"விளைவுகள் வேண்டாம்னா, சொல்றத செய்யுங்க" SBI-ஐ மீண்டும் வறுத்தெடுத்த உச்சநீதிமன்றம்...

கூடுதல் சர்ச்சைகளைத் தவிர்க்க வேண்டுமெனில், எந்தக் கட்சி யாரிடம் இருந்து நன்கொடை பெற்றார்கள் என்ற சீரியல் எண் உள்ளிட்டு தேர்தல் பத்திரத்தின் அனைத்து விவரங்களையும் பாரத ஸ்டேட் வங்கி வெளியிட வேண்டுமென எச்சரிக்கையுடன் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Mar 18, 2024 - 12:42
Mar 18, 2024 - 13:16
"விளைவுகள் வேண்டாம்னா, சொல்றத செய்யுங்க" SBI-ஐ மீண்டும் வறுத்தெடுத்த உச்சநீதிமன்றம்...

உறுதிமொழிப் பத்திரம் போன்ற தேர்தல் பத்திரத்தை இந்தியாவின் எந்தக் குடிமகனும், நிறுவனமும் பாரத ஸ்டேட் வங்கியிடம் இருந்து பெற்று, தான் விரும்பும் அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை வழங்கும் திட்டத்தை மத்திய அரசு முன்னதாக அறிமுகப்படுத்தியது. இதனை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் தேர்தல் பத்திர நடைமுறை சட்டவிரோதம் எனக்கூறி ரத்துசெய்து, விவரங்களை SBI வெளியிட உத்தரவிட்டது. தொடர்ந்து வெளியிடப்பட்ட தகவல்கள் முழுமையற்று இருப்பதாக தொடர்ந்த வழக்கு, உச்சநீதிமன்றத்தில் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூத் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வில் விசாரணைக்கு வந்தது. 

அப்போது தகவல்களை இணையத்தில் வெளியிடும்போது புள்ளிவிவரங்கள் சமூகவலைதளங்களில் தவறாக திரிக்கப்பட்டு பல்வேறு பிரச்னைகள் எழக்கூடும் எனவும் அவமானகரமான பல பதிவுகளை பார்க்க முடிகிறது எனவும் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா தெரிவித்தார். தொடர்ந்து பதிலளித்த நீதிபதிகள், அனைத்து சமூகஊடக விமர்சனங்களையும் ஏற்க தாங்கள் கட்டுப்பட்டுள்ளதாகவும், உத்தரவை பின்பற்றுவது என்பது மட்டுமே தற்போது தேவையான ஒன்று எனவும் கூறினர்.

எந்தத் தகல்களை வெளியிட வேண்டும் என்ற நிலைபாட்டில் SBI-ன் அணுகுமுறை நியாயமானதாகத் தெரியவில்லை என தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூத் வருத்தம் தெரிவித்தார். SBI-ன்  செயல்பாடு எதுவும் நேர்மையாக இல்லை எனவும் அவர் கூறினார். தொடர்ந்து அரசியல் கட்சிகளுக்கு தனிநபர்கள், நிறுவனங்கள் வழங்கிய தேர்தல் பத்திர நிதி தொடர்பான அனைத்து தகவல்களையும் SBI வெளியிட வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர். கூடுதல் சர்ச்சைகளை தவிர்க்க வேண்டும் எனில், எந்தக் கட்சி யாருக்கு கொடுத்தார்கள் என்பதை விளக்கும் சீரியல் எண் உள்ளிட்டு SBI தன்னிடம் உள்ள அனைத்து தேர்தல் பத்திர விவரங்களையும் 21ம் தேதி மாலை 5 மணிக்குள் வெளியிட வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. அதனை இந்தியத் தேர்தல் ஆணையம் உடனடியாக இணையத்தில் வெளியிட வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டது. மேலும் கிடைக்கப்பெறும் தகவல்கள் எதுவும் மறைக்கப்படவில்லை என்று உறுதிமொழிப்பத்திரம் தாக்கல் செய்யுமாறு SBI சேர்மனுக்கும் உத்தரவிடப்பட்டது. தேர்தல் பத்திரம் அமல்படுத்தப்பட்ட 2019ம் ஆண்டு முதல் தற்போது வரை, எந்த சந்தேகமும் எழாத வண்ணம், எந்த விவரங்களையும் மறைக்காமல் SBI தகவல்களை அளிக்க வேண்டும் என மீண்டும் மீண்டும் நீதிபதிகள் தெளிவுபடுத்தினர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow