“நாட்டின் வளர்ச்சியை கண்டு காங். கூட்டணிக்கு தூக்கம் வரவில்லை! நாட்டுக்கு செலவு செய்வதும் பிடிக்கவில்லை!” - பிரதமர் மோடி சாடல்
வளர்ச்சியை நோக்கிய இந்தியாவின் தற்போதைய வேகத்தில் எந்த சமரசமும் செய்துகொள்ள முடியாது
ஹரியானா மாநிலத்தில் ரூ.4,100 கோடி செலவில் துவாரகா விரைவுச் சாலையைத் தொடங்கி வைத்த பிரதமர் நரேந்திர மோடி, நாட்டின் வளர்ச்சியைக் கண்டு காங்கிரஸ் கூட்டணிக்குத் தூக்கம் வரவில்லை என்றும், வளர்ச்சிக்கு செலவு செய்வது அவர்களுக்குப் பிடிக்கவில்லை என்றும் சாடினார்.
டெல்லி – ஹரியானா இடையில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில் துவாரகா 8 வழி விரைவுச் சாலை உருவாக்கப்பட்டுள்ளது. டெல்லியில் உள்ள இந்திராகாந்தி சர்வதேச விமான நிலையத்திலிருந்து குருகிராம் புறவழிச்சாலைக்கு நேரடி இணைப்பை வழங்கும் இந்த விரைவுச் சாலை, ரூ.4,100 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ளது. இந்தப் புறவழி விரைவுச்சாலையை இன்று (மார்ச் 11) ஹரியானாவில் பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார். தொடர்ந்து நாட்டிற்கு பல்வேறு நலத்திட்ட பணிகளைத் தொடங்கினார்.
அதன் பின்னர் நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர் மோடி, ஹரியானாவில் திறக்கப்பட்டுள்ள துவாரகா விரைவுச் சாலை மூலம் மக்கள் இனி அப்பகுதியில் அச்சமின்றி பயணம் செய்யலாம் என்று கூறினார். முன்னர் அப்பகுதியில் பாதுகாப்பு இல்லாததால் மக்கள் இரவுகளில் செல்ல அச்சப்பட்டதாகக் கூறிய அவர், தற்போது விரைவுச்சாலையைச் சுற்றி பல நிறுவனங்கள் தொடங்கப்படவுள்ளதால் மக்கள் பாதுகாப்பாக உணரலாம் என்று தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், காங்கிரஸ் மற்றும் இந்தியா கூட்டணியைக் கடுமையாகச் சாடினார்.
பாஜக அரசு நாட்டுக்காக செலவு செய்வதை பொறுக்கமுடியாத காங்கிரஸ் கூட்டணி, மோடி நாடாளுமன்ற தேர்தலைக் கருத்தில் கொண்டு பணி செய்வதாக விமர்சனம் செய்து வருகின்றனர் என்று பேசினார். உண்மையில், லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட பணிகளால் நாடு வளர்ச்சி அடைந்திருப்பதைக் கண்டு காங்கிரஸ் கூட்டணியினருக்கு தூக்கம் வரவில்லை என்று சாடினார். கடந்த 10 ஆண்டுகளில் நாடு பல விதங்களில் முன்னேறியுள்ளதாகக் குறிப்பிட்டார். 2047-ம் ஆண்டுக்குள் இந்தியாவை முழுமையாக வளர்ச்சியடைந்த நாடாக பார்ப்பதே தமது கனவு என்று கூறிய பிரதமர் மோடி, வளர்ச்சியை நோக்கிய இந்தியாவின் தற்போதைய வேகத்தில் எந்தவித சமரசமும் செய்துகொள்ள முடியாது என்றும் கூறினார்.
What's Your Reaction?