மோடி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் ஸ்டாலின் சிறை செல்வார்.. அதிரடியை கிளப்பும் அரவிந்த் கெஜ்ரிவால்

பிரதமர் மோடி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட எதிர்கட்சித் தலைவர்கள் பலர் அடுத்தடுத்து கைது செய்யப்படுவர் என டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். சிறையில் இருந்து ஜாமீனில் வெளிவந்த உடனேயே பரபரப்பை கிளப்பியுள்ளார் கெஜ்ரிவால்.

May 11, 2024 - 16:07
மோடி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் ஸ்டாலின் சிறை செல்வார்.. அதிரடியை கிளப்பும் அரவிந்த் கெஜ்ரிவால்

டெல்லியில் கடந்த 2021ம் ஆண்டு புதிய மதுபானக் கொள்கை அமல்படுத்தப்பட்டபோது ஊழல் நடந்ததாக பாஜக குற்றம்சாட்டியதைத் தொடர்ந்து, மணீஷ் சிசோடியா, சத்யேந்திர ஜெயின், சஞ்சய் சிங் ஆகிய ஆம்ஆத்மி தலைவர்கள் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டனர். தொடர்ந்து வழக்கு தொடர்பாக கடந்த மார்ச் 21ம் தேதி அமலாக்கத்துறையால் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டார். 

இந்தியா சுதந்திரம் பெற்றதற்குப் பின் ஒரு சிட்டிங் முதலமைச்சர் கைது செய்யப்பட்டது இதுவே முதல்முறையாம். மக்களவைத் தேர்தலையொட்டி பிரசாரத்தில் ஈடுபட ஜாமீன் கோரிய அனைத்து மனுக்களையும் டெல்லி உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்ததைத் தொடர்ந்து முதலமைச்சர் அலுவலகம் செல்லக்கூடாது உள்ளிட்ட 5 நிபந்தனைகளுடன் ஜூன் 1ம் தேதிவரை உச்சநீதிமன்றம் அவருக்கு ஜாமீன் வழங்கியது. தொடர்ந்து எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் சிறையில் இருந்து வெளியேறிய அவர், டெல்லி கன்னாட் பிளேசில் உள்ள அனுமான் கோயிலில் சாமிதரிசனம் செய்தபின் ஆம்ஆத்மி அலுவலகத்தில் கட்சித் தொண்டர்களிடையே உரையாற்றினார். 

அப்போது, 50 நாட்கள் சிறைவாசத்துக்குப்பின் உங்களை சந்திப்பது மிகுந்த மகிழ்ச்சியளிப்பதாகக் கூறினார். பிரதமர் மோடி ஆம்ஆத்மி ஆட்சியை நசுக்க விரும்பினாலும், இந்நாட்டிற்கு சிறந்த எதிர்காலத்தை கொடுக்கப் போவது அக்கட்சி தான் எனவும் அவர் தெரிவித்தார். ஊழலுக்கு எதிராகப் போராடுவதாகக் கூறும் பிரதமரின் கட்சியில்தான் அனைத்து திருடர்களும் உள்ளதாகவும் ஊழல் என தன்னால் குற்றம்சாட்டப்பட்டவரை பாஜகவில் இணைத்துக்கொண்டு முதலமைச்சர், துணை முதலமைச்சராக ஆக்கி அவர்களையும் ஊழல் செய்யவே வைப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். 

பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால், தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின், மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, கேரளா முதலமைச்சர் பினராயி விஜயன், பீகார் எதிர்கட்சித்தலைவர் தேஜஸ்வி யாதவ், சிவசேனா உத்தவ்தாக்கரே உள்ளிட்ட அனைவரும் சிறையில் இருப்பர் எனவும் அவர் கூறினார். குறிப்பாக இந்தத் தேர்தலில் யோகி ஆதித்யநாத் வெற்றிபெற்றால் 2 மாதத்தில் உத்தரப்பிரதேச முதலமைச்சரை மாற்றி விடுவர் எனவும் கெஜ்ரிவால் கூறினார்.  

தற்போது ஒரு சர்வாதிகாரிக்கு எதிராக போராடுவதாகக் கூறிய அவர், சர்வாதிகாரத்தில் இருந்து நாட்டை காக்கவே 21 நாட்கள் உச்சநீதிமன்றம் தனக்கு அவகாசம் வழங்கியுள்ளதாகவும் கெஜ்ரிவால் குறிப்பிட்டார். 

I.N.D.I.A கூட்டணிக்கு யார் பிரதமர் என பாஜகவினர் கேட்கின்றனர் - ஆனால் உங்களது பிரதமர் வேட்பாளர்தான் யாரெனத் தெரியவில்லை என அவர் கேள்வியெழுப்பினார். ஆனால் இந்தத் தேர்தலுடன் பிரதமர் மோடிக்கு ஓய்வளித்து விட்டு அமித்ஷாவுக்கு அப்பதவியை வழங்க பாஜக திட்டமிட்டு வருவதாகவும் 75 வயதாகும் பிரதமர் மோடி செப்டம்பர் 17ம் தேதியுடன் ஓய்வுபெறப் போவதாகவும் அவர் கூறினார்.

யோகி ஆதித்யநாத்தை அப்புறப்படுத்திவிட்டு, அமித்ஷாவை பிரதமராகும் திட்டம் பாஜகவுக்கு உள்ளதாகவும் கெஜ்ரிவால் கூறினார்.
ஹரியானா, ராஜஸ்தான், பீகார், உத்தரப்பிரதேசம், டெல்லி, கர்நாடகா, மேற்குவங்கம், ஜார்கண்ட் ஆகிய மாநிலங்களில் பாஜகவின் வெற்றிவாய்ப்பு குறைந்து வருவதாக அவர் தெரிவித்தார். ஆம்ஆத்மி வெற்றிபெற்றால் டெல்லிக்கு முழுமையான மாநில அந்தஸ்து வழங்கப்படும். நாடு சுதந்திரமடைந்த 75 ஆண்டுகளில் மிகப்பெரிய வாக்கு வித்தியாசத்தில் டெல்லியில் ஆம்ஆத்மி ஆட்சியை அமைத்ததாகவும் கெஜ்ரிவால் குறிப்பிட்டார். 

சிறையும் அரசும் வீழ்ந்துவிடும் - ஆனால் பாஜகவினர் வலையில் நாங்கள் வீழவில்லை எனவும் அவர் கூறினார். அரவிந்த் கெஜ்ரிவாலின் பேச்சுக்கு தொண்டர்கள் மிகுந்த உற்சாகத்தை வெளிப்படுத்தினர். இந்நிலையில் இன்று முதல் ஜூன் 1ம் தேதி வரை அரவிந்த் கெஜ்ரிவால் மக்களவைத் தேர்தலுக்கான சூறாவளிப் பிரசாரத்தில் ஈடுபடவுள்ளார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow