தக்காளி சாஸ் பாட்டிலில் புழு.. நடிகரின் பரபரப்பு வீடியோ.. அதிரடி சோதனை நடத்திய அதிகாரிகள்
குன்னூரில் உள்ள உணவகம் ஒன்றில் தக்காளி சாஸில் புழு இருப்பதாக நடிகர் விஜய் விஸ்வா வெளியிட்ட வீடியோ பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட உணவகத்தில், உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
நீலகிரி மாவட்டம் குன்னூரில் Mciver villa என்ற உணவகம் உள்ளது. இந்த உணவகத்திற்கு அட்டக்கத்தி, பிகில், கும்பாரி உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்த நடிகர் விஜய் விஸ்வா, தனது நண்பர்களுடன் நேற்று உணவருந்த சென்றார். அப்போது அவர்களுக்கு கொடுக்கப்பட்ட தக்காளி சாஸ் பாட்டிலில் இருந்து துர்நாற்றம் வந்தது. உடனடியாக அதை திறந்து பார்த்த அவர்களுக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. தாக்காளி சாஸ் பாட்டிலுக்குள் சில புழுக்கள் கிடந்ததைப் பார்த்த விஜய் விஸ்வா, அங்கு வேலை செய்த செஃபிடம் சென்று இதுபற்றி கேட்டார். ஆனால் அவர் அலட்சியமாக பதிலளித்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த விஜய் விஸ்வா, சாஸ் பாட்டிலில் புழு கிடந்ததை வீடியோ எடுத்து தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டார்.
அதேநேரம் இது தொடர்பாக வெளியே சொல்லாதீர்கள் என உணவக மேலாளர், நடிகர் விஜய் விஸ்வாவின் காலில் விழுந்து கதறிய வீடியோவும் தற்போது வெளியாகி உள்ளது.
இதையடுத்து உணவுப் பாதுகாப்புத் துறைக்கு விஜஸ் விஸ்வா தகவல் அளித்தார். ஆனா, நீலகிரி மாவட்டத்தில் உணவு பாதுகாப்புத்துறையில் 3 அதிகாரிகள் மட்டுமே இருந்ததால் அவர்களால் உடனடியாக அங்கு ஆய்வு மேற்கொள்ள முடியவில்லை என கூறப்படுகிறது. இந்த நிலையில் இன்று உணவு பாதுகாப்பு துறை அதிகாரி நந்தகுமார், உணவகத்திற்கு சென்று ஆய்வு செய்தார். பிறகு பேட்டியளித்த அவர், உரிய விசாரணை நடத்தி நோட்டீஸ் வழங்கி அபராதம் விதிக்கப்படும் என்று கூறினார்.
தொடர்ந்து பேட்டியளித்த ஹோட்டல் மேனேஜர் டொமினிக் சேவியர், எங்களது நிறுவனத்தில் சாஸ் தயாரிக்கவில்லை. காலாவதி தேதிகளை பார்த்து தான் சாஸ் பாட்டிலை வாங்கி வந்தோம் எனக் கூறினார்.
அதேசமயம் புகார் அளித்த 24 மணி நேரத்திற்கு பிறகு உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் உணவகத்தில் ஆய்வு மேற்கொண்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. கோடை விடுமுறையை முன்னிட்டு சுற்றுலா பயணிகள் குன்னூர், உதகைக்கு படையெடுக்க தொடங்கியுள்ளனர். இந்த நிலையில் உணவகத்தில் தரமற்ற உணவு வழங்கப்படுவதாக நடிகரே வெளியிட்ட புகார், சுற்றுலா பயணிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
What's Your Reaction?