பாதாள சாக்கடையில் மனிதர்கள் இறங்குவது முழுமையாக ஒழிக்கப்படவில்லை... ஐகோர்ட் நீதிபதிகள் வேதனை
பாதாள சாக்கடைகளில் மனிதர்கள் இறங்கும் நடைமுறை முழுமையாக ஒழிக்கப்படவில்லை என வேதனை தெரிவித்த சென்னை உயர் நீதிமன்றம், இந்த நடைமுறையை ஒழிக்க அனைத்து முயற்சிகளையும் எடுக்க வேண்டுமென தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.
 
                                பாதாளச் சாக்கடைகள், கழிவுநீர் தொட்டிகளை சுத்தம் செய்யும் பணிக்கு மனிதர்களை பயன்படுத்தக் கூடாது, விஷவாயு தாக்கி பலியானவர்களுக்கு போதிய நிவாரணம் வழங்கவேண்டும், இதனை செய்வோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரி சபாய் கர்மாச்சாரி அந்தோலன் என்ற அமைப்பின் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் கடந்த 2017-ஆம் ஆண்டு வழக்கு தொடரப்பட்டிருந்தது.
இந்த வழக்கு, தலைமை நீதிபதி கங்காபுர்வாலா மற்றும் நீதிபதி சத்தியநாராயண பிரசாத் அமர்வில் இன்று (ஏப்ரல் 29) மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது, நாடு சுதந்திரமடைந்து 46 ஆண்டுகளுக்குப் பின் பாதாள சாக்கடைகளை சுத்தம் செய்வதற்கு மனிதர்களை பயன்படுத்த தடை விதித்து சட்டம் இயற்றப்பட்டுள்ளது. மனித தன்மையற்ற அந்த நடைமுறையை ஒழிக்க இந்த சட்டத்தை கண்டிப்புடன் பின்பற்ற வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
மேலும் உச்சநீதிமன்றம் பல உத்தரவுகள் பிறப்பித்த போதும், பாதாள சாக்கடைகளில் மனிதர்கள் இறங்கும் நடைமுறை முழுமையாக ஒழிக்கப்படவில்லை என நீதிபதிகள் வேதனை தெரிவித்தனர்.
இந்த நடைமுறையை ஒழிக்க அனைத்து முயற்சிகளையும் எடுக்க வேண்டும் என்றும், தமிழக அரசுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள்
பாதாள சாக்கடைகளில் மனிதர்களை இறக்குவதைத் தடுக்கும் வகையில், இயந்திரங்களை பயன்படுத்த வேண்டும் எனவும் அரசுக்கு அறிவுறுத்தினர்.
பின்னர், பாதாள சாக்கடைகளில் மனிதர்களை இறங்கச் செய்பவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும என்றும் தூய்மைப் பணிகளுக்கு பதில் இயந்திரங்களை பயன்படுத்த வேண்டும் என்றும் பாதாள சாக்கடைகளில் மனிதர்களை இறக்க தடை விதிக்கும் 2013 ஆம் ஆண்டு சட்டத்தை கண்டிப்புடன் அமல்படுத்த வேண்டும் என்றும் தமிழக அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
அதேபோல, பாதாள சாக்கடைகளில் இறங்கி உயிரிழக்கும் தொழிலாளர்களுக்கு தற்போது ரூ.30 லட்சம் இழப்பீடு வழங்கப்படுகிறது. படுகாயமடைந்தவர்களுக்கு காயத்துக்கு ஏற்ப ரூ.20 லட்சம் வரை இழப்பீடு வழங்கப்படுகிறது. இந்த இழப்பீட்டுத் தொகையை மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை அதிகரிக்க வேண்டும் எனவும், பலியாவோரின் குடும்பத்தினருக்கு கருணை அடிப்படையில் வேலைவாய்ப்பு வழங்கவேண்டும் என உத்தரவிட்ட நீதிபதிகள், இந்த உத்தரவுகளை அரசு முழுமையாக பின்பற்றும் என நம்பிக்கை தெரிவித்து, வழக்கு விசாரணையை ஆகஸ்ட் 5 ஆம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.
What's Your Reaction?
 
                    
                
 
                    
                
 
                    
                
 
                    
                
 
                    
                
 
                    
                
 
                    
                
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

 
                                                                                                                                             
                                                                                                                                             
                                                                                                                                            
 
                                             
                                             
                                             
                                             
                                             
                                             
                                             
                                             
                                            