கோயம்பேட்டில் அதிகாரிகள் திடீர் ரெய்டு..!ரசாயனம் மூலம் பழுக்கவைக்கப்பட்ட 9 டன் பழங்கள் பறிமுதல்.
4 டன் மாம்பழங்கள், 5 டன் வாழைப்பழங்கள் என மொத்தமாக 9 டன் பழங்கள் சிக்கின.
கோயம்பேடு மார்க்கெட்டில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில் கார்பைடு மற்றும் பல ரசாயனங்கள் மூலம் பழுக்கவைக்கப்பட்ட 9 டன் பழங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
கோடை என்றாலே மாம்பழம் உள்பட பல பழங்களின் விற்பனை சூடுபிடித்து விடும். அதேவேளையில் மாம்பழங்களை கார்பைடு மூலம் விரைந்து பழுக்க வைத்து விற்பனை செய்வதும் சர்வ சாதரணமாக நிகழ்ந்து வருகிறது.
இயற்கையான முறையில் பழங்களை பழுக்க வைக்காமல், கார்பைடு மூலம் பழுக்க வைப்பதால் மிக அதீத உடல் பாதிப்புகள் ஏற்படக்கூடும் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். குறிப்பாக தலைவலி, மூச்சு பிரச்னை, தலைச்சுற்றுதல், வாய்ப்புண், வயிற்றுப்புண் ஆகியவை ஏற்படும் எனவும் கூறப்படுகிறது.
இதேவேளையில், கோயம்பேட்டில் உள்ள மொத்த கடைகளில் பழங்கள் கார்பைடு மற்றும் ரசாயன கற்கள் மூலம் பழுக்கவைக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருவதாக புகார் எழுந்தது. அதைதொடர்ந்து, உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் அதிகாலை 6மணி முதலே கோயம்பேட்டில் திடீர் சோதனையில் இறங்கினர்.
அப்போது, கார்பைடு மற்றும் ரசாயன கற்கள் மூலம் பழுக்கவைக்கப்பட்ட 4 டன் மாம்பழங்கள், 5 டன் வாழைப்பழங்கள் என மொத்தமாக 9 டன் பழங்கள் சிக்கின. அதனை பறிமுதல் செய்த அதிகாரிகள், பழக்கடைக்காரர்களுக்கு எச்சரிக்கை விடுத்ததுடன், அவர்களுக்கு அபராதம் விதித்தனர்.
What's Your Reaction?