ஜனவரி 1 முதல் பாட்டில் குடிநீருக்கு தடை ? இந்திய உணவு பாதுகாப்பு ஆணையம் புது உத்தரவு
'பாட்டில்களில் குடிநீரை அடைத்து விற்கும் நிறுவனங்கள், வரும் ஜன.,1 முதல் புதிய தரப்பரிசோதனை விதிகளை பின்பற்றுவது கட்டாயம்' என எப்.எஸ்.எஸ்.ஏ.ஐ., எனும் இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் அறிவித்துள்ளது. புதிய பரிசோதனையை செயல்படுத்த நிறுவனங்களின் குடிநீர் பாட்டில் விற்பனை தடை விதிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், எப்.எஸ்.எஸ்.ஏ.ஐ., வெளியிட்ட உத்தரவில் கூறியிருப்பதாவது: பாட்டில் மற்றும் மினரல் குடிநீர் நிறுவனங்கள், பி.ஐ.எஸ்., சான்றிதழ் பெறுவது கட்டாயம் என்பது நீக்கப்பட்டு உள்ளது.அதற்குப் பதிலாக, குடிநீர் நிறுவனங்கள், புதிய தரப்பரிசோதனை முறைகளை பின்பற்றுவது, வரும் ஜன.,1 முதல் கட்டாயமாகிறது.
இந்திய சந்தையில், பாதுகாப்பான குடிநீர் கிடைப்பதை உறுதி செய்யும் வகையில், குடிநீரின் தரம், பாதுகாப்பு மற்றும் அதில் உள்ள தாதுப்பொருட்கள் அளவை எப்.எஸ்.எஸ்.ஏ.ஐ., நிர்ணயித்துள்ளது.இதன்படி, குடிநீரில் உள்ள நுண்கிருமிகள் தொடர்பான அளவீடுகளை,
மாதம் ஒருமுறை கட்டாயம் பரிசோதிப்பதோடு, பிற அளவீடுகளை, மூன்று மாதங்களுக்கு ஒருமுறை பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும். மேலும், உணவு சார்ந்த தொழிலில் ஈடுபட்டுள்ள நிறுவனங்கள், இரண்டு ஒழுங்குமுறை அமைப்புகளிடம் இருந்து சான்றிதழ் பெற தேவையில்லை என அரசின் உத்தரவுக்கு இணங்க, பி.ஐ.எஸ்., சான்றிதழ் பெறுவது நீக்கப்பட்டுள்ளது. இனி குடிநீர் நிறுவனங்கள், எப்.எஸ்.எஸ்.ஏ.ஐ., உரிமம் மட்டும் பெற்றால் போதுமானது.
புதிய தரப்பரிசோதனை முறைகளை பின்பற்றாத குடிநீர் பாட்டில்கள் விற்பனை செய்ய தடை விதிக்கப்படும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
What's Your Reaction?

