அமித் ஷா பற்றி போலி செய்தி... வெளியிட்ட காங். பிரமுகர் கைது!
இதுபோன்ற வீடியோக்களைப் பயன்படுத்தி, சமூகத்தில் பதற்றத்தை உருவாக்க வேண்டும் என்பதே அவர்களது திட்டம் என்று பிரதமர் மோடி சாடல்
உள்துறை அமைச்சர் அமித் ஷாவை பற்றி போலியான வீடியோவை வெளியிட்ட காங்கிரஸ் பிரமுகரை கைது செய்துள்ளதாக அசாம் முதலமைச்சர் ஹிமந்தா பிஸ்வா செய்தி வெளியிட்டுள்ளார்.
அட்டவணை பிரிவினருக்கான இடஒதுக்கீட்டை பாஜக அரசு ரத்து செய்யப்போகிறது என்று உள்துறை அமைச்சர் பேசியதாக இணையதளத்தில் புகார் தெரிவித்து, வீடியோ ஒன்றை ரீதம் சிங் என்பவர் பதிவிட்டிருந்தார். அதில், எப்படி அம்பானிக்கும் அதானிக்கும் அனைத்து வளங்களையும் கொடுக்க பாஜக திட்டமிடுகிறதோ, அதேபோல் வெறும் 3% மட்டுமுள்ள பிராமணர்களுக்கு அரசு வேலைகளை முற்றிலும் ஒதுக்கும் எண்ணத்துடன் பாஜக செயல்படுகிறது என்று குற்றம்சாட்டியிருந்தார். மேலும், இது ஜனநாயக படுகொலை என்றும், அம்பேத்கர் வடிவமைத்த அரசியல் சாசனத்தையே இழிவுபடுத்தும் செயல் என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
இந்த விவகாரம் சர்ச்சையான நிலையில், அந்த வீடியோ போலியானது என்று பாஜகவின் தேசிய தொழில்நுட்ப துறையின் பொறுப்பாளர் அமித் மால்வியா குற்றம்சாட்டினார். மேலும், அமித்ஷாவின் வேறோரு பேச்சின் வீடியோவை எடுத்து, எடிட் செய்து இவ்வாறு திரித்து கூறப்பட்டுள்ளது என்றும் அவர் தமது எக்ஸ் தள பதிவில் வெளியிட்டிருந்தார். உண்மையான வீடியோவில், இஸ்லாமியர்களுக்கும், அட்டவணைப் பிரிவினர்களுக்கும் அரசியமைப்பை மீறி வழங்கப்பட்டுள்ள சில இடஒதுக்கீடு சலுகைகளை ரத்து செய்ய வேண்டும் என்றே அமித் ஷா பேசியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த வீடியோவை வைத்து தெலங்கானா காங்கிரஸார் அரசியல் செய்வதை அவர் கண்டித்தும் பதிவிட்டுள்ளார்.
ரேவந்த் ரெட்டிக்கு சம்மன் :
இதற்கிடையில் இச்சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்துள்ள டெல்லி காவல்துறை, தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டிக்கு சம்மன் அளித்துள்ளது. அதில், வரும் மே 1-ம் தேதி ரேவந்த் ரெட்டி, தனது செல்போனுடன் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்று தெரிவித்துள்ளது. ஆனால், இதற்குப் பொதுகூட்டம் ஒன்றில் பேசியபோது பதிலளித்த முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி, தான் இதற்கெல்லாம் அஞ்சப்போவதில்லை என்றும், டெல்லி காவல்துறையைப் பயன்படுத்தி மோடி இந்தத் தேர்தலை வெல்ல நினைப்பது நடக்காது என்றும் அவர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
வீடியோ வெளியிட்டவர் கைது :
இந்நிலையில், வீடியோ வெளியிட்ட ரீதம் சிங்கை, அசாம் போலீசார் கைது செய்துள்ளதாக அம்மாநில முதலமைச்சர் ஹிமந்தா பிஸ்வா பதிவிட்டுள்ளார். ரீதம் சிங், காங்கிரஸ் கட்சியின் தொழில்நுட்ப துறையில் முக்கிய பொறுப்பில் உள்ளவர் என்ற தகவல், அவரது எக்ஸ் தள முகவரி மூலம் தெரியவந்துள்ள நிலையில், அவதூறு கருத்து பரப்பியது, போலி வீடியோ வெளியிட்டது உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் அவர் மீது வழக்குப் பதிவு செய்து அசாம் காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.
பிரதமர் மோடி சாடல் :
இந்நிலையில், மகாராஷ்டிர மாநிலம் சதாராவில் இது பற்றி பேசிய பிரதமர் நரேந்திர மோடி, பாஜகவையும், தேசிய ஜனநாயக கூட்டணியையும் நேரடியாக எதிர்கொள்ள முடியாதவர்கள், என்னைப் போலவும் அமித் ஷாவை போலவும் போலி வீடியோக்களை, செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி தயாரித்து பரப்பி விடுகின்றனர் என்று சாடினார். இதுபோன்ற வீடியோக்களைப் பயன்படுத்தி, சமூகத்தில் பதற்றத்தை உருவாக்க வேண்டும் என்பதே அவர்களது திட்டம் என்றும் சாடினார்.
What's Your Reaction?