மக்களவைத் தேர்தல் 2 ஆம் கட்டம்... 89 தொகுதிகளில் இன்று மாலையுடன் ஓய்கிறது பிரசாரம்...

இரண்டாம் கட்ட மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாளை மறுநாள் (ஏப்ரல் 26) நடைபெற உள்ளதால் அதற்கான பிரசாரம் இன்று (ஏப்ரல் 24) மாலையுடன் நிறைவடைகிறது. 

Apr 24, 2024 - 09:18
மக்களவைத் தேர்தல் 2 ஆம் கட்டம்... 89 தொகுதிகளில் இன்று மாலையுடன் ஓய்கிறது பிரசாரம்...

நாடு முழுவதும் 7 கட்டங்களாக மக்களவைத் தேர்தலை இந்திய தேர்தல் ஆணையம் நடத்துகிறது. அதன்படி கடந்த 19ம் தேதி தமிழகத்தின் மொத்தம் உள்ள 39 தொகுதிகள் உட்பட 102 தொகுதிகளில் தேர்தல் நடைபெற்றது. தமிழகத்தில் 69.46% வாக்குகள் பதிவானதாக இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. 

இதை தொடர்ந்து அசாம், பீகார், சத்தீஸ்கர், கர்நாடகா, கேரளம், மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, உத்தரப் பிரதேசம், ராஜஸ்தான், மேற்கு வங்கம், திரிபுரா, மணிப்பூர், ஜம்மு-காஷ்மீரில் என மொத்தம் 13 மாநிலங்களில் உள்ள 89 தொகுதிகளுக்கு நாளை மறுநாள் (ஏப்ரல் 26) வாக்கப்பதிவு நடைபெற உள்ளது. 

இதில், கேரளாவின் அனைத்து தொகுதிகளிலும் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி வயநாட்டில் 2வது முறையாக போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் டி.ராஜாவின் மனைவி ஆனி ராஜா, பாஜகவின் மாநில தலைவர் கே. சுரேந்திரன் என அந்த தொகுதியில் மும்முனை போட்டி நிலவுகிறது. திருவனந்தபுரத்தில் காங்கிரஸ் சார்பில் முன்னாள் மத்திய அமைச்சர் சசிதரூரும், பாஜக சார்பில் மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகரும் போட்டியிடுகின்றனர். திருச்சூரில் பாஜக சார்பில் நடிகர் சுரேஷ் கோபி களம் காண்கிறார். 

மொத்தம் 28 தொகுதிகளைக் கொண்ட கர்நாடகாவில் 14 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. குறிப்பாக பெங்களூரு ரூரல், பெங்களூர் வடக்கு, பெங்களூர் சென்ட்ரல், பெங்களூரு தெற்கு, ஹாசன், மாண்டியா மற்றும் மைசூர் ஆகிய தொகுதிகளில் கடுமையான போட்டி நிலவுகிறது. பாஜகவின் தேஜஸ்வி சூர்யா, முன்னாள் முதலமைச்சர் எச்.டி.குமாரசாமி, டி.கே.சிவகுமாரின் சகோதரர் டி.கே.சுரேஷ், மைசூரு அரச பரம்பரையைச் சேர்ந்த யதுவீர் வாடியார் ஆகியோரின் போட்டியிடுகின்றனர். 

இதேபோல் ராஜஸ்தானில் இரண்டாம் கட்டமாக 12 இடங்களுக்கு தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் ஜோத்பூரில் போட்டியிடுகிறார். காங்கிரஸ் மூத்த தலைவர் அசோக் கெலாட்டின் மகன் வைபவ் கெலாட் ஜலோரிலும், மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கோட்டாவிலும் போட்டியிடுகிறார்.

மகாராஷ்டிரா மற்றும் உத்தர பிரதேசத்தில் தலா 8 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடக்கிறது. மதுரா தொகுதியில் பாஜக சார்பில் நடிகை ஹேமமாலினி களம் காண்கிறார். மேற்கு வங்கம், சத்தீஸ்கரில் தலா 3 தொகுதிகளிலும், பீகார், அசாமில் தலா  5 தொகுதிகளிலும் நாளை மறுநாள் வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

இதற்கான இறுதி கட்டப் பரப்புரை இன்று மாலையுடன் நிறைவடைவதால் அரசியல் கட்சித் தலைவர்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow