சர்ஃபராஸ் கான், ஷமார் ஜோசப், துருவ் ஜுரல்… எளியவர்கள் எப்படி சாதிக்கிறார்கள்?
செக்யூரிட்டியாக வேலை பார்த்த மேற்கிந்தியத் தீவுகளின் ஷமார் ஜோசப், ஆஸ்திரேலியாவில் கொடி நாட்டினார். சில வருடங்களுக்கு முன்பு, தந்தைக்கு உதவியாக பானி பூரி விற்ற ஜெய்ஸ்வால், தற்போது இந்திய அணியின் அதிரடி மன்னன். அந்த வரிசையில், இப்போது சர்ஃபராஸ் கானும் துருவ் ஜூரலும் சேர்ந்துள்ளனர்.
விளிம்பு நிலையில் இருந்து உச்சத்தை தொடுபவர்களின் கதைகள், கிரிக்கெட்டிற்கு புதிதல்ல. ஆஸ்திரேலியாவில் அப்படிப்பட்ட வீரர்களை ’புஸ்ஸி’ என்பார்கள். மேற்கிந்தியத் தீவுகள் அணியில் ஜாம்பவான் கேப்டன் கிளைவ் லாயிட் தொடங்கி சமீபத்திய ஹீரோ ஷமார் ஜோசப் வரை பலரை உதாரணமாக சொல்ல முடியும்.
எளியவர்கள் எப்படி சாதிக்கிறார்கள்? சாதாரண பின்னணியில் இருந்து வருபவர்கள் வாழ்க்கையில் நிறைய சோதனைகளை பார்த்திருப்பார்கள். அத்துடன் ஒப்பிடும் போது கிரிக்கெட் மைதானத்தில், பதற்றமின்றி எதிரணியை எதிர்கொள்வது என்பது தலை போகின்ற காரியமல்ல்.
ஷமார் ஜோசப் காலனி வாங்குவதற்கு கடுமையான சோதனைகளை சந்தித்தவர். சர்ஃபராஸ் கான், கழிப்பறை வசதி கூட இல்லாத குடும்பத்தில் பிறந்தவர். துருவ் ஜூரல், பேட் வாங்குவதற்கு அவருடைய தாய் தனது நகையை அடகு வைக்க வேண்டியிருந்தது. இவர்கள் எல்லாரும் தங்களுடைய முதல் டெஸ்டிலேயே சாதித்துள்ளனர்.
இரண்டாம் உலகப் போரில் போர் விமானம் ஓட்டியவர் ஆஸ்திரேலிய முன்னாள் ஆல்ரவுண்டர் கீத் மில்லர். அவரிடம் ’பிரசர்’ (Pressure) பற்றி கேட்ட போது ’போர் விமானத்தில் பறந்தவனுக்கு கிரிக்கெட் எல்லாம் ஒன்றுமில்லை’ என்கிற தொனியில் பதில் சொன்னார். பொதுவாக இதுபோன்ற வீரர்கள் தங்கள் முதல் சர்வதேச ஆட்டத்திலேயே முத்திரை பதிப்பார்கள்.
கிரிக்கெட்டில் இதனை ‘டெம்பரமெண்ட்’ (Temperement) என்கிறார்கள். சமீபத்தைய உதாரணங்களாக ரிங்கு சிங், ஜெயிஸ்வால், சாய் சுதர்சன் போன்றவர்களை சொல்லலாம். ’ஒருவர் எவ்வளவு பெரிய திறமையாளராக வேண்டுமானாலும் இருக்கட்டும். ஆனால், அவருக்கு டெம்பரமெண்ட் இல்லையென்றால் அவரை நான் ஒரு நல்ல கிரிக்கெட்டராக மதிக்க மாட்டேன்’ என்கிறார் பிராட்மேன்.
இவர்கள் அனைவருக்கும் உள்ள ஒற்றுமை, பதின்ம வயதில் இல்லாமல் 23 -25 வயதுகளில் சர்வதேச கிரிக்கெட்டில் கால்தடம் பதித்தவர்கள். மிகப் பெரிய மேதைகள் பலர், பதின்ம வயதில் சர்வதேச கிரிக்கெட்டுக்கு அறிமுகமாகி, போதிய பக்குவம் இல்லாமல் கிரிக்கெட்டை தொலைத்திருக்கிறார்கள். நியூசிலாந்து முன்னாள் கேப்டன் மார்டின் குரோ, பதின்ம வயதில் அறிமுகமானது தான் தன்னுடைய கஷ்டங்களுக்கு காரணம் என்கிறார்.
எளிய பின்னணியில் இருந்து வந்த ஷமார் ஜோசப், சர்ஃபராஸ் கான், துருவ் ஜூரல் ஆகியோரின் வெற்றி இளைஞர்களுக்கு வழிகாட்டட்டும்!
What's Your Reaction?