புருஷோத்தமன், ஈஷா தகன மேடைக்கு செல்லும் வழி மற்றும்  குளம் அமைந்துள்ள பகுதி ஈஷாவுக்கு சொந்தமானதல்ல எனவும் அது நில உச்சவரம்பு சட்டத்தின் படி பழங்குடியின மக்களுக்கு சொந்தமானது என கூறினார். 

அப்போது, குளம் அமைந்துள்ள பகுதி ஈஷாவுக்கு சொந்தமானதா? என நீதிபதி கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த ஈஷா தரப்பு வழக்கறிஞர், நேரடியாக ஈஷா மையத்துக்கு சொந்தமானது அல்ல; ஆனால் ஈஷாவில் பணிபுரிவர்களுக்கு சொந்தமானது என தெரிவித்தார். 

இதனையடுத்து, அந்த குளத்தை பயன்படுத்த மாட்டோம் என பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய ஈஷாவுக்கு உத்தரவிட்ட நீதிபதி, மனுதாரர்கள் இருவருக்கும் இடைக்கால முன் ஜாமீன் வழங்கி விசாரணையை ஜூலை 11ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow