பிரசாரத்துக்கு IAF ஹெலிகாப்டரா? பிரதமர் மீது நடவடிக்கையா?.. சட்டம் சொல்வது என்ன..
ஆந்திராவில் தேர்தல் பிரசாரத்துக்கு இந்திய விமானப்படையின் ஹெலிகாப்டரை பயன்படுத்தியதாக பிரதமர் நரேந்திர மோடி மீது திரிணாமுல் காங்கிரஸ் சார்பில் தேர்தல் ஆணையத்தில் புகாரளிக்கப்பட்டுள்ளது. இந்த மாதிரியான புகாரில் 1975-ஆம் ஆண்டு இந்திர காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்ட நிலையில், சட்டம் கூறுவது என்ன? வாங்க பார்க்கலாம்.
மக்களவைத் தேர்தல், ஏப்ரல் 19-ம் தேதி தொடங்கி ஜூன் 1ம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெறுகிறது. இந்த முறை தேசிய ஜனநாயக கூட்டணிக்கும், இந்தியா கூட்டணிக்கும் போட்டி நிலவுகிறது. இதனால், அனல்பறக்கும் பிரசாரத்தில் இரு கூட்டணி கட்சிகளும் ஈடுபட்டுள்ளன. அதன் ஒரு பகுதியாக, கடந்த 18ம் தேதி ஆந்திராவின் பால்நாடு பகுதியில் பிரதமர் நரேந்திர மோடி தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். கூட்டத்தில் பிரதமருடன் TDP தலைவர் சந்திரபாபு நாயுடு, ஜனசேனா தலைவர் பவன்கல்யாண் ஆகியோரும் உடனிருந்தனர். இந்தக் கூட்டத்திற்காக இந்திய விமானப்படையின் ஹெலிகாப்டரை பயன்படுத்தி பிரதமர் பிரசாரத்தில் ஈடுபட்டதாக எழுந்த குற்றச்சாட்டு பூதாகரமாகியுள்ளது.
இதுதொடர்பாக X தளத்தில் பதிவிட்டுள்ள மேற்குவங்கத்தின் திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி சாகெட் கோகலே, இந்திய விமானப்படை ஹெலிகாப்டரை தேர்தல் பிரசாரத்திற்கு பயன்படுத்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக தேர்தல் ஆணையத்திடம் புகாரளிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். பிரசாரத்திற்கு அரசு வாகனங்கள் பயன்படுத்தப்படுவதை தேர்தல் ஆணையம் முற்றிலும் தடை செய்வதாகவும், அதனை மீறியதால் முன்னாள் பிரதமர் இந்திராகாந்தி 1975ம் ஆண்டு தகுதிநீக்கம் செய்யப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஒருவேளை IAF ஹெலிகாப்டரை வாடகைக்கு எடுக்க பாஜக பணம் செலுத்தியிருந்தால், IAF ஹெலிகாப்டர் ஏன் அவசியம் என்பதை தேர்தல் ஆணையம் தெளிவுபடுத்த வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
மக்களவைத் தேர்தல் நெருங்கும் நிலையில், இந்தக் குற்றச்சாட்டால் பிரதமர் நரேந்திரமோடி மீது நடவடிக்கை எடுக்கப்படுமா? சட்டம் என்ன சொல்கிறது?
தேர்தல்களின் போது, விதிவிலக்குகளுக்கு உட்பட்டு பிரசாரத்திற்காகவோ தேர்தல் பயணங்களுக்காகவோ அரசின் வாகனங்களை பயன்படுத்த முழுமையான தடை விதிக்கப்படும் என இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவுறுத்துகிறது. அதன்படி அரசுக்கு சொந்தமான ஹெலிகாப்டர், விமானங்கள், கார்கள், ஜீப்புகள், படகுகள் போன்ற வாகனங்களை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஆனால் இந்தியத் தேர்தல் ஆணைய வழிகாட்டுதல்களின் 105வது பக்க 83வது வழிமுறையின்படி, ஒரு முக்கிய விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி தேர்தல் பணியின்போது, முதலமைச்சர்கள் - அமைச்சர்கள் உள்ளிட்ட அரசியல் பிரமுகர்கள் அரசு விமானங்கள் - ஹெலிகாப்டர்களை பயன்படுத்த தடை விதிக்கப்படுவதாகவும், பதவியில் உள்ள பிரதமருக்கு மட்டும் அதில் இருந்து விலக்களிக்கப்படுவதாகவும் கூறப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக குறிப்பிட்டுள்ள திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி கோகலே, பாதுகாப்பு காரணங்களுக்காக மட்டுமே குண்டுதுளைக்காத வாகனங்களை பயன்படுத்தலாமே தவிர தேர்தல் பிரசாரத்திற்காக IAF ஹெலிகாப்டரை பயன்படுத்தக் கூடாது என குறிப்பிட்டுள்ளார்...
மக்களவைத் தேர்தல் நெருங்கும் நிலையில், அவ்வப்போது அரசியல் கட்சிகள் இவ்வாறு political stunt-ல் ஈடுபடுவது வழக்கம்தான் என்பது இதுபோன்ற சில சம்பவங்கள் உறுதிப்படுத்தியுள்ளன..
What's Your Reaction?